கட்டுப்பாட்டை இழந்த லாரியால் பயங்கர விபத்து; 48 வாகனங்கள் சேதம்

மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே உள்ள நவலே பாலத்தில் கட்டுப்பாட்டை இழந்து ஓடிய டேங்கர் லாரி அடுத்தடுத்து சுமார் 48 வாகனங்களில் மோதியதில் பலர் காயமடைந்தனர். டேங்கர் லாரி பல வாகனங்கள் மீது வரிசையாக…

மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே உள்ள நவலே பாலத்தில் கட்டுப்பாட்டை இழந்து ஓடிய டேங்கர் லாரி அடுத்தடுத்து சுமார் 48 வாகனங்களில் மோதியதில் பலர் காயமடைந்தனர். டேங்கர் லாரி பல வாகனங்கள் மீது வரிசையாக மோதிய இந்த கொடூர விபத்தில் குறைந்தது 30 பேர் படுகாயமடைந்ததாகச் கூறப்படுகிறது. நல்வாய்ப்பாக இந்த வாகன விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.

இந்த விபத்து காரணமாகப் பாலத்தில் வரிசையாக 48 வாகனங்கள் அப்பளம் போல நசுங்கிக் குவிந்து கிடக்கிறது. இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த புனே தீயணைப்புப் படை மற்றும் புனே பெருநகரப் பகுதி மேம்பாட்டு ஆணையத்தின் மீட்புக் குழுக்கள் மீட்புப் பணிகளைத் துரிதமாக மேற்கொண்டனர்.

டேங்கர் லாரி ஒன்றின் பிரேக் செயலிழந்தே இந்த விபத்திற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது. இரவு 9 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது. டேங்கர் லாரியில் இருந்து எண்ணெய் கசிந்துள்ளது. இதனால் சாலைகள் வழுக்கும் தன்மையுடையதாக மாறியதால், மற்ற வாகனங்களும் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்து ஏற்பட்டு உள்ளது.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக மும்பை செல்லும் முக்கிய சாலைகளில் சுமார் 2 கி.மீ. தூரத்திற்கு டிராபிக் ஜாம் ஏற்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.