சாவர்க்கர் வழக்கில் ராகுல் காந்திக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!

சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்த வரலாறு தெரியாமல், அவதூறு கருத்துக்களை வெளியிடக்கூடாது என ராகுல் காந்திக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்.

வீர் சாவர்க்கர் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் தனக்கு அனுப்பப்பட்ட சம்மனை ரத்து செய்யக்கோரி ராகுல் காந்தி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில், நீதிபதி திபான்கர் தாத்தா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள்:-

சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்து வரலாறு தெரியாமல் அவதூறாக பேசக்கூடாது. மகாத்மா காந்தி கூட தனது கடிதத்தில் loyal servant என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார் என்பது தெரியுமா?. அப்படியெனில் அவர் ஆங்கிலேயர்களுக்கு வேலைக்காரர் என்று அர்த்தமா?.

ராகுல் காந்தியின பாட்டி இந்திரா காந்தி சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு கடிதம் அனுப்பினார். குறிப்பாக சாவர்க்கரை புகழ்ந்து கடிதம் எழுதினார் என்பது அவருக்குத் தெரியுமா?. எனவே, சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்து அவர் பொறுப்பற்ற கருத்துக்களை வெளியிட வேண்டாம். சுதந்திரப் போராட்ட வீரர்களின் வரலாறு தெரியாமல் இதுபோன்ற கருத்துக்களை வெளியிடக்கூடாது.

இதுபோன்று சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்து பொறுப்பற்ற அவதூறு கருத்துக்களை அவர் வருங்காலத்தில் பேசினால் தானாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள் என எச்சரித்தனர். இதனையடுத்து, ராகுல் காந்திக்கு உத்தரப்பிரதேச மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அனுப்பிய சம்மனுக்கு இடைக்கால தடை விதிப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டதோடு, ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு தொடர்பாக எதிர்மனுதாரர் நிர்பேந்திர பாண்டே பதில் அளிக்க நோட்டீஸ் பிறப்பித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.