பதவிக்கு பணம் வாங்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் – புஸ்ஸி ஆனந்த் எச்சரிக்கை!

பதவிக்கு பணம் வாங்கினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். 

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான விஜய் கடந்தாண்டு பிப்ரவரியில் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கினார். தொடர்ந்து கொடி அறிமுகம், கட்சியின் பாடல் அறிமுகம், முதல் மாநாடு ஆகியவை நடைப்பெற்றது. ஆனால் கட்சிக்கு மாவட்ட வாரியாக பல நிர்வாகிகள் இன்னும் நியமிக்கப்படவில்லை.

சட்டமன்ற தேர்தல் நெருங்குவதை தொடர்ந்து நிர்வாகிகள் நியமனம் தொடர்பான வேலைகள் தவெகவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கட்சியில் பதவி வகிக்க வேண்டுமானால் ரூ.15 லட்சம் பணம் தர வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டதாக தகவல்கள் பரவியது. மேலும் இதற்காக வாட்ஸ்அப் குழு ஒன்று அமைக்கப்பட்டதாகவும், அதில் அக்கட்சியின் பொதுச்செயலாளரான புஸ்ஸி ஆனந்தும் இடம்பெற்றிருந்ததாக கூறப்படுகிறது. இந்த தகவல் சமூக ஊடகங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பதவிக்கு பணம் வாங்கினாலோ அல்லது பணம் கொடுத்தாலோ, அது யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் நேற்று நடைபெற்ற கட்சி ஆலோசனை கூட்டத்தில் பேசிய அவரின் வீடியோக்கள் இணையத்தில் பரவி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.