சவுதி அரேபியாவின் மதீனா அருகே பேருந்தும், டீசல் லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. மெக்காவில் இருந்து மதீனாவிற்கு 43 பயணிகள் பேருந்தில் உம்ரா புனித பயணம் சென்றுள்ளனர். அப்போது அதிகாலை 1.30 மணியளவில் பேருந்து முப்ரிஹத் பகுதியருகே சென்றபோது, டீசல் ஏற்றி வந்த லாரி மீது மோதி விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 20 பெண்கள், 11 குழந்தைகள் உள்பட 42 உம்ரா பயணிகள் பலத்த காயமடைந்து உயிரிழந்துள்ளனர். அவர்களில் பலர் இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் இருந்து சென்றவர்கள் என முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்தில் ஒருவர் மட்டும் உயிர் தப்பியுள்ளார். பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் மெக்காவுக்கு சென்று உம்ரா சடங்குகளை முடித்து விட்டு, மதீனாவுக்கு திரும்பும்போது இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது. இது குறித்து குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்க சவுதி அரசு கட்டுப்பாட்டு அறை ஒன்றை அமைத்துள்ளது. இதன்படி, விபத்தில் சிக்கியவர்களின் குடும்பத்தினர் 79979-59754 அல்லது 99129-19545 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து தகவல் வெளியாகவில்லை.
இந்த நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “மதீனாவில் இந்தியர்கள் விபத்தில் சிக்கியதால் மிகுந்த வருத்தம் அடைந்தேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பத்தினருடன் என் எண்ணங்கள் உள்ளன. காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். ரியாத்தில் உள்ள எங்கள் தூதரகம் மற்றும் ஜெட்டாவில் உள்ள துணைத் தூதரகம் அனைத்து உதவிகளையும் வழங்கி வருகின்றன. எங்கள் அதிகாரிகள் சவுதி அரேபிய அதிகாரிகளுடனும் நெருங்கிய தொடர்பில் உள்ளனர்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







