அக்டோபர் 5-ம் தேதி பாபாவின் “சமாதி தின” நினைவேந்தல். அனைத்து இந்துக்களுக்கும் , தசரா, விஜயதசமி, சரஸ்வதி பூஜை போன்றவை புனித நாட்களாகும். கொலு தவிர பற் பல நிகழ்ச்சிகள் ஆங்காங்கே நடைபெறும்.
“தசராவை” பாபா, தமது வாழ்வின் எல்லையைக் கடப்பதற்கான சரியானதொரு சமயமாக தேர்ந்தெடுத்திருந்தார். தனது எல்லைக்கோட்டைத் தாண்டுவதற்கு, இந்நாளை தேர்ந்தெடுத்த பொருத்தத்தை எண்ணி பக்தர்கள் வியந்து மகிழ்ந்தனர்.
ஞானிகள், சில முக்கிய, குறிப்பிட்ட காரணங்களுக்காகவே இப்பூவுலகில் தோன்றி, அருள் மழை பொழிந்தவர்கள்.
தாம் வந்த காரியம் நிறைவேறிய பின், தாம் எப்படி வந்தார்களோ அப்படியே எந்த ஆராவாரமுமின்றி அமைதியாக, ஆத்ம சுத்தியை அனைவருக்கும் வழங்கி, மகிழ்ந்து, மிகவும் எளிமையான முறையில் இயற்கை எய்துவர்.
வாழ்வில் வெற்றிக்கு உகந்த பல நல்வழிகளை நமக்கு காண்பித்து, அதற்கான அடிப்படை விஷயங்களை நேர்படுத்தி, சீரமைத்துத் தருவர். “குருவின் பாத கமலங்களில் செலுத்தும் அன்பான பக்தி மட்டுமே, விடுதலைக்கான ஒரேவழி” என்பது பாபாவின் கோட்பாடு.
ஹட யோகம் அல்லது அதுபோன்ற கடினமான பயிற்சிகளை அனைவரும் செய்ய இயலாது. ஆகவே, மிகுந்த சிரமப்பட வேண்டாம். ஆனால் அறிவுக் கூர்மையுடன் கூடிய உறுதியான நம்பிக்கை, பொறுமை போன்ற குணங்கள், அடியவர்கள் பெறுவாராயின், அவர்களின் சொல் ஆக்கத்திற்கு ஏந்தல் ஏற்பட்டு, செயல் திறன் குறித்து தான் தயாராகி, பின் குருமார்கள் தோன்றி, ஆன்மீகப் பாதையின் நிறைவிற்கு அனைவரையும் வழி நடத்துவர் என்கின்ற அபிரிதமான கொள்கையை தளராது தழைக்கச் செய்தவர் பாபா.
சீடர் என்பவர், குருவின் பொற் பாதங்களில் தமது தலையை வைப்பது என்பது புறத்தோற்றமே. அந்தரங்கமாக இவர்கள் ஒன்றே. இருவரிடையே வேறுபாடு காண்பவர், இன்னும் பக்குவம் அற்றவராகவும், முதிர்ச்சியற்றவருமேயாவர். குருவும், சீடரும் ஒருவருக்கொருவர் அன்பு கூர்ந்து சேவை செய்ய வேண்டும். அவர்களிடையே எவ்வித பாகுபாடும், வித்தியாசமும் இல்லை என்பது பாபாவின் கருத்தாக இருந்தது.
பூதவுடலை விட்டு உலக லெளகீக வாழ்வை விட்டுச் செல்கையில் பாபா, மக்களுக்கு வழி காட்டும் பொருட்டு, சில பொதுவான பழக்கங்களை பின்பற்றிப் காட்டினார். காலமடையப்போவதை உணர்ந்த பாபா, “ராம விஜயத்தைப் படிக்கக் கட்டளையிட்டார். தாம், தமது ஆத்ம யோகத்தில் மூழ்கி கடைசி வினாடிகளுக்கு காத்திருந்தார்.
மரணத் தருவாயில் ஒருவர் போகும் வழி, இயற்கையானதாக, எளிதாக இருக்கும் பொருட்டு, உலக விஷயங்களிலிருந்து மனதை மீட்டு, ஆன்மீக எண்ணங்களில் லயித்திருக்கச் செய்யும் செயலது. பரீட்சித்து அரசன் மரணத் தருவாயிலிருக்க, மாமுனி சுகர்ரிஷி பாகவத புராணத்தை அவருக்கு விளக்கியதை படித்திருக்கிறோம்.
அதேபோல இன்றளவும், பகவத் கீதை, பாகவதம் போன்ற புண்ணிய நூல்கள் இந்த நேரங்களில் வாசிக்கப்படுகிறது. பாபாவின் திருமேனி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, வாதா எனும் இடத்திற்கு கொண்டு வரப்பட்டு, உரிய சிறப்பான சடங்குகளுடன், முரளீதரின் மூலஸ்தானமாக ஒதுக்கப்பட்டிருந்த மத்திய இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
பாபா முரளீதரரானார். அதிகமான பக்த கோடிகள் அமைதியையும், சாந்தியையும் தேடிச் செல்லும் புனித ஆலயமாக வாதா திகழத் தொடங்கியது. “ஞானிகள், இவ்வுலகில் ஆதரவற்றோரைக் காப்பது என்கிற முக்கியமான நோக்கத்திற்காக தோன்றுகின்றனர். அவர்களும் மக்களுடன் கலந்து அவர்களைப் போலவே சிரிப்பது, விளையாடுவது, அழுவது இப்படி பல உணர்வுகளின் சங்கமமாக இருந்தாலும், தமது கடமைகளிலிலும், தாம் பிறவியெடுத்த நோக்கத்திலும் மிகவும் விழிப்போடு இருக்கிறார்கள்” என்பது ஹேமந்த் பந்த் என்பவரின் சத்திய வார்த்தை.
பெரியவர் நரசிம்ம சுவாமிஜி அருளிய “சாய் அஷ்டோத்திர சத நாமாவளியில்” காணப்படும் நாமங்களை பாபா தான் ஞானம் பெற்றது பற்றி கூறும் பொழுது
“ஆனந்தாய நம”
“ஆனந்த தாய நம”
இரண்டிற்கும் ஒரு எழுத்துதான் வேறுபாடு. அந்த ஒரு வித்தியாசத்தில் பொதிந்துள்ள பெரியதொரு தத்துவத்தை அறிய நமது விழிகள் வியப்பில் விரியும். முதல் நாமாவளியின் பொருள் “ஆனந்தமாக இருப்பவர்”, அடுத்ததின் பொருள் “ஆனந்தத்தை வழங்குபவர்” என்பதாகும்.
மகழ்ச்சியை நமக்குத் தருவதுடன், அவரும் சந்தோஷம் குறையாதவராகவே காணப்படுகிறார். பாபாவின் மகிழ்ச்சி அணு அளவும் குறையாது என்பதே பொருள்.
பிறர் மீது குற்றம் குறைகள் சொல்லிக் குதர்க்கம் செய்து கொண்டிருப்பவன், என்னை உள்ளத்தில் துளைத்துக் காயப்படுத்துகிறான்.
எவர் ஒருவர் துன்பத்திலும் தமக்கு பிரச்னை, சோதனை வந்தபோதும், பொறுமை காத்து நடக்கிறாரோ, அவரே என்னை மிகவும் சந்தோஷப்படுத்துகிறார்” என்பது பாபாவின் வாக்கு. வான்புகழ் நமது வள்ளுவரும் இதையே
“அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறங்கூரான் என்றல் இனிது” என்று அறமே செய்யாதவன் கூட, பிறரைப் பற்றிப் புறங்கூறாதவன்” என்று சொல்லப்படுவதே சாலச் சிறந்தது என்கிறார்.
-சுப்பிரமணியன்,
ஆன்மீகவாதி, ஓய்வு பெற்ற ஊழியர்.








