நுபுர் சர்மா குறித்து உச்சநீதிமன்றத்தின் கருத்து துரதிருஷ்டவசமானது-தலைமை நீதிபதிக்கு கடிதம்

பாஜக முன்னாள் செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மா மனுவை விசாரித்தபோது உச்சநீதிமன்றம் தெரிவித்த கருத்து துரதிருஷ்டவசமானது என்று கூறி தலைமை நீதிபதிக்கு ஓய்வுபெற்ற நீதிபதிகள், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள் கடிதம் அனுப்பியுள்ளனர். நபிகள் நாயகம் குறித்து…

பாஜக முன்னாள் செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மா மனுவை விசாரித்தபோது உச்சநீதிமன்றம் தெரிவித்த கருத்து துரதிருஷ்டவசமானது என்று கூறி தலைமை நீதிபதிக்கு ஓய்வுபெற்ற நீதிபதிகள், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள் கடிதம் அனுப்பியுள்ளனர்.

நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த விவகாரத்தில் நுபுர் சர்மா ஒட்டு மொத்த நாட்டிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

இந்தக் கருத்து துரதிருஷ்டவசமானது என்றும் முன்னெப்போதும் இல்லாத வகையிலான கருத்து என்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணாவுக்கு ஓய்வுபெற்ற நீதிபதிகள் 15 பேர், 77 முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள், ஓய்வுபெற்ற ஆயுதப் படை முன்னாள் அதிகாரிகள் 25 பேர் கையெழுத்திட்டு கடிதம் அனுப்பியுள்ளனர்.

அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
அரசியலமைப்பின்படி அனைத்து அரசு அமைப்புகளும் தங்கள் கடமைகளைச் செய்யும்போது எந்தவொரு நாட்டின் ஜனநாயகமும் அப்படியே இருக்கும் என்பதை குடிமக்களாகிய நாங்கள் நம்புகிறோம். உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய கருத்துகள் லக்ஷ்மண ரேகையை மீறியிருக்கிறது. அத்தகைய கருத்து ஒரு வெளிப்படையான அறிக்கையை வெளியிட வேண்டிய கட்டாயத்தை எங்களுக்கு ஏற்படுத்திவிட்டது.

நுபுர் சர்மா, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தனக்கு எதிராக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து புகார்களையும் விசாரணைக்காக டெல்லிக்கு மாற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், “இந்த வழக்கை மாற்ற வேண்டுமெனில் உயர்நீதிமன்றத்தை நாடலாமே? உங்கள் ஒருவரின் கருத்தால் நாட்டில் பல பிரச்னைகள் ஏற்பட்டன. நுபுர் சர்மாவின் கருத்து ஒட்டுமொத்த நாட்டிலும் கொந்தளிப்பு ஏற்படுத்திவிட்டது” என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்திருப்பது துரதிருஷ்டவசமானதாகும்.

நுபுர் சர்மாவின் மனுவை நிராகரித்ததன் மூலம் அவருக்கு  அரசமைப்பு அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளது. நீதித் துறையில் அழிக்க முடியாத வடுவாக உச்சநீதிமன்றத்தின் கருத்துகள் அமைந்துள்ளன. ஜனநாயக மதிப்புகள் மற்றும் நாட்டின் பாதுகாப்பில் இவை கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை என்பதால், அவசர நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன.

தொலைக்காட்சி விவாதத்தின்போது கூறிய கருத்துக்கள் தொடர்பாக, பல்வேறு மாநிலங்களில் தனக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட பல்வேறு எஃப்ஐஆர்களை டெல்லிக்கு மாற்றக் கோரி மனுதாரர் உச்ச நீதிமன்றத்தை அணுகினார். குற்றச்சாட்டுகள் ஒரே ஒரு குற்றமாகும், அதற்காக தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்திய அரசமைப்பின் பிரிவு 20 (2) ஒரே குற்றத்திற்காக ஒன்றுக்கு மேற்பட்ட முறை வழக்குத் தொடுப்பதையும் தண்டிப்பதையும் தடை செய்கிறது. பிரிவு 20 அரசமைப்பின் பகுதி III இன் கீழ் வருகிறது. இது அடிப்படை உரிமையாகும்.

அர்னாப் கோஸ்வாமி, டி.டி. அந்தோனி ஆகியோரின் வழக்குகளில் ஒரே குற்றச்சாட்டுக்கு இரண்டாவது வழக்கு பதிவு செய்ய வேண்டாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நுபுரின் வழக்கு வேறு ஒரு கோணத்தில் ஏன் நடத்தப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. உச்ச நீதிமன்றத்தின் இத்தகைய அணுகுமுறை எந்த வகையிலும் பாராட்டுக்குரியது அல்ல. நாட்டின் மிக உயர்ந்த நீதிமன்றத்தின் புனிதத்தன்மையையும் மரியாதையையும் இது பாதிக்கிறது என்று அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுபுர் சர்மா

முன்னதாக, ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் நடைபெற்ற துரதிஷ்டவசமான சம்பவத்திற்கு அவரது செயல்பாடுகளே காரணம். நுபுர் சர்மா ஒட்டுமொத்த நாட்டிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும். நுபுர் சர்மா நடந்து கொண்ட விதம் அதன்பிறகு அவரது வழக்கறிஞர்கள் சொல்வது எல்லாம் வெட்கக்கேடானது என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.

ராஜஸ்தான் மாநிலம், உதய்பூர் மாவட்டத்தில் தையல் கடை நடத்திவந்த கன்னையா லாலின் படுகொலை இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இவர் நுபுர் சர்மாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்டதற்காக கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.