தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் கட்சி என நான்கு முனை போட்டி நிலவுகிறது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு தொடங்கியது முதல் வரிசையில் நின்று மக்கள் ஆர்வமாக தங்கள் ஜனநாயக கடமையாற்றி வருகின்றனர்.
இதனிடையே நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிடுகின்றனர். அவர்களில் 3,579 பேர் ஆண்கள், 443 பேர் பெண்கள், ஒருவர் மூன்றாம் பாலினத்தவராகும். இந்த தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் 75 ஆயிரத்து 64 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.
மேலும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பாதுகாப்புக்காக போலீசார் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். ஒவ்வொரு வாக்குச்சாவடியின் வெளியேயும், உள்ளேயும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. அதன்மூலம் தலைமை தேர்தல் அதிகாரி, மாவட்ட தேர்தல் அதிகாரி, தேர்தல் நடத்தும் அதிகாரிகள், தங்களின் கட்டுப்பாட்டு அறைகளில் இருந்து நேரடியாக பார்வையிட முடியும். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வாக்காளர்களுக்காக அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டு உள்ளன.
தமிழகத்தின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5 கோடியே 73 லட்சத்து 43 ஆயிரத்து 291 ஆகும். அவர்களில் 2 கோடியே 80 லட்சத்து 30 ஆயிரத்து 658 பேர் ஆண்கள், 2 கோடியே 93 லட்சத்து 4 ஆயிரத்து 905 பேர் பெண்கள், 7,728 பேர் மூன்றாம் பாலினத்தவராகும். வாக்காளர் பட்டியல் தொடர்பான எஸ்.ஐ.ஆர். பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், சுமார் 40 லட்சம் வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டன. எனவே, ஏற்கனவே வாக்களித்து வருபவர்களே இந்த முறை வாக்களித்தாலும், தமிழகத்தின் வாக்கு சதவீதம் 85-ஐ தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தமிழக சட்டசபை தேர்தலில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. தமிழ்நாட்டில் மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவுபெற்றது. வாக்குச்சாவடிகளில், கட்சிகளின் முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டது.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்:
மொத்த வாக்களர்கள்: 5,73,43,291.







