எம்பிக்களுக்கு வழங்கப்பட்ட அரசியலமைப்பு புதிய பிரதியில் சோசலிசம், மதச்சார்பின்மை ஆகிய வார்த்தைகளை நீக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரின் முதல் நாளில் பழைய நாடாளுமன்றக் கட்டடத்துக்குப் பிரியாவிடை அளிக்கும் வகையில், கடந்த 75 ஆண்டுகளில் நாடாளுமன்றம் கடந்து வந்த பாதைகள் குறித்த விவாதம் நடைபெற்றது. இதனையடுத்து, பழைய கட்டடத்தின் வளாகத்தில் மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்கள் இணைந்து குழுப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
தொடர்ந்து, பழைய நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று காலை நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் நாடாளுமன்ற அனுபவங்கள் குறித்து மூத்த உறுப்பினர்கள் பகிர்ந்து கொண்டனர். நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அதன்பிறகு பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சர்களும் உறுப்பினர்களும் புதிய நாடாளுமன்றத்துக்கு பேரணியாக சென்றனர். நாடாளுமன்ற அலுவல் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மத்திய அமைச்சர்கள் பியூஸ் கோயல், நிதின் கட்கரி உள்ளிட்டோர் பிரதமருடன் புதிய நாடாளுமன்றத்துக்கு அணிவகுத்து சென்றனர்.
இதேபோல மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தலைமையில் ராகுல் காந்தி, கவுரவ் கோகாய் உள்ளிட்ட காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் புதிய நாடாளுமன்ற கட்டத்துக்கு சென்றனர். அப்போது ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இந்திய அரசியல் சட்ட புத்தகத்தை எடுத்துச் சென்றார். புதிய நாடாளுமன்றத்தில் எம்பிக்களுக்கு அரசியலமைப்பு புத்தகங்கள் வழங்கப்பட்டன. அவற்றின் முகவுரையில் “சோசலிஷம், மதச்சார்பின்மை” போன்ற வார்த்தைகள் இடம்பெறவில்லை. இதனையடுத்து காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் செளத்ரி தெரிவித்ததாவது..

”எங்களுக்கு வழங்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்தின் புதிய பிரதிகளில் சோசலிசம், மதச்சார்பின்மை ஆகிய இரண்டு வார்த்தைகள் இல்லை; இது நமது அரசியலமைப்பை மாற்றுவதற்கான திட்டமிட்ட முயற்சியை காட்டுகிறது. இது குறித்து அவர்களிடம் கேட்ட போது பழைய அரசியலமைப்பின் வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளோம் என தெரிவித்தனர். அரசியல் அமைப்பு சட்டத்தின் ஆரம்ப கால முகவுரையில் என்ன இருந்ததோ அதனை அப்படியே இப்புத்தகத்தில் அச்சிட்டுவிட்டதாக மேக்வால் தெரிவித்ததாக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி குறிப்பிட்டுள்ளார்.







