#SenthilBalaji அமைச்சராவதற்கு எவ்வித தடையும் இல்லை – ஆர்.எஸ்.பாரதி பேட்டி!

செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ள நிலையில் அவர் அமைச்சராவதற்கு எந்தத் தடையும் இல்லை என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, 2011 – 2016 அதிமுக…

#SenthilBalaji has no hurdles to become minister - RSBharti interview!

செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ள நிலையில் அவர் அமைச்சராவதற்கு எந்தத் தடையும் இல்லை என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, 2011 – 2016 அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பதவி வகித்த போது, போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்யவே, அதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நீதிபதி அபய் ஓகா மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மசிஹ் ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு இவரது ஜாமீன் மனுவை விசாரித்து வந்தது. இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணையை நிறைவு செய்த உச்சநீதிமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனைகளுடன் கூடிய ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்த செய்த கேட்டு திமுக அலுவகங்களில் தொண்டர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். இதனைத் தொடர்ந்து சென்னை அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்ததாவது..

”செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைத்திருப்பது மகிழ்ச்சி. செந்தில் பாலாஜி அமைச்சராவதற்கு எவ்வித தடையும் இல்லை. எந்த விதமான முகாந்திரமும் இல்லாமல் 15 மாத காலம் செந்தில் பாலாஜி சிறையில் இருந்துள்ளார். பாஜக எதிர்க்கட்சிகள் மீது இதுபோன்று பொய்யான வழக்குகளை பதிவு செய்வதை விடுத்து திருந்த வேண்டும் இல்லாவிட்டால் அவர்களுக்கு கேடுகாலம் தான். செந்தில் பாலாஜி அமைச்சராக நியமனம் செய்யும் முடிவை முதலமைச்சர் எடுப்பார் அமைச்சரவை மாற்றம் குறித்த பதிலை ஏற்கனவே முதலமைச்சர் தெளிவுபடுத்தி உள்ளார்” என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.