நாளை வெளியாகிறது #SK25 படத்தின் முக்கிய அப்டேட்!

SK 25 படத்தின் முக்கிய அப்டேட் நாளை வெளியாகிறது.

ரஜினிகாந்த், விஜய்க்கு பிறகு ஆறிலிருந்து அறுபது வரை அனைத்து தரப்பு ரசிகர்களையும் தன்பக்கம் ஈர்த்து வைத்திருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் வீடியோ ஜாக்கி, தொகுப்பாளர் என வளர்ந்து வந்த அவர் தனுஷின் 3 படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து மெரினா, எதிர்நீச்சல் என தனது திறமையான மற்றும் நகைச்சுவை கலந்த நடிப்பால் தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத நடிகராக வலம் வருகிறார்.

இவர் நடிப்பில் கடைசியாக வெளியான அமரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அமரன் படத்தை முடித்தபின் இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸின் படமொன்றில் நடித்து வருகிறார். எஸ்கே – 23 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அடுத்ததாக சிபி சக்கரவர்த்தியின் இயக்கத்தில் 24-வது படத்தில் நடிக்க உள்ளார். இதற்கிடையில் இவர் ‘சூரரைப் போற்று’ படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கத்தில் எஸ்கே 25 எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இப்படம் இந்தி திணிப்பு தொடர்பான கதைக்களத்தில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் ரவி, ஸ்ரீலீலா, அதர்வா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவராக நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது. இப்படத்திற்கு ‘பராசக்தி’ என்று பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், ‘எஸ்கே 25’ திரைப்படத்தின் அப்டேட் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.