மங்கள்யான் பயணம் வெற்றி அடைந்ததற்கு காரணம் என்ன?- மயில்சாமி அண்ணாதுரை விளக்கம்

கல்வி மூலம்தான் உலகை பார்க்க முடியும் என்றும், என்ன படித்தோம் என்பதைவிட எப்படி படித்தோம் என்பதுதான் முக்கியம் என்றும் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.  சென்னை மேற்கு மாம்பலத்தில் கலைஞர் கணினி…

கல்வி மூலம்தான் உலகை பார்க்க முடியும் என்றும், என்ன படித்தோம் என்பதைவிட எப்படி படித்தோம் என்பதுதான் முக்கியம் என்றும் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். 

சென்னை மேற்கு மாம்பலத்தில் கலைஞர் கணினி கல்வியகத்தில், கணினி மூலம் டேலி பயின்ற மாணவ மாணவிகளுக்கான  பட்டமளிப்பு விழா மற்றும் கலைஞர் கணினி கல்வியகத்தின் 6 ஆம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்ரமணியன், இஸ்ரோ செயற்கைகோள் மையத்தின் முன்னாள் இயக்குனர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, இயக்குனரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய மயில்சாமி அண்ணாதுரை, கோதவாடி எனப்படும் குக்கிராமத்தில் பிறந்த தான் சிறு வயதில் சென்னையை பார்த்ததே இல்லை என்றார். தற்போது இந்தியாவையே தாம் பார்ப்பதற்கு மிக முக்கியக் காரணம் கல்விதான் என்றார்.  கல்வி மூலம் தான் உலகை பார்க்க முடியும் என்று எதிர் நீச்சல் போட்டு வந்த முதல் தலைமுறை பட்டதாரிகளில் தானும் ஒருவன் என்று மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.

என்ன படித்தோம் என்பதை விட எப்படி படித்தொம் என்பதுதான் முக்கியம் எனக் கூறிய மயில்சாமி அண்ணாதுரை, தாம் பள்ளிப் படிப்பை  படிக்கும் காலத்தில் செயற்கை கோளை  பற்றி  பாடப்புத்தகத்தில் இல்லை எனத் தெரிவித்தார். ஆனால் இன்று இந்தியாவின் செயற்கை கோள் பற்றி ஒரு புத்தகம் எழுதினால் அதில் தமது பெயர் நிச்சயம் எழுதப்படும் அளவிற்கு தமது கல்வி தம்மை உயர்த்தியிருப்பதாகவும் மயில்சாமி அண்ணாத்துரை  கூறினார். உலகத்தரம்வாய்ந்த  ராக்கெட் ஏவுதளம் தூத்துக்குடி மாவட்டம் குலசேகப்பட்டிணத்தில் வர இருப்பதாகக் கூறிய மயில்சாமி அண்ணாதுரை, கணினி, அறிவியல் படித்த இளைஞர்களுக்கு இதன் மூலம் அதிக வேலை வாய்ப்பு வரக்கூடும் என்றார். தமிழ்நாட்டு இளைஞர்கள் இதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

 மேலும் செவ்வாய் கிரகத்திற்கு முதல் முயற்சியிலேயே இந்தியா விண்கலத்தை அனுப்பியதற்கு முக்கிய காரணம் கிரக அமைப்புகளை சரியாக புரிந்துகொண்டு மங்கள்யான் திட்டத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் செயல்படுத்தியதுதான் என மயில்சாமி அண்ணாதுரை கூறினார். பூமியிலிருந்து புறப்பட்டு 9 மாதங்களில் துல்லியமாக செவ்வாய் கிரகத்தை மங்கள்யான் அடைந்தது என்றால், அதற்கு காரணம் இந்திய விஞ்ஞானிகளின் அறிவியல் திறமை, மற்றும்  கிரக அமைப்புகளை சரியாக கணித்ததுதான் என மயில்சாமி அண்ணாதுரை பெருமிதம் தெரிவித்தார்.

சமீபத்தில் வெளியான ராக்கெட்ரி படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில், மங்கள்யான் திட்டம் வெற்றி அடைந்ததற்கு பஞ்சாங்க கணிப்புகளும் முக்கிய உதவி புரிந்ததாக படத்தின் இயக்குனர் மாதவன் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை இது போன்ற விளக்கத்தை அளித்துள்ளார். எனினும் இந்திய ராக்கெட்டுக்களுக்கான விகாஸ் என்ஜின் உருவாக்கத்தில் முக்கிய அங்கம் வகித்த விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட ”ராக்கெட்ரி- நம்பி விளைவு”  படமல்ல வரலாற்று காவியம் என தமது டிவிட்டர் பக்கத்தில் ஏற்கனவே விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை புகழாரம் சூட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.