1800-ம் ஆண்டு காலக்கட்டங்களில் இருந்த பிரிட்டன் நாட்டின் சமூக அமைப்பையும், திருமண அமைப்பையும் பிணைத்து சுவாரஸ்யமான காதல் கதைகளாக கொடுத்திருக்கும் ஆங்கிலத் தொடர் ‘பிரிட்ஜர்டன்’. இந்த தொடரின் 3வது பாகத்தின் முதல் 4 எபிசோடுகள் கடந்த மே 16ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. அதிலிருந்து இணையத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது இந்த பிரிட்ஜர்டன் தொடர்!
பழங்கால காதல் கதைகளை இந்த தலைமுறை விரும்பும் அளவிற்கு அப்படி என்ன இருக்கிறது இந்த தொடரில்? பல பிற்போக்குத் தனமான நிகழ்வுகள் இருந்தும் கூட, பிரிட்ஜர்டன் மற்ற வரலாற்று புனைவு தொடர்களிலிருந்து தனித்து தெரிவது ஏன்? இந்த கட்டுரையில் பார்க்கலாம்..
பிரிட்ஜர்டன் தொடர் ஜூலியா க்வின் என்னும் பெண் எழுத்தாளரால் 8 நாவல்களாக எழுதப்பட்டது. இந்த வரலாற்று கதைகள் பிரிட்ஜர்டன் என்னும் புனைவு குடும்பத்தின் உறுப்பினர்களை மையமாக கொண்டு எழுதப்பட்டது. சகோதர, சகோதரிகள் 8 பேரின் காதல் கதைகளையே 8 நாவல்களாக பிரித்து எழுதினார் ஜூலியா. 1800களில் வாழ்ந்த உயர் வகுப்பு மக்களின் பழக்க வழக்கங்கள், ஆணுக்காக கட்டமைக்கப்பட்ட சமூகத்தில் பெண்கள் தங்களுக்கான துணையை தேர்ந்தெடுக்கும் சாமர்த்தியம், காதல் கதைகளால் வரும் குழப்பங்கள், ‘விசில்டவுன்’ என்னும் அடையாளம் தெரியாத எழுத்தாளரின் கிசு கிசு இதழ் ஆகியவையே வாசகர்களிடம் இந்த நாவல்களுக்கு பெறும் வரவேற்பை பெற்றுத் தந்தது.
இதன் வரவேற்பைக் கண்ட புகழ்பெற்ற ஷோண்டாலேண்ட் என்ற அமெரிக்க தயாரிப்பு நிறுவனம், இந்த நாவல்களை நெட்ஃபிளிக்ஸ் தளத்திற்கு தொடர் கதையாக எடுத்துக் கொடுக்க ஒப்பந்தமானது. 2020ஆம் ஆண்டு வெளியான பிரிட்ஜர்டன் முதல் சீசன் பெரும் வரவேற்பை பெற, அதே வேகத்தோடு அடுத்த சீசனும் 2022ஆம் வெளியாகி பெரும் ஹிட் அடித்தது. இணையதளம் முழுக்க இரண்டாம் சீசனின் காதல் கதையே பரவிக் கடக்க, சீசன் மூன்று மற்றும் நான்கு அதிகாரப்பூர்வமாக கையெழுத்தாகின. சரி பிரிட்ஜர்டன் கதைக்கு வருவோம்!
எட்மண்ட் பிரிட்ஜர்டன் மற்றும் வைலட் பிரிட்ஜர்டனின் தம்பதிக்கு 8 குழந்தைகள். ‘வைகவுண்ட்’ என்னும் மிகப்பெரிய பதவியில் உள்ள எட்மண்ட் மரணமடைய, குடும்ப பதவியான வைகவுண்ட், மூத்த மகனான ஆண்டனி பிரிட்ஜர்டனிடம் வருகிறது. முதல் சீசனில் ஆண்டனியின் தங்கையான டேஃப்னி-க்கு திருமண வயது வந்ததும், திருமண சந்தையில் அந்நாட்டு ராணியின் முன்பு அறிமுகப்படுத்தப்படுகிறார். இந்த திருமன சந்தையும், அதில் திருமண வயதை எட்டிய பெண்களை ராணி முன்பு அறிமுகப்படுத்தும் நிகழ்வு ஒரு குறிப்பிட்ட சீசனில் மட்டும் நடைபெறுகிறது. திருமணமாகாத ஆண்களும் இந்த நிகழ்வுகளில் பங்கேற்று, அவர்களுடன் நடனமாடியும் பேசி பழகியும் தங்களின் துணையை தேர்வு செய்கிறார்கள். மிகவும் அழகான பெண்களுக்கு போட்டி போடுவது, அழகு குறைவானவர்களையும், வயது முதிர்ந்த பெண்களையும் அவமதிப்பது, பெண்ணை தனக்கான வாரிசை பெற்றுத் தரும் ஒரு கருவியாக பார்ப்பது என ஆண்களின் வசதிக்காக கட்டமைக்கப்பட்ட உயர் வகுப்பு ஆங்கில சமூகமாகவே அந்த முடியாட்சி காலம் இருந்துள்ளது.
இப்படியொரு கதைக்களம் கொண்ட ‘The Duke and I’ நாவல் முதலாம் பாகமாக வெளியானது. இதில் டேஃப்னி மற்றும் சைமன் பேஸ்ஸட் எனும் Dukeன் காதல் கதை 8 எபிசோடுகளாக படமாக்கப்பட்டது. ‘Duke’ என்பது அரசனுக்கு அடுத்த பதவியை குறிக்கிறது. 2ம் நாவலான ‘The Viscount Who Loved Me’, நெட்ஃப்ளிக்ஸில் ஆண்டனி பிரிட்ஜர்டன் மற்றும் கேட் சர்மாவுக்கு இடையில் நடைபெறும் காதல் போரட்டமாக 2வது பாகமாக வெளியாகி சக்கைப்போடு போட்டது. இந்த தொடரில் கிடைத்த வரவேற்பை வைத்து 3வது பாகமாக ஜூலியாவின் 4வது நாவலான ‘Romancing Mr. Bridgerton’ தேர்வு செய்யப்பட்டு, முதல் 4 எபிசோடுகள் கடந்த மே 16ம் தேதி ஓடிடி தளத்தில் உலகம் முழுக்க வெளியானது.
இதுவரை வெளியான பிரிட்ஜர்டன் தொடர்களிலேயே கதாநாயகியை பெரிதளவு மையப்படுத்தி எடுக்கப்பட்ட பாகம் இதுவே!. இந்த 3வது பாகத்தை நாயகன் காலின் பிரிட்ஜர்டனை காட்டிலும் நாயகி பெனாலபி ஃபெதரிங்டனே தாங்கி பிடிக்கிறார். பிரிட்ஜர்டன் குடும்பமும் ஃபெதரிங்டன் குடும்பமும் அண்டை வீட்டார் என்பதால், புத்தகப் பிரியர்களான எலோயிஸ் பிரிட்ஜர்டன் மற்றும் பெனாலபி உயிர் தோழிகளாக வளர்கின்றனர். இந்த பழங்கால சமூகத்தின் பிற்போக்குத்தனமானது, இந்த தோழிகளின் உரையாடல்கள் வழியே நமக்கு காட்டப்படுகிறது. பெனாலபி பருமனான தோற்றம் கொண்டவர் என்பதால், முதல் சீசன் முதலே உருவகேலிக்கு உள்ளாக்கப்படுகிறார். பெரும்பாலும் அந்த சமூகமும், அவரது வயது ஒத்த பெண்களும் அவரை ஒதுக்கியே வைக்கின்றனர். எலோயிஸ் மற்றும் காலின் மட்டுமே அவரது நன்பர்களாக இருக்கின்றனர். தன்னை சக மனுஷியாக மதிக்கும் எலோயிஸ், காலின் மற்றும் தனது புத்தக உலகமுமே பெனாலிபியின் அனைத்துமாக இருக்கிறது.
லேடி விசில்டவுனின் கிசு கிசுக்கள் பல குழப்பங்களை உண்டாக்கி கதையை நகர்த்தி செல்கின்றன. சீசன் 2ன் முடிவில் பெனாலிபி மற்றும் எலோயிஸ் இடையே நிகழும் மனக்கசப்பிற்கும் லேடி விசில்டவுனே காரணமாகிறார். மேலும் ஒரு விருந்தில் காலினும் தன் நன்பர்களிடம் பெனாலியை சற்று இழிவாக பேச, அவர்களது நட்பும் கேள்விக்குறியாகி பின் சீசன் 3ல் சுமூகமாக முடிகிறது.
உருவக்கேலியை மட்டுமே சந்திக்கும் பெனாலபி, தனது அலங்காரத்தில் எத்தனை மாற்றம் செய்தாலும், தான் மற்றவர்களின் கண்களுக்கு தெரிய போவதில்லை என உடையும்போதும் சரி, காலினின் உதவியோடு தனக்கு ஒரு கணவனை தேர்ந்தெடுக்க முனைவதிலும் சரி இயல்பாக பொருந்தி போகிறார். நட்புக்கும் காதலுக்கும் இடையில் நின்று கதையின் நாயகனான காலின் குழம்பியபடியே உள்ளதால், சீசன் 3ன் மொத்த பளுவையும் தன் தோளில் சுமக்கும் பெனாலபி மிக அழகான வைரமாக ஜொலிக்கிறார். பெனாலிபி மற்றும் எலோயிஸ் இடையே நடந்த பிரச்னையே, மீண்டும் பெனாலிபி மற்றும் காலின் இடையே விரிசலை உண்டாக்குமா? அல்லது அத்தனை சஞ்சலங்களையும் கடந்து இவர்கள் காதல் திருமணத்தில் முடியுமா? என்பதை தெரிந்து கொள்ள நாம் ஜூன் 13 வரை காத்திருக்க வேண்டும்.
பிரிட்ஜர்டன் தொடரின் முக்கிய வெற்றியே அதில் வரும் உறுதியான பெண் பாத்திரங்கள் தான். முக்கியமாக ராணியாக வரும் சார்லட் கதாபாத்திரம் கம்பீரமாக கர்ஜிக்கிறது. ராணியின் தோழியாக, கூர்மையான அறிவுடன் அதிகாரமிக்கவராக வரும் லேடி டேன்பெரி நம் மனதை கொள்ளை கொள்கிறார். ராணி சார்லட் மற்றும் லேடி டேன்பெரியின் கெமிஸ்ட்ரிக்கு என தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அடுத்ததாக ஆர்ப்பாட்டம் இல்லாமல் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தும் வைலட் பிரிட்ஜர்டன்! தன் பிள்ளைகளுக்கு காதலின் முக்கியத்துவத்தை உணர்த்தும் போதிலும், நாயகன், நாயகி உணரும் முன்பே அவர்களின் உணர்வுகளை கண்டுக்கொண்டு அலட்டாமல் சரியான அறிவுரை வழங்கும் போதிலும் சரி, வைலட் நம் மனதில் பதிகிறார்.
மேலும் இரண்டாம் பாகத்தின் நாயகி கேட் சர்மாவின் கதாபாத்திரம் மிகவும் உறுதியானதாக நம் மனதில் நிலைத்து நிற்கிறது. நாயகனுக்கு எந்த விதத்திலும் சளித்ததாக இல்லாமல், போட்டிப் போட்டுக் கொண்டு நிற்கும் போதிலும் சரி, தங்கையின் வருங்கால கணவனுடன் காதல் வயப்பட்டு திணறும் போதும் சரி, தன் உறுதியான நிலைப்பாட்டில் கலங்காமல் நின்று நம்மை கலங்க வைக்கிறார். அத்தனை பெண் கதாபாத்திரங்களுக்கும் மத்தியில் நம்மை ஈர்க்கிறது லேடி விசில்டவுன் பாத்திரம். பழம்பெரும் நடிகை ஜூலி ஆண்ட்ரிவ்ஸ்-ன் குரல் மூலம் “Dearest Gentle Readers” என அறிமுகமாகும் லேடி விசில்டவுன், உண்மையில் யார் என்பது தெரிய வரும் போது ‘அட’ என நம்மை யோசிக்க வைக்கிறது.
சரி இதுதான் இந்த தொடரின் சிறப்பம்சங்களா என்றால், மிகவும் சுவாரஸ்யமாக இருப்பது இந்த தொடரின் நடிகர்கள் தான். அந்த காலக்கட்டத்தில் ஆங்கிலேயர்கள் ஆதிக்கமிக்கவர்களாக இருந்தனர். மற்ற இனத்தவரை அடிமைப்படுத்தியே வைத்திருந்ததெல்லாம் வரலாறு. ஆனால் இந்த தொடரின் தயாரிப்பு நிறுவனம், இது புனைவு என்பதால் அனைத்து இன மக்களுக்கும் சமத்துவத்தை தர முயற்சித்திருக்கிறது. ராணி உட்பட இந்த தொடரின் முக்கிய கதாபாத்திரங்கள் கறுப்பினத்தவர்களாக உள்ளனர். கலப்பு திருமனமும் சகஜமாக காட்டப்படுகிறது. அது தவிர, 2ம் பாகத்தின் நாயகி கதாபாத்திரம் இந்தியாவிலிருந்து பிரிட்டன் நாட்டிற்கு வருவது போல் எழுதி இருக்கிறார்கள். இது ஒரு உலகளவில் சந்தைப்படுத்துதல் யுக்தியாக பார்க்கப்பட்டாலும் கூட, இன சமத்துவம், ஆண்-பெண் சமத்துவத்தை திணிக்காமல் அந்த சமூக கட்டமைப்பில் இயல்பாக காட்சிபப்டுத்தி இருப்பது பாராட்டத்தக்கதே!
ஒரே மாதிரியான காதல் கதை தான் கரு என்றாலும், திரைக்கதை நம்மை ரசிக்க வைக்கிறது. முக்கியமாக இசை மற்றும் நடனம்! இக்காலத்து புகழ்பெற்ற பாப் பாடகர்களின் பாடல்களை, 1800களின் இசைகளாக மாற்றி நடனமாடும் காட்சிகள் நம்மை சிலிர்க்க வைக்கின்றன. டெய்லர் ஸ்விஃப்ட், பியான்ஸே, பில்லி ஐலிஷ், நிக் ஜோனஸ், அரியானா கிராண்டே, ரியானா, மரூன் 5, சியா போன்ற கலைஞர்களின் பாடல்கள் பாரம்பரிய இசைகளாக நம் மனதை வருடுகின்றன். அதிலும் 3வது சீசனின் சர்ப்பிரைஸ் எலிமண்டாக BTSன் ‘டைனமைட்’ பாடல் கொள்ளை கொள்கிறது. அந்த காலத்து அரண்மனகள், வீடுகள், படப்பிடிப்பு செட்கள் நம்மை 1800களுக்கு அழைத்து செல்கிறது. ஆடை வடிவமைப்பாளர்கள், சிகை அலங்கார கலைஞர்களின் கடின உழைப்பை பாராட்டாமல் இருக்க முடியாது.
இந்த தொடரின் முக்கிய பிரச்னை இது மேல்தட்டு மக்களின் வாழ்வியலை பற்றி மட்டுமே பேசுகிறது. கீழ்த்தட்டு மக்கள் என்பவர்கள் பணியாட்களாக வெறுக் காட்சிப்பொருளாகவே காட்டப்படுகிறார்கள். இந்த சீசனில் அதை கூற சற்று முயற்சி செய்கிறார்கள். அதுவும் கூட மேல்தட்டு பார்வையில் இருந்து தான் கூறப்படுகிறது. அங்கங்கே சில தொய்வுகள் இருந்தாலும் கூட ‘பிரிட்ஜர்டன்’ சிறந்த பொதுபோக்கு தொடர் எனபதில் சந்தேகமில்லை!







