நெல்லை அரசு மருத்துவமனையில் மாணவனுக்கு தீவிர சிகிச்சை : தாயாரிடம் தொலைபேசியில் நலம் விசாரித்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!

நெல்லை பல்நோக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவன் சின்னதுரை தாயாரிடம் முதலமைச்சர் ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்தார். திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் உள்ள பெருந்தெருவைச் சேர்ந்தவர்கள் முனியாண்டி-அம்பிகாபதி தம்பதி.…

நெல்லை பல்நோக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவன் சின்னதுரை தாயாரிடம் முதலமைச்சர் ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்தார்.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் உள்ள பெருந்தெருவைச் சேர்ந்தவர்கள் முனியாண்டி-அம்பிகாபதி தம்பதி. இவரது மகன் சின்னதுரை மற்றும் மகள் சந்திரா செல்வி இருவரும் வள்ளியூர் அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். மாணவர்களுக்குள் சாதி ரிதீயிலான பிரச்னை ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் சின்னத்துரை பள்ளிக்கு செல்லாமல் இருந்துள்ளார். ஆகஸ்ட் 9 ஆம் தேதி பள்ளி நிர்வாகத்தினர், சின்னதுரையின் பெற்றோரை தொடர்புகொண்டு மகனை பள்ளிக்கு அனுப்பி வைக்குமாறு தெரிவித்துள்ளனர். பள்ளிக்குச் சென்ற சின்னத்துரையிடம் பள்ளிக்கு வராதது குறித்து ஆசிரியர்கள் விசாரித்தபோது தன்னை சில மாணவர்கள் ஜாதி ரீதியாக கேலி, கிண்டல் செய்வதால் பள்ளிக்கு வர விரும்பவில்லை என சின்னதுரை ஆசிரியர்களிடம் கூறியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட மாணவர்களை அழைத்து ஆசிரியர்கள் கண்டித்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவர்கள் பள்ளி முடிந்த பின், சின்னதுரையை மடக்கி மிரட்டியுள்ளனர்.
பின்னர் வீட்டில் இருந்து சின்னத்துரையை மர்ம கும்பல் ஒன்று சரமாரியாக வெட்டியது. அதனை தடுக்க சென்ற சந்திராசெல்விக்கும் வெட்டு விழுந்தது. அவர்கள் இருவரும் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களை அமைச்சர் தங்கம் தென்னரசு தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் சந்தித்து உடல் நலம் குறித்து கேட்டறிந்தனர். .மேலும் மாணவனின் தாயாரை தொலைபேசியில் (வீடியோ கால்) தொடர்பு கொண்டு முதலமைச்சர் ஸ்டாலின் நலம் விசாரித்தார். மேலும் தைரியமாக இருங்கள் எனவும் அவர் ஆறுதல் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.