“சிந்தனை செய் மனமே, சிவகாமி மகனை தினமும் சிந்தனை செய் மனமே”

சிவாஜியின் பாசமலர் முதல் எம்ஜிஆரின் ரகசிய போலீஸ் 115 வரை சின்ன சின்ன கதாபாத்திரங்களில் திரைப்படங்களில் நடித்தவர் கே.டி சந்தானம். நடிகர் மட்டுமல்ல காலத்தால் என்றும் மறக்க முடியாத சிந்தனை செய் மனமே என்ற…

சிவாஜியின் பாசமலர் முதல் எம்ஜிஆரின் ரகசிய போலீஸ் 115 வரை சின்ன சின்ன கதாபாத்திரங்களில் திரைப்படங்களில் நடித்தவர் கே.டி சந்தானம். நடிகர் மட்டுமல்ல காலத்தால் என்றும் மறக்க முடியாத சிந்தனை செய் மனமே என்ற பாடல் உட்பட பல்வேறு இனிய தெள்ளு தமிழ் பாடல்களை எழுதியவர். ஒரு சில திரைப்படங்களுக்கு உரையாடல்களும் எழுதி உள்ளார் நடிகர் சந்தானம்.

இளம் வயது கணேசனாக இருந்த நடிகர் திலகம் சிவாஜி, பழம்பெரும் நடிகரான காகா ராதாகிருஷ்ணன் இருவரும் மதுரையில் நாடகங்களில் நடிக்க அழைத்துச் செல்லப்பட்டபோது குருவாக நடிப்பை கற்றுத் தந்தவர் சந்தானம். தான் வைத்திருந்த பிரம்பை கண்டு சிவாஜி அச்சமடைந்ததாக அவ்வப்போது நினைவு கூறுவார் சந்தானம்.

1948 ஆம் ஆண்டு திரையுலகில் நுழைந்த சந்தானம் ஞான சௌந்தரி என்ற திரைப்படத்திற்கு பாடல் எழுதினார். 1954 ஆம் ஆண்டு கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி என்ற திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார். பாசமலர், பாலும் பழமும், கவலை இல்லாத மனிதன், ரகசிய போலீஸ் 115, சங்கே முழங்கு, ஆசைமுகம், காரைக்கால் அம்மையார், கலங்கரை விளக்கம், ராஜராஜ சோழன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர் சந்தானம்.

ஒன்றல்ல இரண்டல்ல ஏராளமான இனிமையான பாடல்களை எழுதியுள்ளார் சந்தானம். திரைப்பட பாடல்கள் என்றால் கண்ணதாசன் வாலி மட்டுமே நினைவுக்கு வரும் நிலையில் தெள்ளுதமிழ் வரிகளால் அனைவரையும் கவரும் பாடல்களை தந்துள்ளார். ஆடிப்பெருக்கு திரைப்படத்தில் அவர் எழுதிய காவேரி ஓரம் கரை சொன்ன பாடல் என்ற பாடல் இன்றளவும் ரீங்காரமிடுகிறது.

ஏ.பி நாகராஜன் இயக்கிய கண்காட்சி என்ற திரைப்படத்தில் ரதி மன்மதன் பாடும் பாடலான அரங்கன் அங்கஜன் என்ற பாடல் கற்பனைக்கு எட்டாத தமிழ் வரிகளை உள்ளடக்கி இருந்தது. ஒரு கட்டத்தில் நடிகராக பிரபலமாகிவிட்டதால் பின்னணி பாடல்கள் எழுதுவதை சுருக்கிக் கொண்டாலும் காலத்தால் அழியாத பாடல்களை தந்து நினைவில் நிற்கிறார் சந்தானம்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.