ஆளுநரின் ஒப்புதலின்றி பல்கலைக்கழக துணைவேந்தர் தேடுதல் குழுவை அமைக்க அரசுக்கு அதிகாரம் இல்லை என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
சென்னை பல்கலைக்கழகம் உட்பட 3 பல்கலைக் கழகங்களுக்கு துணைவேந்தர்களை தேர்வு செய்ய, 4 பேர் கொண்ட 3 தேடுதல் குழுக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி அமைத்திருந்தார். இந்த குழுவில் முதன்முறையாக யுஜிசி உறுப்பினரை ஆளுநர் நியமித்ததற்கு, தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையடுத்து சென்னை பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்வு செய்யும் தேடுதல் குழுவின் விவரங்களை தமிழ்நாடு அரசு, கடந்த 13ம் தேதி அரசிதழில் வெளியிட்டது. அதில், ஆளுநர் நியமித்த யுஜிசி உறுப்பினரின் பெயர் நிராகரிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தமிழ்நாடு அரசின் இந்த செயலுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், துணைவேந்தர்களை தேர்ந்தெடுக்கும் குழுவை ஆளுநரின் ஒப்புதல் இன்றி அமைக்க அரசுக்கு அதிகாரம் இல்லை என கூறியுள்ளார். உயர்கல்வித் துறை செயலருக்கு பல்கலைக்கழக விவகாரங்களில் எந்த பங்கும் இல்லை எனவும், துணைவேந்தர் தேடுதல் குழு விவரத்தை தமிழ்நாடு அரசு வெளியிட்டது, யுஜிசி மற்றும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு முரணானது எனவும் கூறியுள்ளார்.
மேலும், தேடுதல் குழு தொடர்பாக அரசிதழில் வெளியிட்டுள்ள அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் எனவும் ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.