Threads என்ற புதிய செயலியை ஜூலை 6ஆம் தேதி அறிமுகப்படுத்துகிறது மெட்டா. ட்விட்டரில் எலான் மஸ்க் செய்யும் மாற்றங்களுக்கு விமர்சனங்கள் குவியும் நிலையில் புதிய செயலியை களம் இறக்கி சந்தையை பிடிக்க முயற்சி மேற்கொண்டுள்ளது.
ட்விட்டர் பக்கத்தில் அதன் பயனாளர்கள் ஒரு நாளைக்கு எத்தனை பதிவுகளை படிக்கலாம் என புதிய கட்டுப்பாடுகளை எலான் மஸ்க் அறிவித்துள்ளார். இது சமூக ஊடக பயன்பாட்டாளர்கள் மத்தியில் கடும் விமர்சனத்துக்கு ஆளாகி வருகிறது. அதோடு எலான் மஸ்க் கையில் அகப்பட்டு ட்விட்டர் படாதபாடு படுவதாகவும் விமர்சனங்கள் அதிகரித்துள்ளது. இந்நிலையில் Threads என்ற மைக்ரோ பிளாக்கிங் செயலியை அறிமுகப்படுத்த மெட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
மெட்டா நிறுவனம் ஏற்கனவே பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றுக்கு தாய் நிறுவனமாக திகழ்கிறது. இந்நிலையில் Threads செயலியை ஜூலை 6-ஆம் தேதி வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்ஸ்டாகிராம் பயனர்கள் இந்த செயலியிலும் தங்களுக்குப் பிரியமான கணக்குகளை பின்தொடரலாம் என்றும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இன்ஸ்டாகிராமில் உள்ள அதே பயனர் பெயரை (Username) வைத்திருக்கவும் அனுமதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
கணக்கு சரிபார்க்கப்பட்டிருக்க பட்டிருந்தால் மட்டுமே TweetDeck ஐப் பயன்படுத்த முடியும், ட்விட்டர் கணக்கு இல்லாமல் ட்வீட்களை பார்க்க முடியாது என பல்வேறு பயன்பாடுகளுக்கு ட்விட்டர் கட்டுப்பாடுகளை அறிவித்திருந்த நிலையில், மெட்டா நிறுவனம் தனது புதிய செயலியை அறிமுகம் செய்ய முனைவது குறிப்பிடத்தக்கது.
த்ரெட்ஸ் செயலி ஆப்பிள் நிறுவனத்தின் ஆப் ஸ்டோரில் இடம்பெற்றுள்ளது. கூகுள் ப்ளே ஸ்டோரில் இந்த செயலி எப்போது அறிமுகம் செய்யப்படும் என மெட்டா நிறுவனம் இதுவரை எந்த தகவலையும் வெளியிடவில்லை.







