உலகமே உற்று நோக்கி கொண்டிருக்கும் சந்திரயான் 3 விண்கலம் நாளை விண்ணில் ஏவப்பட உள்ள நிலையில், அதற்கு முன் அனுப்பப்பட்ட சந்திரயான் 2 தோல்வி அடைந்ததற்கான காரணங்கள் என்ன என்பது குறித்து சற்று விரிவாக பார்க்கலாம்…
இந்தியாவின் நிலவை நோக்கிய பயணம் என்ற லட்சிய திட்டத்தின் ஒரு பகுதியான சந்திரயான் 2 முழுக்க முழுக்க இந்திய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டது. 978 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட சந்திரயான் 2 விண்கலம், 2019ஆம் ஆண்டு ஜூலை 22ம் தேதி பிற்பகல் 2.43 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது.
நிலவின் சுற்றுவட்டப் பாதையில் சுற்றி வரும் கலன், மேற்பரப்பில் தரையிறங்கும் கலன், அதில் இருந்து வெளியேறும் ரோவர் என மூன்று கலன்களை உள்ளடக்கியிருந்தது. நிலவை ஆய்வு செய்யும் அதிநவீன தொழில்நுட்ப வசதி கொண்ட கேமிராவின் மூலம் புகைப்படங்களை எடுத்து அனுப்பும் என இஸ்ரோவால் கணிக்கப்பட்டது.
23 நாட்கள் பயணம் செய்த சந்திரயான் 2 ஆகஸ்ட் 20ம் தேதி நிலவின் சுற்றுப்பாதையில் நுழைந்து நிலவை படம் பிடித்தும் அனுப்பியது. 2019ம் ஆண்டு செப்டம்பர் 2 ஆம் தேதி ஆர்பிட்டரில் இருந்து லேண்டர் தனியாக பிரிந்து தரையிறங்க தொடங்கியது.
நிலவில் இருந்து 2.1 கிலோ மீட்டர் தொலைவு வரை திட்டமிட்டபடி தரையிறங்கி வந்த லேண்டரின் தகவல் அதற்கு பின் கிடைக்கவில்லை. நிலவுக்கு அருகே சென்ற லேண்டர் பாதை மாறியதாகவும், அதன் வேகமும் கட்டுப்பாட்டை இழந்ததாகவும் அறிவிக்கப்பட்டது.
லேண்டர் செயலிழந்தாலும் ஆர்பிட்டர் நிலவை வெற்றிகரமாக சுற்றி வருவதாகவும் அது நிலவைச் சுற்றி பல்வேறு புகைப்படங்களை எடுத்து அனுப்பும் என சொல்லப்பட்டுள்ளது. நிலவுக்கு வெற்றிகரமாக சென்ற அனைத்து செயற்கை கோள்களும் வட துருவத்தில் மட்டுமே தடம் பதித்த நிலையில் சந்திரயான் 2 மட்டும் தென் துருவத்திற்கு சென்றது சாதனை என பெருமிதம் கொள்ளப்படுகிறது.







