கொரோனா தொற்று பரவல் – முக கவசம் அணிவது கட்டாயம் இல்லை … மத்திய இணையமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் பேச்சு!

கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் முக கவசம் அணிவது கட்டாயம் இல்லை என மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் தெரிவித்துள்ளார்.

சர்வதேச யோகா தின விழா வரும் ஜுன் 21 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் அதன் 25 நாள் முன்னோட்ட நிகழ்ச்சி மத்திய ஆயுஷ் அமைச்சகம் சார்பில் புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள காந்தி திடலில் நடைபெற்றது. விழாவை மத்திய ஆயுஷ் மற்றும் சுகாதாரத்துறை இணையமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ், துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், தலைமை செயலர் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு பல்வேறு யோகாசனங்களை செய்தனர்.

முன்னதாக விழா மேடையில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, “உலக அளவில் யோகா உள்ளது என்றால் அதற்கு மிகப்பெரிய பங்கு பிரதமர் நரேந்திர மேடிக்கு உண்டு என பெருமிதம் கொண்ட அவர் யோகா செய்வதன் மூலம் மகிழ்ச்சியாக வாழ முடிவதாகவும் புதுச்சேரியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வரும் நோயாளிகளுக்கும், பள்ளி மாணவர்களுக்கு யோக கற்றுக்கொடுக்கப்படும் நிலையில் யோகா கலையை வளர்க்க புதுச்சேரி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இணையமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ், “கொரோனா பரவல் தடுப்பிற்கான அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு செய்துள்ளது. மேலும் தற்போதைய சூழ்நிலையில் முக கவசம் கட்டாயமில்லை. கொரோனா தொற்றை பொருத்து அந்தந்த மாநிலங்களும் அவர்களது மாநிலத்திற்கு ஏற்ப பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.