சாரண, சாரணியர் இயக்கத்தை சார்ந்த மாணவ, மாணவியர்கள் முதல்வரின் கரங்களை வலுப்படுத்த வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் ஆரப்பாளையத்தில் உள்ள புனித பிரிட்டோ மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு பாரத சாரண சாரணியர் தெற்கு மண்டல பெருந்திரளணி 2022 நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், மாநகராட்சி மேயர் இந்திராணி மற்றும் 500க்கும் மேற்பட்ட மாணவ – மாணவியர்கள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, “சாரணர், சாரணியர் இயக்கத்தின் சார்பில் கிராமங்கள் தத்தெடுக்கப்பட்டு, கிராமங்களில் வளர்ச்சிப் பணிகள் நடத்தப்பட்டு வருகிறது. ஒழுக்கம் கற்றுத் தரப்படுகிறது. சாரணர், சாரணியர் இயக்கம் எல்லாவற்றுக்கும் முன்னோடியாக திகழ்கிறது. இந்த இயக்கத்தில் உள்ள மாணவர்களுக்கு இரவு, பகலாக பயிற்சி அளிக்கப்படுகிறது. சாரணர், சாரணியர் இயக்க வளர்ச்சிக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பாடுபட்டு வருகிறார்” என்றார்.
பின்னர் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், “சாரணர், சாரணியர் இயக்கத்தின் நோக்கம் ஒழுக்கத்தோடு, நல்ல பண்புகளை வளர்க்க வேண்டும் என்பதே. நல்ல சமுதாயத்தை வளர்க்கவும், போர் காலங்களில் பயன்படுத்தப்பட்ட யுக்திகள் குறித்தும் இங்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. சட்டமன்ற வரலாற்றில் சாரணர், சாரணியர் இயக்கப் பணிகள் குறித்து முதன்முறையாக பேசப்பட்டது. இந்த இயக்கத்தை மேம்படுத்த முதலமைச்சரும் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்.
மாணவ, மாணவியர்கள் சாரணர், சாரணியர் இயக்கத்தில் கற்றுக் கொண்டவற்றை கிராமப்புறங்களில் செயல்படுத்த வேண்டும். இங்குள்ள மாணவ, மாணவியர்கள் தமிழகத்தையும், முதல்வரின் கரங்களையும் வலுப்படுத்த வேண்டும். நீலகிரியில் தொடங்கிய 3 நாட்கள் பயிற்சி மதுரையில் நடைபெறுகிறது. அடுத்ததாக சென்னை உட்பட பிற மாவட்டங்களில் நடைபெறவுள்ளது” என்று கூறினார்.







