பென் ஸ்டோக்ஸ் காயம் கிட்டத்தட்ட குணமடைந்து விட்டது. வருகிற ஏப்ரல் 30ஆம் தேதி பிளேயிங் லெவனுக்குள் வந்துவிடுவார் என எதிர்பார்க்கலாம் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விசுவநாதன் தெரிவித்துள்ளார்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று முந்தினம் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இந்த
போட்டியில் முதலில் பேட்டிங் தேர்வு செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 175 ரன்களை
குவித்தது. பின்னர் 176 ரன்கள் வெற்றி இலக்கை கொண்டு களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 172 ரன்கள் எடுத்து, 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த சிஎஸ்கே ரசிகர்கள், “இந்த போட்டியில் தோனி அடித்த இரண்டு சிக்சர் சிறப்பாக இருந்தது. ருத்ராஜ் பேட்டிங் சரியாக இருந்திருந்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றிருக்கும். சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்விக்கு காரணம் ருத்ராஜ் தான்.
176 ரன்கள் என்பது ஒரு சாதாரண இலக்கு தான். பேட்டிங் முறையாக இருந்திருந்தால்
சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றிருக்கும். முதல் ஆறு ஒவர்களில், போட்டி சரியாக நடைபெற்றது. பிறகு தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்ததால் சென்னை அணி தோல்வி பக்கம் சாய்ந்தது. ஒவ்வொரு பந்திற்கும் சென்னை அணி தோற்குமா, வெற்றி பெறுமா என்று பதற்றத்தில் தான் இருந்தோம்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே விளையாடுவது ஒரு நல்ல நினைவு. அடுத்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெறும் என்று நம்புகிறோம். இந்த போட்டியில் தோனி 38 ரன்கள் எடுத்தும், தோல்வி அடைந்தது மிகவும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இறுதி கட்டத்தில் தோனி – ஜடேஜா பார்ட்னர்ஷிப் சிறப்பாக இருந்தது.
தோனியை பார்த்ததும், தோனியின் சிக்சரை பார்த்ததும் எங்களுக்கு மனநிறைவாக
உள்ளது. சிஎஸ்கே அணியின் பந்துவீச்சை இன்னும் மேம்படுத்த வேண்டும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்த போட்டியில் இன்னும் அதிக ரன்கள் குவிக்க வாய்ப்புள்ளது” என்று கூறினர்.
ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்னரே பல்வேறு அணிகளில் இருந்த பல வீரர்கள் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகினர். அந்த வகையில், சிஎஸ்கேவின் வேகப்பந்துவீச்சாளர் முகேஷ் சௌத்ரியும் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக ஆகாஷ் சிங் என்பவர் அணிக்குள் கொண்டுவரப்பட்டார். அதற்கு முன்னதாக, நியூசிலாந்து வீரர் கைல் ஜேமீசனும் காயம் காரணமாக விலக தென்னாப்பிரிக்க வீரர் சிசாண்டா மகாலாவை அணிக்குள் கொண்டு வந்தனர்.
காலில் காயம் ஏற்பட்டு ஐபிஎல் போட்டிகளில் விளையாட முடியாமல் அவதிப்பட்டு வரும் பென் ஸ்டோக்ஸ், கிட்டத்தட்ட ஒரு மாதகாலம் விளையாடமாட்டார் கூறப்பட்டது. மீண்டும் எப்போது அணிக்கு திரும்புவார் என்று பலரும் கேள்விகள் எழுப்பிவந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விசுவநாதன் சமீபத்தில் அளித்த பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர், பென் ஸ்டோக்ஸ் காயம் கிட்டத்தட்ட குணமடைந்து விட்டது. ஆனால் அவரை வைத்து ரிஸ்க் எடுக்க முடியாது. இறுதிக்கட்ட லீக் போட்டிகள் மற்றும் பிளே-ஆப் போட்டிகளுக்கு மிக முக்கியமான வீரர் அவர். அதிகபட்சமாக வருகிற ஏப்ரல் 30ஆம் தேதி பிளேயிங் லெவனுக்குள் வந்துவிடுவார் என எதிர்பார்க்கலாம்.” என்று அப்டேட் கொடுத்தார். மேலும், தோனி காலில் சிறுசிறு பிரச்சனைகள் தான். அடுத்த போட்டிக்குள் அவர் சரியாகி விளையாடுவார். சந்தேகமே வேண்டாம்” என்றும் கூறினார்.







