கடந்த 2 ஆண்டுகளில் மண்ணை விட்டு மறைந்த திரைப்பிரபலங்கள்.!!

திரையுலகில் சமீபகாலமாக பிரபல நட்சத்திரங்களின் இழப்பு என்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது தமிழ் திரையுலகில் மட்டுமல்ல ஒட்டு மொத்த தென்னிந்திய திரையுலகிலும், நிகழ்ந்து வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் தமிழ் திரையுலகில்…

திரையுலகில் சமீபகாலமாக பிரபல நட்சத்திரங்களின் இழப்பு என்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது தமிழ் திரையுலகில் மட்டுமல்ல ஒட்டு மொத்த தென்னிந்திய திரையுலகிலும், நிகழ்ந்து வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் தமிழ் திரையுலகில் நடிகர் விவேக், இயக்குனர் TP கஜேந்திரன், பாடகி வாணி ஜெயராம், நடிகரும் இயக்குனருமான பிரதாப்போத்தன், நடிகர் மயில்சாமி, கன்னட திரையுலகில் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்பட்ட புனித் ராஜ்குமார் என பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.

நாம் இழந்த திரையுலக நட்சித்திரங்கள் பற்றிய ஒரு சிறிய பார்வை:

1. நடிகர் விவேக்:

இளைஞர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்த நடிகர் விவேக், 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் 17-ஆம் தேதி அன்று திடீர் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி காலமானார். சமூகத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்ட இவர், இறப்பதற்கு இரண்டு தினங்களுக்கு முன்புதான் சமூக பாதுகாப்பிற்காக பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர வேண்டும் என கூறி சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு அரசு மருத்துவமனைக்கு சென்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். அவர் ஊசி போட்டுக்கொண்ட அடுத்த இரண்டு தினங்களில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவர் இறந்ததற்கு அந்த தடுப்பூசிதான் காரணம் என அப்போது புலவரும் விமர்சங்கினாள் வைக்கப்பட்டன. தனது 59-வது வயதிலேயே விவேக் மறைந்தது திரையுலகினர் மத்தியில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியது.

2. பிரதாப் போத்தன்:

பிரதாப் போத்தன் தமிழ், மலையாளம், தெலுங்கு என 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். வெற்றி விழா, லக்கி மேன், மகுடம் என பல படங்களை இயக்கி உள்ளார். ஆயிரத்தில் ஒருவன், அமரன், படிக்காதவன் என பல படங்களில் அவர் நடித்துள்ளார். இறுதியாக கமலி பிரம் நடுக்காவேரி படத்தில் நடித்திருந்தார். சிறந்த நடிகருக்கான ஃபிலிம் பேர் விருது, சிறந்த இயக்குநருக்கான ஃபிலிம் பேர் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். மூடு பனி திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த என் இனிய பொன் நிலவே பாடல் இன்று வரை பிரபலம். இந்நிலையில், உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி அன்று உயிரிழந்தார். பிரதாப் போத்தன் மறைவுக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் சினிமா ரசிகர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

3.புனித் ராஜ்குமார்:

பிரபல கன்னட நடிகர் ராஜ்குமாரின் மகன் புனித் ராஜ்குமார். குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடித்து வந்த புனித், ’பெட்டாடா ஹூவு’ என்ற படத்தில் நடித்ததற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதை பெற்றுள்ளார். பின்னர் புரி ஜெகநாத் இயக்கிய ’அப்பு’ என்ற படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இந்தப் படம் தமிழில் ‘தம்’ என்ற பெயரில் சிம்பு நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது. குறுகிய காலத்திலேயே தனது நடிப்பின் மூலம் ஏராளமான ரசிகர்களைப் பெற்ற புனித் ராஜ்குமார், கடைசியாக ‘ஜேம்ஸ்’ என்ற படத்தில் நடித்திருந்தார். இதில் அவர் ஜோடியாக பிரியா ஆனந்த் நடித்திருந்தார். படம் திரைக்கு வர இருந்த நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 29-ஆம் தேதி அன்று காலை ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது, திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டு , தனியார் மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 46 வயதான அவருக்கு அஸ்வினி ரேவந்த் என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர். அவரது மரண செய்தி அறிந்ததும் கர்நாடக திரையுலகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த மாநிலமும் சோகத்தில் மூழ்கியது

4. இயக்குனர் TP கஜேந்திரன்:

தமிழ் திரையுலகில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் இயக்குனர் டி. பி. கஜேந்திரன். இவர், புகழ்பெற்ற நடிகை டி. பி.முத்துலட்சுமியின் மகனாவார். விசுவின் உதவியாளராக பணியாற்றிய இவரும் விசுவைப் போலவே குடும்பக் கதைகளை மையமாகக் கொண்ட திரைப்படங்களையே இயக்கினார்.இவர் எங்க ஊரு காவல்காரன், பட்ஜெட் பத்மநாபன், மிடில்கிலாஸ் மாதவன், சீனா தானா உள்ளிட்ட பல படங்களை இயக்கி உள்ளார். மேலும், பந்தா பரமசிவம், சந்திமுகி, வேலாயுதம், வில்லு, பேரழகன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். 72 வயதான அவர் நீண்ட நாட்களாக உடல்நல குறைவால் அவதிப்பட்டு வந்த இவர், கடந்த பிப்ரவரி மாதம் 5-ஆம் தேதி உயிரிழந்தார்.

5. பாடகி வாணி ஜெயராம்:

’ஏழு ஸ்வரங்களின் கான சரஸ்வதி’ என்று அழைக்கப்படும் வாணி ஜெயராம், தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட 19 மொழிகளில் பாடல்கள் பாடியுள்ளார். இவர், தமிழில், மல்லிகை என் மன்னன் மயங்கும், ஏழு சுவரங்களுக்குள், ஒரே நாள் உன்னை நான் நிலாவில் காண்கிறேன், ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் உள்ளிட்ட பல பாடல்களைப் பாடி, இசை ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர். 19 மொழிகளில் 10 ஆயிரம் பாடல்களை பாடியவர் மறைந்த வாணி ஜெயராம். யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது என்ற வரிகளை உச்சரித்தபோதும், எனக்கொரு மலர்மாலை நீ வாங்க வேண்டும் என பாடியதும் நெஞ்சத்தை கிள்ளிடும் வகையில் இருக்கும். கலைவாணியாக பிறந்து வாணி ஜெயராமாக மாறிய அவர் பாடிய பிரபல தமிழ்ப்பாடல்கள் ஏராளம். 78 வயதான வாணி ஜெயராம் கடந்த பிப்ரவரி மாதம் 4-ஆம் தேதி அன்று சென்னை நுங்கப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் திடீரென மயக்கமடைந்த நிலையில் காலமானார்.

6. நடிகர் மயில்சாமி:

1965 ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பிறந்த மயில்சாமி, 1984ஆம் ஆண்டு பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான தாவணி கனவுகள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து தூள், கில்லி, திருவிளையாடல் ஆரம்பம், வீரம், வீட்டுல விஷேசம் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை வேடத்திலும், குணச்சித்திர வேடத்திலும் நடித்துள்ளார். மேடை நாடக நடிகர், தொலைக்காட்சி தொகுப்பாளர், பலக்குரல் மன்னனாகவும் இருந்த மயில்சாமி, அரசியல் கட்சியினருக்கு மேடை பேச்சாளராகவும் சிறப்பாக பணியாற்றியுள்ளார். கடந்த பிரவரி மாதம் 19-ஆம் தேதி அன்று தனது 57 வயதிலேயே மறைந்தது திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.

இவர்கள் அனைவரையும் தொடர்ந்து தற்போது தமிழ் திரையுலகில், தமிழ் சினிமாவின் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், குணச்சித்திர நடிகர் மற்றும் நகைச்சுவை நடிகர் என்று பன்முகத்திறமைகளைக் கொண்டவரான மனோபாலாவும் மறைந்திருப்பது மிகப்பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.