இந்திய விண்வெளித்துறை வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றிய தமிழர் நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட ”ராக்கெட்ரி நம்பி விளைவு” திரைப்படம் ஒவ்வொரு தமிழனும் காண வேண்டிய திரைப்படம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
பிஎஸ்எல்வி ராக்கெட்டுக்களில் பயன்படுத்தப்படும் விகாஸ் என்ஜினை உருவாக்குவதில் முக்கிய அங்கம் வகித்த விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ”ராக்கெட்ரி நம்பி விளைவு” திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மாதவன் இயக்கி நடித்துள்ள இந்த படத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலில் இப்படி ஒரு கதையை தேர்வு செய்து அதனை திரைப்படமாக உருவாக்கியதற்காக மாதவனை வாழ்த்துவதாக கூறியுள்ளார்.
மாதவன் இயக்குநராக முதல் படத்திலேயே முத்திரை பதித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கடினமான அறிவியல் செய்திகளை எளிமையாக்கி, தன் நேர்த்தியான இயக்கத்தால் ”ராக்கெட்ரி நம்பி விளைவு” திரைப்படத்தை ஒரு உலக திரைப்படமாக மாதவன் மாற்றியிருப்பதாகவும் சீமான் தனது அறிக்கையில் கூறியுள்ளார். இந்திய பெருநிலத்தின் தலைசிறந்த விண்வெளி விஞ்ஞானி, தமிழினத்தின் மகத்தான அறிவியல் மேதை என நம்பி நாராயணனை புகழ்ந்துள்ள சீமான், நம்பி நாராயணணின் உடல்மொழியை தத்ரூபமாக பிரதிபலித்து பிரம்மிக்க வைக்கும் பேராற்றல் கொண்ட நடிப்பை இந்த படத்தில் மாதவன் வெளிப்படுத்தியிருப்பதாக பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டை நேசித்து நின்ற நம்பி நாராயணன், பொய் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி காவல்துறை விசாரணைக்கு உட்படுகின்றன வேதனைகளை அதே வலியோடு காட்சிப்படுத்தி, திரைப்படம் பார்க்கின்றவர்களுக்கும் அதே வலியை கடத்தும் அளவிற்கு ராக்கெட்ரி திரைப்படம் யதார்த்தமாக படைக்கப்பட்டிருப்பதாகவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பாராட்டியுள்ளார். அறிவியல் துறையிலும் அரசியலின் ஆதிக்கம் குறித்து இந்த திரைப்படம் சிந்திக்க வைப்பதாக அவர் கூறியுள்ளார்.
அதிகார வர்க்கமும் ஆட்சியாளர்களும் நினைத்தால், பொய், அவதூறுகள் மூலம் எவ்வளவு உயரத்தில் இருப்பவரையும் எளிதாக வீழ்த்த முடியும் என்பதையும், எதையும் ஆராயாது அப்படியே ஏற்று எதிர்வினையாற்றும் பொதுச் சமூக உளவியல் போன்ற இந்நாட்டிற்கே உரிய சகலவிதமான சாபக் கேடுகளையும், அழுத்தமான காட்சியமைப்புகள் மூலம் ராக்கெட்ரி படத்தில் தோலுரித்திருப்பது மிகச் சிறப்பு என்றும் சீமான் தனது அறிக்கையில் கூறியுள்ளார். அநீதி நிறைந்த அதிகார அமைப்புகளுக்கு தனது வசனங்கள் மூலம் சவுக்கடி கொடுத்து தான் ஒரு தேர்ந்த இயக்குநர் என்பதை ”ராக்கெட்ரி நம்பி விளைவு” படத்தின் மூலம் மாதவன் நிரூபித்திருப்பதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.








