அதிமுகவிற்கு உரிமை கோரும் விவகாரம்- உயர்நீதிமன்றத்தில் சசிகலா மேல்முறையீடு

அதிமுக பொதுச் செயலாளர் பதவியிலிருந்து தன்னை நீக்கியது செல்லும் என சென்னை உரிமையியல் நீதிமன்றம் அளித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வி.கே.சசிகலா மேல்முறையீடு செய்துள்ளார்.  கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம்…

அதிமுக பொதுச் செயலாளர் பதவியிலிருந்து தன்னை நீக்கியது செல்லும் என சென்னை உரிமையியல் நீதிமன்றம் அளித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வி.கே.சசிகலா மேல்முறையீடு செய்துள்ளார். 

கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ந்தேதி ஜெயலலிதா மறைந்த பிறகு டிசம்பர் 29ந்தேதி அக்கட்சியின் பொதுக் குழு கூட்டப்பட்டது. ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்ற இந்த பொதுக்குழுவில் கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளராக வி.கே.சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதையடுத்து சொத்துக் குவிப்பு வழக்கில் அவர் சிறை சென்ற பிறகு அதிமுகவில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்தன. கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கூடிய பொதுக் குழுவில், அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து வி.கே.சசிகலாவும், துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து டிடிவி தினகரனும் நீக்கப்பட்டனர். பொதுச் செயலாளர் பதவிக்கு பதிலாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் அந்த பொதுக்குழுவில் உருவாக்கப்பட்டன.

இந்நிலையில், பொது செயலாளர் இல்லாமல் கூட்டபட்ட பொதுக்குழு செல்லாது என அறிவிக்கக் கோரியும், அந்த கூட்டத்தில் தங்களை நீக்கிய தீர்மானத்தை ரத்து செய்யக் கோரியும் வி.கே.சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் சென்னை மாவட்ட நான்காவது கூடுதல் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

தன்னை பொதுச் செயலாளராக அறிவித்து 2016 டிசம்பர் 29ம் தேதி நிறைவேற்றப்பட்ட
தீர்மானம் கட்சி உறுப்பினர்கள் என்ற முறையில் ஓ. பன்னீர்செல்வம் மற்றும்
எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரையும் கட்டுப்படுத்தும் என சசிகலா தரப்பில் வாதிடப்பட்டது.  கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கியது சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும் எனவும் சசிகலா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. அமமுக என்ற பெயரில் தனிக்கட்சி துவங்கியதால், டி.டி.வி தினகரன் இந்த வழக்கில் இருந்து பின்னர் விலகினார்.

இந்நிலையில்  வி.கே.சசிகலாவின் வழக்கை நிராகரிக்க கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இபிஎஸ், செம்மலை ஆகியோர் தரப்பில் உரிமையியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில் சசிகலாவை கட்சியிலிருந்து நீக்கியதை உச்சநீதிமன்றம், டில்லி உயர்நீதிமன்றமும், இந்திய தேர்தல் ஆணையமும் ஏற்றுக் கொண்ட நிலையில்,  அதிமுக பொதுச்செயலாளர் தாம்  என சசிகலா தவறான தகவல்களை நீதிமன்றத்தில் தெரிவிப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.


அதே நேரம் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, கட்சியின் பெயர் மற்றும்
சின்னம் தொடர்பாக மட்டுமே தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளதாகவும், கட்சியின்
மற்ற விவகாரங்களில் தலையிட முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதாக
சசிகலா தரப்பில்,  வாதிடப்பட்டது.

மேலும், உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கையும் தேர்தல்
ஆணையம் தனது உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளதாகக் கூறிய சசிகலா தரப்பு , தனது வழக்கை நிராகிரிக்க கோரி அதிமுக நிர்வாகிகள் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் வாதிட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை 4வது கூடுதல் உரிமையியல் நீதிமன்ற
நீதிபதி ஜெ.ஸ்ரீதேவி, ஓபிஎஸ், இபிஎஸ் தாக்கல் செய்த மனுவை ஏற்று, சசிகலாவின்
வழக்கை நிராகரித்து உத்தரவிட்டார். சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கியது செல்லும் எனவும் இந்த வழக்கை தாக்கல்செய்ய சசிகலாவுக்கு அடிப்படை முகாந்திரம் இல்லை எனவும் நீதிபதி தனது உத்தரவில் சுட்டிக்காட்டினார். இந்நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேற்முறையீடு செய்வேன் என சசிகலா ஏற்கனவே கூறியிருந்தார். அதன்படி மேல்முறையீடு செய்துள்ள சசிகலா, தன்னை அதிமுக இடைக்காலப் பொது செயலாளர் பதவியிலிருந்து நீக்கியது செல்லும் என்ற சென்னை நகர உரிமையியல் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யும்படி கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் சசிகலா தொடர்ந்த வழக்கை எதிர்கொண்டபோது ஓபிஎஸ், மற்றும் இபிஎஸ் ஒரே அணியாக இருந்தனர். தற்போது இருவரும் எதிர் எதிர் துருவங்களாக மாறியுள்ள நிலையில் சசிகலா தொடர்ந்த மேல்முறையீட்டு மனு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போது அதனை இருவரும் எவ்வாறு எதிர்கொள்வார்கள் என்கிற பரபரப்பு தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.