முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

வங்கிகளில் மொழி பிரச்சனை வராமல் இருக்க என்ன நடவடிக்கை?- மத்திய இணை அமைச்சர் விளக்கம்

தமிழ்நாட்டில் வங்கிகளில் மொழிப்பிரச்சனை ஏற்படாமல் இருக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது குறித்து மத்திய இணையமைச்சர் பகவத் காரத் விளக்கம் அளித்துள்ளார். திமுக எம்.பி.தமிழச்சி தங்கபாண்டியன் எழுப்பிய கேள்விக்கு அவர் இந்த பதிலை அளித்துள்ளார். 

ஒன்றிய அரசின் நேரடி நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பெரும்பாலான பொதுத் துறை வங்கிகள் 2023-2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் தனியார் மயமாகும் அல்லது அந்த வங்கிகளில் அரசின் முதலீடு விளக்கிக் கொள்ளப்படும் என்று வெளியாகியுள்ள தகவல் குறித்து மத்திய நிதி அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் என திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் மக்களவையில் இன்று கேள்வி எழுப்பினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அப்படி தனியார் மயமாகும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் அதன் விவரம் மற்றும் தமிழகத்தில் நகர்ப்புற மற்றும் கிராமப் பகுதிகளில் உள்ள அரசு பொதுத்துறை வங்கிகளின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு என்ற விவரத்தையும் தெரிவிக்க வேண்டும் என தமிழச்சி தங்க பாண்டியன் கோரியிருந்தார்.

தமிழகத்தில் குறிப்பாக கிராமப் பகுதிகளில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் தமிழ் மொழியறிவு பெற்றவர்களை நியமிக்க ஒன்றிய அரசு எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது? எனவும் தமிழச்சி தங்கபாண்டியன் கேள்வி எழுப்பியிருந்தார்.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பகவத் காரத், 2021- 22 ஆம் ஆண்டுக்கான ஒன்றிய நிதிநிலை அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தபோது, தனியார் முதலீடுகளை ஈர்ப்பதன் மூலம் அரசு பொதுத்துறை நிறுவனங்கள் வளர்ச்சியடையவும் அதன் மூலம் பொருளாதார வளர்ச்சிக்கு வழி வகுக்கவும் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவும்  வழி ஏற்படும் என்று கூறியதை சுட்டிக்காட்டி உள்ளார்.

ரிசர்வ் வங்கி அளித்த புள்ளி விவரங்களின்படி கடந்த 31-3-2022 தேதி வரை தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் அரசு பொதுத்துறை நிறுவன கிளைகளின் மொத்த எண்ணிக்கை 6,325 ஆகும் எனத் தெரிவித்துள்ள பகவத் காரத்,  இதில் ஊரகப் பகுதிகளில் செயல்பட்டு வரும் எண்ணிக்கை 1,871. நகர்ப் பகுதிகளில் இவற்றின் எண்ணிக்கை 886. பெருநகரங்கள் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இவற்றின் எண்ணிக்கை 3,478 எனத் தமது பதிலில் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கிராமப் பகுதிகளில் உள்ளிட்ட இடங்களில் அரசு வங்கிகளின் சேவைத்தரத்தை மேம்படுத்த ஒன்றிய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் விவரத்தையும் பகவத் காரத் பட்டியலிட்டுள்ளார். ஒவ்வொரு கிராமத்திலும் வங்கி சேவை கிடைக்க வேண்டும் என்பதற்காக ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவில் குறைந்தபட்சம் ஒரு வங்கி அல்லது வங்கிக் கிளையை அல்லது வங்கித் தொடர்பாளர் சேவை கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

முப்பெரும் திட்டம் (ஜே.ஏ.எம்.) என்று சொல்லக்கூடிய மக்கள் நிதி கணக்குகள் அனைத்தும் ஆதார் மற்றும் தொலைபேசி எண்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. வங்கிகளில் கணக்கு வைத்திருக்காமல் இருந்து வந்த மக்களுக்கு வங்கிச் சேவையை அளிப்பதற்கு இதன் மூலம் வழி வகுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு புதிதாக வங்கி வாடிக்கையாளர்களாக மாற்றப்பட்ட இவர்களுக்கு அரசின் மானிய உதவிகள் மற்றும் காப்பீட்டுத் திட்ட பயன்கள் கடன் வசதிகள் அனைத்தையும் நேரடி வங்கிக் கணக்குகள் மூலம் பெற வழியேற்பட்டுள்ளது என தமது பதிலில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் பகவத் காரத் கூறினார்.

அரசு பொதுத்துறை நிறுவனங்களை சீரமைப்பதற்காக, கடனுதவி மேலாண்மை முறைகள், அரசு பொதுத்துறை நிறுவனங்களின் கடனுதவி நடைமுறைக்கான தலைமை மையம், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான கடன் உதவி மின்னணு முறையில் செயல் திட்டம். உழைக்கும் தொழிலாளர்கள் மற்றும் தனி நபர்களுக்கு கடன் உதவி வழங்குவது,  அதற்கான நடைமுறைகளை மின்னணு முறையில் விரைந்து செயல்படுத்துவது போன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அரசு பொதுத்துறை வங்கிகளில் பணியாற்றும் அலுவலர்கள் அகில இந்திய அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். அவர்கள் இந்திய நாட்டின் எந்தப் பகுதிக்கும் பணி நிமித்தமாக இடமாற்றம் செய்யப்படுவார்கள் என்ற விதிகளின்படி பணி நியமனம் செய்யப்படுகிறார்கள். அவ்வாறு இடமாற்றம் செய்யப்படுவோர் தாங்கள் பணியாற்றும் பகுதிகளில் தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் வங்கி வாடிக்கையாளர்களுடன் தொடர்பு கொள்ள மொழி பயிலரங்குகளை சம்பந்தப்பட்ட வங்கிகள் ஏற்பாடு செய்து வருகின்றன என்று கூறியுள்ள அமைச்சர்,  வாடிக்கையாளர்களுக்கு தரமான சேவை அளிக்கவும் வங்கி சேவையை மேம்படுத்தவும் இத்திட்டம் உதவிகரமாக இருப்பதாக கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் வங்கி சேவைக்கு  மொழிப் பிரச்சனை ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளையும் கீழ்கண்டவாறு மத்திய நிதி இணை அமைச்சர் பகவத் காரத் பட்டியலிட்டுள்ளார்.

1. வங்கிகளின் அனைத்து கவுண்ட்டர்களிலும் ஹிந்தி மற்றும் ஆங்கிலம் அத்துடன் தமிழ் மொழிப் பலகைகள் வைக்கப்பட்டிருக்க வேண்டும்.
2. வங்கிச் சேவை தொடர்பான விவரங்கள் மற்றும் சேவைகள் அடங்கிய வசதிகள் குறித்த கையேடுகள் வைக்கப்பட்டிருக்க வேண்டும்.
3. வாடிக்கையாளர்களுக்குத் தேவையான வங்கிக் கணக்கு துவங்குவதற்கான விண்ணப்பங்கள், பாஸ் புத்தகங்கள் மற்றும் இதர விவரங்கள் அனைத்தும் தமிழ் உள்ளிட்ட மூன்று மொழிகளில் அச்சடித்து வைக்கப்பட்டிருக்க வேண்டும்.
4. குறை தீர்க்கும் விண்ணப்பங்கள் வாடிக்கையாளர்களுக்கு தமிழில் கிடைக்க வழிவகை செய்யப்பட்டிருக்க வேண்டும்.
5. தமிழகத்தில் உள்ள அனைத்து ஏடிஎம் மையங்களிலும் அதனைப் பயன்படுத்தும் வழிமுறைகள் தமிழில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
6. மொபைல் பேங்க், இன்டர்நெட் பேங்க் மற்றும் கால் சென்டர்கள் உள்ளிட்ட ஸ்மார்ட் பேங்க் வழிமுறைகள் அனைத்தும் உள்ளூர் மக்கள் பயன்படுத்தும் மொழியில் இருத்தல் வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாக திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் எழுப்பியுள்ள கேள்விக்கு மத்திய இணை அமைச்சர் பகவத் காரத் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சிறந்த விமான நிலையங்களின் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடம்

Web Editor

12ம் வகுப்பு தேர்வில் மாற்றுத்திறனாளி மாணவி சாதனை-சசிகலா பாராட்டு

G SaravanaKumar

நடிகர் விவேக் காலமானார்!

Gayathri Venkatesan