நாடாளுமன்ற கூட்டத்தொடரிலிருந்து திரிணாமுல் எம்.பி நீக்கம்

குளிர்கால கூட்டத்தொடரில் மீதமுள்ள நாட்கள் முழுவதும் மாநிலங்களவையிலிருந்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி டெரிக் ஓ பிரையன் நீக்கப்பட்டுள்ளார். வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது உள்ளிட்ட அம்சங்களை உள்ளடக்கிய தேர்தல் சீர்திருத்த மசோதா…

குளிர்கால கூட்டத்தொடரில் மீதமுள்ள நாட்கள் முழுவதும் மாநிலங்களவையிலிருந்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி டெரிக் ஓ பிரையன் நீக்கப்பட்டுள்ளார்.

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது உள்ளிட்ட அம்சங்களை உள்ளடக்கிய தேர்தல் சீர்திருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நேற்று மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், மாநிலங்களவையிலும் இன்று நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதா மீதான விவாதத்தின் போது பேசிய திரிணாமுல் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் டெரிக் ஓ பிரையன், “மசோதாவை விவாதிக்க குறைந்தப்பட்டசம் இரண்டு நாட்களுக்கு முன்பாக அவை உறுப்பினர்களுக்கு அதன் நகல் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் நடந்தது என்னவென்றால், நேற்று மக்களவையிலும் இன்று மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. நிறைவேற்றப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு மட்டுமே நகல்கள் வழங்கப்பட்டுள்ளன.” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், இந்த விவாதத்தின்போது அவை சட்ட புத்தகத்தை தூக்கி எறிந்து வெளிநடப்பு செய்த காரணத்தினால் பிரையன் கூட்டத்தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவம்பர் மாத இறுதியில் தொடங்கப்பட்ட நிலையில், நாளையுடன் முடிவடைகிறது. இந்நிலையில் பிரையன் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து அவர் டிவிட்டரில் கூறியிருப்பதாவது, “கடந்த முறை புதிய வேளாண் சட்டங்களை அமல்படுத்த முயன்றபோது நான் சஸ்பெண்ட் செய்யப்பட்டேன். அதன் பின்னர் என்ன நடந்தது என்று அனைவருக்கும் தெரியும். தற்போது தேர்தல் சீர்திருத்த மசோதாவை அமல்படுத்த முயலும்போதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறேன். இந்த மசோதாவும் திரும்பப் பெறப்படும் எனும் நம்பிக்கையிருக்கிறது.” என்று கூறியுள்ளார்.

அவையிலிருந்து வெளியேறிய பின்னர், “இந்த அவையில் ஏற்பட்ட எதிர்ப்புகள் தணிக்கை செய்யப்பட்டுள்ளன. என்னுடைய எதிர்ப்பும், அவைத்தலைவரின் பேச்சும் மட்டுமே காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு அவை உறுப்பினர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.” என வீடியோவில் பேசி அதை டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

முன்னதாக மாநிலங்களவையின் எதிர்க்கட்சி தலைவரும் காங்கிரஸ் எம்.பியுமான மல்லிகா அர்ஜூனா கார்கே, மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைக்கு அனுப்ப வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அதேபோல ஆதார் அமைப்பில் பல்வேறு குறைகள் உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.