நாகர்கோவில் அருகே டீ கடையில் சமையல் எரிவாயு திடீரென வெடித்து தீ விபத்து ஏற்பட்டதில் 8-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பார்வதிபுரம் சந்திப்பில் டீ கடை ஒன்று உள்ளது. இன்று காலையில் அப்பகுதியை சேர்ந்தவர்கள் சிலர் இங்கு டீ குடித்து கொண்டிருந்தனர். இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், நடைப்பயிற்சி மேற்கொண்டவர்கள் மற்றும் சந்தைகளுக்கு வருபவர்கள் டீ கடையில் நின்று டீ குடித்து சென்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும் சிலர் அங்கு இருந்த செய்தித்தாள்களை வாசித்து கொண்டே டீ கடையில் நின்று பேசி கொண்டிருந்தனர். அப்போது, யாரும் எதிர்பாராத நேரத்தில் டீ கடையில் இருந்த சமையல் எரிவாயு (சிலிண்டர்) திடீரென வெடித்து சிதறியது. இதில், கடையில் தீ விபத்து ஏற்பட்டது.
தீ விபத்தில் டீ கடையின் உரிமையாளர், கடையில் வேலை செய்யும் ஊழியர்கள் மற்றும் டீ குடிக்க வந்தவர்கள் உட்பட 8 பேர் பலத்த படுகாயமடைந்தனர். உடனே அருகில் இருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு இரண்டு பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து வடசேரி காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது, வடை போட்டு எடுத்த பாத்திரத்தை சூடு ஆறுவதற்கு முன்பே சமையல் எரிவாயு மீது வைத்திருந்ததால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததுள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
– இரா.நம்பிராஜன்