ஆர்மீனியா – அஜா்பைஜான் எல்லையில் வீரர்களிடையே ஏற்பட்ட மோதலில் 3 ஆர்மீனிய வீரர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அந்த பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது.
சோவியத் யூனியனின் முன்னாள் உறுப்பு நாடுகளான ஆர்மீனியாவுக்கும், அஜா்பைஜானுக்கும் நீண்ட காலமாக எல்லைப் பிரச்னை இருந்து வருகிறது. ஆர்மீனியப் பழங்குடியினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட நகோர்னோ-கராபக் பிராந்தியம், அஜா்பைஜானின் ஓர் அங்கமாக சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டிருந்தது. ஆனாலும், கடந்த 1994-ம் ஆண்டு போருக்குப் பிறகு அந்தப் பகுதி ஆர்மீனியா ஆதரவு பெற்ற பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆர்மீனியாவும், அஜா்பைஜானும் தங்களது படைகளைக் குவித்துள்ளன. அந்தப் பிராந்தியம் சர்ச்சைக்குரிய இடமாக திகழ்கிறது. இதனால், இரு தரப்பினரும் அவ்வப்போது மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். நகார்னோ-கராபக் பிராந்தியத்தில் இரு நாட்டுப் படையினருக்கும் இடையே கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற 6 வாரப் போரில் 6,600-க்கும் மேற்பட்டவா்கள் பலியானது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் ஆர்மீனியா – அஜா்பைஜான் எல்லையில் வீரர்களிடையே ஏற்பட்ட மோதலில் 3 ஆர்மீனிய வீரர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஆர்மீனிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எல்லைக்கு அப்பால் இருந்து அஜா்பைஜான் படையினர் அத்துமீறி சுட்டதில் 4 வீரர்கள் உயிரிழந்ததாக முதலில் குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும், இறந்துவிட்டதாகக் கருதப்பட்ட ஒரு வீரர் மருத்துவ உதவி மூலம் மீட்கப்பட்டதாக அமைச்சகம் பின்னர் தெரிவித்தது.
ஆனால், ஆர்மீனியப் படையினர்தான் தங்களது ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தியதாகவும், எல்லையில் அந்த நாட்டுப் படையினர் குவிக்கப்பட்டு வருவதாகவும் அஜா்பைஜான் பாதுகாப்புத் துறை அமைச்சகம் பதிலுக்கு குற்றம் சாட்டியது.