“வரலாற்றுப் புத்தகம்தான் தவறு… ஜோதா அக்பர் திருமணம் என்பது ஒரு பொய்” – ராஜஸ்தான் ஆளுநர்!

அக்பர் – ஜோதா திருமணம் என்பது ஒரு சித்தரிக்கப்பட்ட கதை என ராஜஸ்தான் ஆளுநர் ஹரிபாவ் பகடே கூறியுள்ளார்.

முகலாயப் பேரரசர் அக்பருக்கும், ராஜபுத்திர இளவரசி ஜோதா பாய்க்கும் இடையில் நடைபெற்ற திருமணம் ஒரு சித்தரிக்கப்பட்ட கதை என்று ராஜஸ்தான் ஆளுநர் ஹரிபாவ் பகடே கூறியுள்ளார். இவர்களின் திருமணம் என்பது பிரிட்டிஷாரால் திரிக்கப்பட்ட கதை என்றும், அவ்வாறு எந்த தகவலும் அக்பர்நாமாவில் குறிப்பிடப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

உதய்பூரில் நடந்த ஒரு பொது நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஹரிபாவ்,

“ஜோதாவும், அக்பரும் திருமணம் செய்துகொண்டதாக கூறுகின்றனர். அவர்களின் கதையை படமாகவும் எடுத்துள்ளனர்(ஹ்ரித்திக் ரோஷன், ஐஸ்வர்யா ராய் நடித்த ஜோதா அக்பர்). வரலாற்றுப் புத்தங்களும் அதையே கூறுகின்றன. ஆனால் அது உண்மையல்ல. அது ஒரு பொய். பர்மல் என்ற ஒரு மன்னர் இருந்தார், அவர் ஒரு வேலைக்காரியின் மகளை அக்பருக்கு திருமணம் செய்து வைத்தார்.

ஆங்கிலேயர்கள் நமது ராஜாக்களின் வரலாற்றை மாற்றினர். அவர்கள் அதை முறையாக எழுதவில்லை, அவர்களின் வரலாற்றின் பதிப்பு ஆரம்பத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பின்னர், சில இந்தியர்கள் வரலாற்றை எழுதினார்கள், ஆனால் இன்னும் ஆங்கிலேயர்கள் காலத்தில் எழுதப்பட்டவையே பெரிதாக அறியப்படுகின்றன.

மகாராணா பிரதாப் தனது சுயமரியாதையை ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளவில்லை. வரலாற்றில், அக்பரைப் பற்றி அதிகமாகவும், மகாராணா பிரதாப்பைப் பற்றி குறைவாகவே கற்பிக்கப்படுகிறது” என தெரிவித்தார்.

அக்பர்நாமா

அக்பர்நாமா என்பது பேரரசர் அக்பர் வாழ்க்கையைக் கூறும் நூல். இந்த நூலை எழுதியவர் அபுல் ஃபசல் ஆவார். இந்நூல் முகலாயர்களின் மொழியாக அறியப்பட்ட பாரசீக மொழியில் எழுதப்பட்டுள்ளது. இதில் இரண்டு பெரும் பாகங்கள் உள்ளன.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.