அதிமுக ஒன்றாக, நன்றாக இருக்க வேண்டும் என்பதே அரசின் விருப்பம் என்றார் சபாநாயகர் அப்பாவு.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி மற்றும் ஆலையம்மன் கோயிலில், சபாநாயகர் அப்பாவு சாமி தரிசனம் செய்தார்.
கோயிலில் நடைபெறும் பொது விருந்திலும் கலந்து கொண்டு அப்பாவு உணவு உட்கொண்டார். இந்நிகழ்வில் மயிலாப்பூர் எம்எல்ஏ வேலு உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
பின்னர், சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்து ஆலயங்களில் மதிய உணவுத் திட்டம் பக்தர்களின் விருப்பத்துக்கேற்ப சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், முதலமைச்சரின் அறிவுறுத்தலின் படி கோயில்களில் சமபந்தி விருந்து இன்று நடைபெற்றது.
தேனாம்பேட்டை முருகன் கோயிலில் பொதுமக்களுடன் அமர்ந்து நான் உணவருந்தினேன்.
ஓ.பி.எஸ்., – இ.பி.எஸ்., கடிதங்கள் பற்றி சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறும்போது முடிவெடுக்கப்படும். முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் விருப்பு, வெறுப்பின்றி சட்டசபை நடைபெறுகிறது.
தேர்தல் ஆணையத்திலும், நீதிமன்றத்திலும் உள்ள விவகாரம் பற்றி நான் பொதுவெளியில் பேச முடியாது. அதிமுக ஒன்றாக, நன்றாக இருக்கவேண்டும் என்பதே அரசின் விருப்பம் என்றார் அப்பாவு.
முன்னதாக, 75வது சுதந்திர தினத்தையொட்டி, இந்து சமய அறநிலைத்துறையின் சென்னை மண்டலத்தை சேர்ந்த 33 திருக்கோயில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடைபெற்றது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு பூங்கா நகர் அருள்மிகு கந்தசாமி திருக்கோவிலில் நடைபெறும் பொது விருந்தில் கலந்து கொண்டார் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி.








