தமிழ்நாடு – மலேசியா இருவழி உறவு மிகவும் அணுக்கமாக உள்ளது என மலேசிய இந்திய காங்கிரஸ் தேசிய துணைத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான சரவணன் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேகமாக பேட்டி அளித்துள்ளார்.
மலேசியாவின் கோலாலம்பூரில் 11 ஆவது உலகத் தமிழ் மாநாடு நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மலேசிய இந்திய காங்கிரஸ் தேசிய துணைத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான டத்தோஸ்ரீ சரவணன் நியூஸ் 7 தமிழுக்கு சிறப்புப் பேட்டி அளித்தார்.
இது தொடர்பாக, நியூஸ் 7 தமிழ் சென்னை மண்டல தலைமைச் செய்தியாளர் சிரில் தேவாவுக்கு அவர் அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
அதிகமான தமிழர்கள் மலேசியாவில் வசித்து வருகிறார்கள். தமிழ்ப் பண்பாடு, மொழி மீது மலேசியத் தமிழர்கள் தீராக்காதல் கொண்டுள்ளனர். மலேசியாவில் நடைபெற்ற 3 உலகத் தமிழ் மாநாடுகளால் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. மலேசியத் தமிழர்களாலும் மிகப்பெரிய மாநாடுகளை நடத்த முடியும் என்ற கர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போதுள்ள தமிழ்நாடு அரசு, மலேசியாவுடனான உறவுக்காக பல்வேறுவிதமான பணிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழ்நாடு – மலேசியா இருவழி உறவு மிகவும் அணுக்கமாக உள்ளது. அதனால் மலேசிய தமிழர்கள் மிகவும் பலன்களை பெறுவார்கள் என எதிர்பார்க்கிறோம் என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.







