முக்கியச் செய்திகள் உலகம் கட்டுரைகள்

மக்களின் நம்பிக்கையை பெறுவாரா இலங்கையின் ”தற்செயல்” அதிபர்?


எஸ்.இலட்சுமணன்

இலங்கையில் மிக இளம் வயதிலேயே அமைச்சராக பதவியேற்றவர், அதிகமுறை  அந்நாட்டின் பிரதமராக பதவியேற்றவர் என்கிற பெருமைகளை தன்னகத்தே ஏற்கனவே வைத்திருக்கும் ரணில் விக்ரமசிங்கே,  தற்போது இலங்கை நாடாளுமன்றத்தால் ஒட்டெடுப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிபர் என்கிற தனித்துவத்தையும் பெற்றிருக்கிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமல் தற்செயல் அதிபராகியிருக்கும் அவர் முன் உள்ள சவால்கள் என்னென்ன?

இலங்கையில் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பொருளாதார நெருக்கடி வாட்டி வதைத்து வருகிறது. நாட்டின் அடிப்படை தேவைகளை  நிறைவேற்றிக்கொள்ள முடியாத அளிவிற்கு அந்நியச் செலாவணி பற்றாக்குறை நிலவி வருகிறது. இந்த பொருளாதார நெருக்கடி எதிரரொலியாக வெடித்த மக்கள் கிளர்ச்சி  அதிபர் கோத்தபய ராஜபக்சவை பதவியை விட்டு விரட்டியது. அப்போது பிரதமராக இருந்த தமது வீடு  தீக்கிரையாக்கப்பட்டு உள்பட மக்களின் ஆவேசத்தையும், ஆக்ரோஷத்தையும் நேரிடையாக கண்டுணர்ந்த ரணில் விக்ரமசிங்கே, தற்போது கோத்தபய இடத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 225 எம்.பி.க்களில் 134 பேரின் ஆதரவுடன் நாட்டின் 8வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் ரணில் விக்ரமசிங்கே.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இலங்கை அதிபர் இதற்கு முன்பு ஒரு முறை மட்டுமே அந்நாட்டு நாடாளுமன்றத்தால் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். 1993ம் ஆண்டு மே 1ந்தேதி அப்போது இலங்கை அதிபராக இருந்த ரணசிங்க பிரேமதாசா குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டபோது,  இலங்கை நாடாளுமன்றம் கூடி  திங்கிரி பண்டா விஜேடுங்காவை இலங்கை அதிபராக தேர்ந்தெடுத்தது. ஆனால் அப்போது அவையில் வாக்கெடுப்பு எதுவும் நடைபெறவில்லை. போட்டியின்றி ஏகமனதாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் தற்போது நாடாளுமன்றத்தில் மும்முனைபோட்டியில் வெற்றி  பெற்று இலங்கை அதிபர் ஆகியிருக்கிறார் ரணில் விக்ரமசிங்கே.  ரணில் விக்ரமசிங்கே எந்தவித அரசியல் பின்புலமும் இல்லாமல்  அரசியலுக்கு வந்து ஜெயித்தவர் அல்ல. அவரது குடும்பத்தின் அரசியல் பின்னணியே ரணில் விக்ரமசிங்கேவை பொது வாழ்க்கைக்கு அழைத்து வந்தது. எனினும் 6 முறை பிரதமராக தேர்ந்தெடுக்கப்படும் அளவிற்கு இலங்கை அரசியலில் தனக்கென தனி இடத்தையும் அடையாளத்தையும் தானே உருவாக்கினார். ஒவ்வொரு முறையும் தோல்விகளிலிருந்து இவர் மீண்டெழுவதை கண்டு வியக்கும் இலங்கை அரசியல்வாதிகள் இவரை 8வது உலக அதிசயம் என்று வர்ணிப்பது உண்டு.  கடந்த 2019ம் ஆண்டு இவரது ஐக்கிய தேசியக் கட்சி வரலாறு காணாத அளவிற்கு படுதோல்வி அடைந்தது. விகிதாச்சார அடிப்படையிலான ஒரு இடம் மட்டுமே  நாடாளுமன்றத்தில் அந்த கட்சிக்கு கிடைத்தது. இத்தோடு ரணில் விக்ரமசிங்கேவின் அரசியல் வாழ்க்கை முடிந்தது எனக் கருதப்பட்டது. அப்போது அந்த தோல்வி குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, அரசியல் ஒரு சதுரங்கம் என்றார். மாரத்தான் போட்டிக்கு தேவைப்படுவது போன்ற தாக்கு பிடிக்கும் திறனும், ரஃபி விளையாட்டைப் போன்ற கடின உழைப்பும் அரசியலுக்கு தேவை என்றார். அதையொல்லாம் செய்துகாட்டியதுபோல் தற்போது இலங்கையின் உச்சபட்ச அதிகாரங்களைக் கொண்ட அதிபர் பதவியை அடைந்துள்ளார் ரணில் விக்ரமசிங்கே.

1949ம் ஆண்டு மார்ச் 24ந்தேதி இலங்கை தலைநகர் கொழும்புவில் பத்திரிக்கையுலக ஜாம்பவான் எஸ்மண்ட் விக்ரமசங்கே, நளினி விக்ரமசிங்கே தம்பதியினருக்கு மகனாக பிறந்தார் ரணில் விக்ரமசிங்கே. இவரது தாய்வழி தாத்தா விஜேவரத்னே இலங்கை சுதந்திரத்திற்காக பாடுபட்ட பத்திரிக்கைகளை நடத்தியவர். தந்தை வழி தாத்தாவான சி.ஜி.விக்ரமசிங்கே இலங்கை காலணி ஆதிக்கக ஆட்சியில் உயர் பதவியில் இருந்தவர். இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட முதல் ஜனாதிபதியாக விளங்கிய ஜூனியஸ் ஜெயவர்தனே ரணில் விக்ரமசிங்கேவிற்கு நெருங்கிய உறவினர்தான். ஏற்கனவே அவரது குடும்பம் அரசியல், ஊடகம் என பொதுவாழ்க்கை பின்னணி கொண்டதாக இருக்க,  ரணிலுக்கு வாய்த்த நண்பர்களும் அரசியல் பின்னணி கொண்டவர்களாகவே இருந்தது அவரை பொதுவாழ்க்கைக்கு மிகவும் இளம் வயதிலேயே கொண்டு வந்தது. இலங்கை தலைநகர் கொழும்புவில் ராயல் கல்லூரியில் அவர் படித்தபோது, அப்போது பிரதமராக இருந்த சாலமன் பண்டாரநாயகவின் மகன் அனுரா பண்டார நாயகே ரணிலின் வகுப்புத் தோழன். சோஷலிஷ கட்சி தலைவர் பிலிப் குணவர்த்தனே மகன் தினேஷ் குணவர்த்தனேவும் அந்த வகுப்பில் இவர்களுடன் சேர்ந்து அரசியல் அரட்டைகள் அடித்தார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று வழக்கறிஞராக பணியாற்றிய ரணில் விக்ரமசிங்கே, பின்னர் இலங்கையின் மிகப் பழமையான கட்சியான ஐக்கிய தேசிய கட்சியில் சேர்ந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கினார்.

1977ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 29 வயதில் வெற்றி பெற்ற ரணில் விக்ரமசிங்கேவை முதலில் வெளியுறவுத்துறை துணை அமைச்சராக்கினார் அப்போதைய அதிபர் ஜெயவர்தனே, பின்னர் அதே ஆண்டில் இளைஞர் விவகாரம் மற்றும் வேலைவாய்ப்புத்துறையின் கேபினட் அமைச்சராக பதவி உயர்வு பெற்றார். இலங்கை வரலாற்றில் மிகக் குறைந்த வயதில் கேபினட் அமைச்சராக பதவி வகித்தவர் என்கிற பெருமையை இதன் மூலம் அவர் பெற்றார்.

1993ம்ஆண்டு ரணசிங்கே பிரேமதாசா கொல்லப்பட்டபோது புதிய அதிபராக திங்கிரி பண்டா விஜேடுங்கா பதவியேற்றார். அவர் ரணில் விக்ரமசிங்கேவை புதிய பிரதமராக ஆகினார். அப்போது ஏற்பட்டிருந்த பொருளாதார தேக்க நிலையிலிருந்து மீள ரணில் மேற்கொண்ட நடவடிக்கைகள் நல்ல பலன் அளித்ததாக  பாராட்டு பெற்றன.  1993ம் ஆண்டு மே 7ந்தேதி பிரதமராக பதவியேற்றவர் கடந்த 29 ஆண்டுகளில் 6 முறை இலங்கையின் பிரதமராக பதவி வகித்துள்ளார். ஆனால் ஒரு முறைகூட அவரால் முழுமையான பதவிக் காலத்தை நிறைவு செய்ய முடியவில்லை. கடந்த 2000ம் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியை பிடித்தபோது மீண்டும் பிரதமர் பதவியை அடைந்த ரணில் விக்ரமசிங்கே, அதிபர் சந்திரிகாவுடன் வெளியுறவுத்துறை விவகாரங்களில் மோதல் போக்கை கடைபிடித்தார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் போக்கு எதிராலியாக ரணில் ஆட்சி கலைக்கப்பட்டது. பின்னர் 2005ம் ஆண்டு அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சேவை எதிர்த்து போட்டியிட்டபோது, சுமார் ஒன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். அதன் பிறகும் தோல்வி மேல் தோல்விகளை கண்டுவந்த ரணில் விக்ரமசிங்கேவின் அரசியல் வாழ்க்கை 2015ம் ஆண்டு அதிபர் தேர்தலில் மைத்ரிபால ஸ்ரீசேனா அதிபரான பின்னர்தான் மீண்டெழுந்தது.

2015ம் ஆண்டு அதிபர் தேர்தல் வந்தபோது மகிந்த ராஜபக்சேவை வீழ்த்த அவரது அமைச்சரவையிலேயே அங்கம் வகித்த மைத்ரிபால சிறிசேனாவை எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக களம் இறக்கினார். இதற்காக முன்னாள் அதிபர் சந்திராகாவுடன் இணைந்து ரணில் வகுத்த வியூகங்களுக்கு நல்ல பலன் அளித்தது. அதிபர் தேர்தலில் மைத்ரிபால சிறிசேனா வெற்றி பெற்றார். இதையடுத்து ரணிலை மீண்டும் பிரதராக்கினார் சிறிசேனா. ஆனால் அவர்களுக்கு இடையே 3 ஆண்டுகளில் மனக்கசப்பு  ஏற்பட்டது.  ஊழல் குற்றச்சாட்டுக்களில் ரணில் தொடர்புபடுத்தி அவரது பதவியை பறித்த சிறிசேனா மகிந்த ராஜபக்சேவை பிரதமர் ஆக்கினார். மிகப்பெரிய அரசியல் சாசன விதிமீறலாக இந்த சம்பவம் விமர்சிக்கப்பட்டது. இதையடுத்து உச்சநீதிமன்ற உத்தரவு எதிரொலியாக ராஜபக்ச பதவி பறிபோய் மீண்டும் பிரதமராக பதவியேற்றார் ரணில்.

ஆனால் அடுத்து கோத்தபய ராஜபக்சே இலங்கை அதிபர் ஆனவுடன் 2020ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வரலாறு காணாத தோல்வியைக் கண்டது ஐக்கிய தேசிய கட்சி.  விகிதாச்சார அடிப்படையில் கிடைத்த ஒரு இடம் மட்டுமே அந்தக் கட்சிக்கு மிஞ்சியது. 1994ம் ஆண்டு முதல்  ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக இருந்து வந்தவரின் அரசியல் வாழ்க்கையின் இது மிகப்பெரிய பின்னடைவாகக் கருதப்பட்டது. அவரது அரசியல் வாழ்க்கை அஸ்தமனம் ஆகிவிட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. கட்சியை இளைஞர்கள் வசம் கொடுத்துவிட்டு ரணில் விக்ரமசிங்கே அரசியலிலிருந்து ஓய்வு பெற வேண்டும் என்றும் ஐக்கிய தேசிய கட்சியின் ஒரு பிரிவினரால் வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில் இந்த அரசியல் அஸ்தமன வாழ்க்கையில்தான் எதிர்பாராதவிதமாக அதிபர் என்கிற புதிய உதயத்தைக் கண்டிருக்கிறார் ரணில் விக்ரமசிங்கே.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபராக இல்லாமல் பொருளாதார நெருக்கடியால் நாட்டில் நிலவிய அசாதாரண சூழலால் அரியணை ஏறும் தற்செயல் அதிபராகத்தான் ரணில் பார்க்கப்படுகிறார். இந்நிலையில் அவர் முன்பு பல்வேறு சவால்கள் அணி வகுத்து நிற்கின்றன.

ரணில் மூலம் ராஜபக்சேக்கள்தான் மீண்டும் நாட்டை ஆள்வார்கள் என்கிற சந்தேகம் நிலவுவதால் அவர் நாடாளுமன்றதால் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட தகவல் கிடைத்ததுமே மீண்டும் போராட்டங்கள் வெடிக்க ஆரம்பித்துவிட்டன. மகிந்தா ராஜபக்ச சமீபத்தில் பிரதமர் பதவியிலிருந்து விலகியபோது, அதிபர் கோத்தபய ராஜபக்சே இடைக்கால பிரதமர் ஒருவரை நியமித்து தமக்கு எதிரான போராட்டங்களை நீர்த்துபோகச் செய்ய திட்டமிட்டபோது எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா உள்ளிட்ட யாரும் அந்த பொறுப்பை ஏற்க முன்வரவில்லை. அப்போது கோத்தபய ராஜபக்சவுக்கு கைகொடுத்து அவரது அழைப்பை ஏற்று பிரதமர் ஆனார் ரணில். இதனால் அவர் மீதும் மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. பின்பு அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிரான போராட்டங்கள் உச்சக்கட்டத்தை எட்டியபோது ரணில் விக்ரம சிங்கேவின் வீடும் தீக்கிரையாக்கப்பட்டது. அவரும் பிரதமர் பதவியிலிருந்து விலக போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர். இந்நிலையில் பிரதமர் பதவியிலிருந்து விலகி அதிபர் பதவியை அடைந்துவிட்டார். எனினும் ராஜபக்சேவிற்கு நெருக்கமானவர் என்கிற பிம்பத்தை உடைத்து மக்களின் நம்பிக்கையை பெருவதும் ரணில் முன்பு உள்ள முதல் சவால்.

கோத்தபய ராஜபக்சேவின் எஞ்சிய பதவி காலத்தைதான் தற்போது ரணில் அனுபவித்து வருகிறார். 2024ம் ஆண்டு நவம்பர் 18ந்தேதி வரை ரணிலின் பதவிக்காலம் உள்ளது. இந்த காலத்திற்குள் இலங்கையின் பொருளாதாரத்தை திவால் நிலையிலிருந்து மீட்டெடுக்க வேண்டும். அதற்கு முதல்கட்டமாக சர்வதேச கண்காணிப்பு நிதியத்திலிருந்து பல ஆயிரம் கோடி ரூபாய் நிதி உதவி பெறுவதற்கான பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக முடிக்க வேண்டும்.

கோத்தபய ராஜபக்சவுடன் நெருக்கம் காட்டியது போன்வற்றால், நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில்  தமிழ்தேசிய கூட்டணி எம்.பிக்கள் உள்ளிட்ட தமிழ் எம்.பிக்களின் ஆதரவு ரணில் விக்ரமசிங்கேவிற்கு கிடைக்கவில்லை. இந்நிலையில் தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் இலங்கை உள்ள தமிழ் மக்களின் நம்பிக்கையை பெறுவதும் ரணிலுக்கு ஒரு பெரும் சவாலாக இருக்கும் என பார்க்கப்படுகிறது.

இப்படி பல்வேறு சவால்களை ரணில் விக்ரம சிங்கே சமாளிப்பாரா, கோத்தபயவுக்கு ஏற்பட்டது போன்ற நிலைமை தனக்கு ஏற்படாத வண்ணம் மக்கள் நம்பிக்கையை அவர் பெறுவாரா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

-எஸ்.இலட்சுமணன்

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

75வது சுதந்திர தினவிழா; ஜம்முகாஷ்மீரில் பாதுகாப்பு பணிகள் தீவிரம்

G SaravanaKumar

அரசியலிலிருந்தே ஒதுங்குகிறேன்: சசிகலா

Niruban Chakkaaravarthi

இறப்பிலும் இணை பிரியாத தம்பதி!

Halley Karthik