வளர்ச்சிப் பாதையில் நாடு செல்வதற்கு வழிகாட்டியாக இருப்பேன் என குடியரசுத் தலைவராக பதவியேற்ற பின் திரெளபதி முர்மு கூறியுள்ளார்.
நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இன்று நடந்த விழாவில் நாட்டின் 15வது குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு பதவியேற்றார். அவருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
பதவியேற்புக்குப் பின்னர் உரையாற்றிய குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, “எனது புதிய பொறுப்பை எதிர்கொள்ள என் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையும் ஆதரவும்தான் மிகப்பெரிய வலிமை. சுதந்திரத்திற்கு பிறகு பிறந்து குடியரசுத் தலைவர் பதவியை ஏற்கும் முதல் நபர் நான். இந்த நேரத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்களையும் நினைவுகூர்கிறேன்.
குடியரசுத் தலைவர் பதவியை எட்டியது எனது தனிப்பட்ட சாதனை அல்ல, இந்தியாவில் உள்ள ஒவ்வொரு ஏழையின் சாதனை. இந்தியாவில் உள்ள ஏழைகள் கனவு காண்பது மட்டுமின்றி, அந்த கனவுகளை நிறைவேற்றவும் முடியும் என்பதற்கு நான் தான் சான்று” என்று தெரிவித்தார்.
கல்வி கிடைப்பதே என் கனவாக இருந்தது என்ற அவர், “பழங்குடியினத்தை சேர்ந்த நான் குடியரசுத் தலைவரானது ஜனநாயகத்தின் தாயகமான இந்தியாவின் மகத்துவம். ஏழைகள், தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர் – என்னைத் தங்கள் பிரதிபலிப்பாக பார்க்கிறார்கள் என்பது எனக்கு திருப்தியாக உள்ளது. நான் குடியரசுத் தலைவரானதற்கு பின்னால் ஏழைகளின் ஆசீர்வாதம் உள்ளது, இது கோடிக்கணக்கான பெண்களின் கனவுகள் மற்றும் திறன்களின் பிரதிபலிப்பு. . இந்திய அரசியலமைப்பை பாதுகாக்க பாடுபடுவேன். குடியரசுத் தலைவர் பதவியை கவுரவிக்கும் வகையில் செயல்படுவேன்” என்று உரையை நிறைவு செய்தார்.







