ஆஸ்திரேலியாவை அடித்து நொறுக்கிய இந்திய இளம் படை! தொடரையும் கைப்பற்றியது கே.எல்.ராகுல் தலைமையிலான அணி!

ஆஸ்திரேலியாவை அடித்து நொறுக்கிய இந்திய இளம் படை. 99 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரையும் கைப்பற்றியது கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணி. இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு…

ஆஸ்திரேலியாவை அடித்து நொறுக்கிய இந்திய இளம் படை. 99 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரையும் கைப்பற்றியது கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணி.

இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக பிரசித் கிருஷ்ணா இடம் பெற்றுள்ளார். ஆஸி அணியிலும் பல மாற்றங்கள் செய்திருந்தனர். அதன்படி ஸ்மித் (கேப்டன்), டேவிட் வார்னர், மேத்திவ் ஷார்ட், லபுஷேன், ஜோஸ் இங்கிலிஸ், கிரீன், ஆடம் ஜாம்பா, அலெக்ஸ் கைரி, சீன் அப்பாட், ஹேசல்வுட், ஸ்பென்சர் ஜான்சன் ஆகியோர் அணியில் இடம் பெற்றிருந்தனர்.

இந்திய அணியை பொறுத்தவரை கே.எல்.ராகுல் (கேப்டன்), ஷுப்மன் கில், ருதுராஜ், ஸ்ரேயாஷ் ஐயர், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஜடேஜா, அஸ்வின், ஷர்துல் தாக்குர், முகமது ஷமி, பிரசித் கிருஷ்ணா ஆகியோர் களம் இறங்குகின்றனர்.

இந்நிலையில் டாஸ்வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனை அடுத்து இந்திய அணி தரப்பில் ஓப்பன் பேட்ஸ்மேன்களாக ருதுராஜ் கெய்க்வாட்டும், சுப்மன் கில்லும் களம் இறங்கினர். இதில் ருதுராஜ் 12 பந்துகளை சந்தித்து 8 ரன்களை எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

இதனை அடுத்து சுப்மன் கில்லும் ஷ்ரேயாஷ் ஐயரும் பாட்னர்ஷிப் அமைத்து அடித்து ஆடினர். இந்நிலையில் சுப்மன் கில்லும், ஷ்ரேயாஸ் ஐயரும் அடுத்தடுத்த சதம் அடித்து அசத்தினர். தொடர்ந்து அடித்து ஆட முயன்ற நிலையில், தொடர்ச்சியாக இருவரும் ஆட்டமிழந்தனர். இருந்த போதும் இவர்களின் தொடக்கம் இந்திய அணிக்கு உத்வேகமாக அமைந்தது.

இவர்களை தொடர்ந்து களம் இறங்கிய கேப்டன் கே.எல்.ராகுலும் பொறுப்புடன் ஆடி அரை சதத்தை கடந்தார். இவருக்கு அடுத்தப்படியாக அதிரடியாக விளையாடிய சூர்யக்குமார் யாதவ் 37 பந்துகளில் 72 ரன்கள் குவித்தார். இறுதியாக இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 399 ரன்கள் குவித்தது.

இதனை அடுத்து 400 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி களம் இறங்கியது. தொடக்கம் முதலே அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் ரன்களை எடுக்க முடியாமல் தடுமாறினர். அந்த அணியை பொறுத்தவரை டேவிட் வார்னர், சீன் அப்பாட் ஆகிய இருவர் மட்டும் அரை சதத்தை கடந்தனர். மற்ற அனைவரும் சொற்ப ரன்களிலேயே பெவிலியன் திரும்பினர். இதனால் 28 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆஸ்திரேலிய அணி 217 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனிடையே ஆட்டத்தின் நடுவே மழையும் அடித்து ஆடியதால் இடையிடையே போட்டி நிறுத்தப்பட்டு நடத்தப்பட்டது. இறுதியாக டிஎல்எஸ் முறையின் அடிப்படையில் இந்தியா 99 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதன் வாயிலாக 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2 போட்டிகளை வென்றதன் மூலம் தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.