முஸ்லீம் மக்கள்தொகை கடந்த 60 ஆண்டுகளில் 15% அதிகரித்து இருந்த போதும் எம்பிக்களின் எண்ணிக்கை அதற்கேற்ப உயரவில்லை என கூறுகிறது PEW ஆய்வறிக்கை…
முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கை கொண்ட மாநிலங்களில் ஒரு முஸ்லிம் MPக்கள் கூட இல்லை என்பது எதை உணர்த்துக்கிறது? மக்களவையில் தொடர்ந்து குறைந்துவரும் முஸ்லிம் MPக்களின் எண்ணிக்கைக்கு காரணம் என்ன? என்பதை சொல் தெரிந்து சொல் பகுதியில் விரிவாக பார்க்கலாம்…..
இந்திய ஜனநாயகத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரு அவைகள் உள்ளன. இதில் மக்களவையில் 543 இடங்களும், மாநிலங்களவையில் 245 இடங்கள் என மொத்தம் 788 இடங்கள் இருக்கின்றன. ஆனால் தற்போது இந்த 788 இடங்களில், நாட்டின் மக்கள் தொகைக்கு ஏற்ப முஸ்லிம் MPக்களின் எண்ணிக்கை இல்லை என PEW ஆய்வறிக்கை அண்மையில் தெரிவித்திருக்கிறது.
குறையும் முஸ்லிம் MPக்கள் எண்ணிக்கை:
1951-ல் நாட்டில் முஸ்லிம்களின் மக்கள்தொகை சுமார் 10% ஆக இருந்த நிலையில், 2011-ல் 14% ஆகவும், அதற்கு பிறகு 2020-ல் 15% ஆகவும் அதிகரித்து உள்ளது. ஆனால் அதிகரித்து வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப முஸ்லிம் எம்பிகளின் எண்ணிக்கை உயர இல்லை என்பது தான் இப்போதைய விவாத பொருளாக மாறி இருக்கு.
1980-களில் அதிகப்பட்சமாக 49 முஸ்லிம் MPக்கள் மக்களவையில் இருந்தனர். ஆனால் 1990-களுக்கு பிறகு கட்சி பேதமின்றி முஸ்லிம் MPக்கள் எண்ணிக்கை தொடர் சரிவை சந்தித்துள்ளது. குறிப்பாக கடந்த 15 ஆண்டுகளில் அது பெருமளவில் குறைந்து உள்ளது.
கடந்த 2014 மற்றும் 2019 நாடாளுமன்ற தேர்தல்களில் மோடி தலைமையிலான பாஜக, அதன் கூட்டணிக் கட்சிகளுடன் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க முடிந்தாலும், அக் கட்சியின் சார்பில் முஸ்லீம் வேட்பாளர் யாரும் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்படவில்லை.
பாஜகவில் முஸ்லிம் MPக்களே இல்லை:
அதாவது, கடந்த இருமுறையும் மக்களவைத் தேர்தல்களில் பாஜக சார்பில் போட்டியிட்ட எந்த முஸ்லிம் வேட்பாளரும் வெற்றி பெறவில்லை. அதேபோல மற்றொருபுறம் 1970, 1980-களில் காங்கிரஸ் சார்பில் 7.5% இருந்த முஸ்லிம் MPகள் தற்போது 1.1% ஆக குறைந்து இருப்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மொத்தம் எத்தனை MPக்கள் ?
இந்த நிலையில் பாஜக மற்றும் காங்கிரஸ் தவிர்த்து நம்ம பார்த்தோம் என்றால், சமீப ஆண்டுகளில் மற்ற சில கட்சிகள் முஸ்லிம்களை மக்களவைக்கு அனுப்பி உள்ளன. குறிப்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் 5 பேரும், தேசிய மாநாடு கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி ஆகிய கட்சிகளின் சார்பில் தலா 3 பேரும், AIMIM சார்பில் 2 பேரும், தேசியவாத காங்கிரஸ், மார்க்சிஸ்ட், அசாமில் செயல்பட்டு வரும் AIUDF, லோக் ஜன சக்தி ஆகிய கட்சிகள் சார்பில் தலா ஒருவர் என தற்போது மக்களவையில் மொத்தம் 27 முஸ்லிம் எம்பிக்கள் உள்ளனர்.
15% க்கும் அதிகமான முஸ்லிம் மக்கள்தொகை கொண்ட கேரளா, அசாம், ஜம்மு & காஷ்மீர், பீகார் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் முஸ்லிம் MP-களின் எண்ணிக்கை அப்படியே தொடர்கின்றன. ஆனால் ஜார்க்காண்டில் தொடர்ந்து 4 முறையும் ஒரே ஒரு முஸ்லிம் எம்பி மட்டுமே மக்களவைக்கு சென்று இருக்கிறார்.
அதுமட்டுமல்ல உத்தரப்பிரதேசத்தில், 1980களில் 18% ஆக இருந்த முஸ்லிம் எம்பிக்கள், 2014ல் 1% ஆகக் குறைந்து இருக்கு.
ஒரு MP கூட இல்லை!
அதேபோல முஸ்லிம்கள் 10 சதவீத்திற்கும் அதிகமாக இருக்கும் மாநிலங்களான கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து ஒரு முஸ்லிம் கூட எம்பியாக நாடாளுமன்றத்திற்கு செல்லவில்லை.
– வசந்தி
இந்த முழு செய்தியை காணொளியாக காண…








