விமர்சனங்களைத் தாங்கி, நடிப்பில் சரவணன் செதுக்கிய சிற்பம் “சூர்யா” -பிறந்தநாள் ஸ்பெஷல்!!!!

திரைத்துரையே வேண்டாம் என ஒதுங்கியவரை விதி அழைத்துவந்து அலைக்கழித்தது. அதனை ஒரு கை பார்ப்போம் என இறங்கி அடித்து திரையுலகில் தனக்கென ஒரு இடம் பிடித்தவர் நடிகர் சூர்யா.. இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர்…

திரைத்துரையே வேண்டாம் என ஒதுங்கியவரை விதி அழைத்துவந்து அலைக்கழித்தது. அதனை ஒரு கை பார்ப்போம் என இறங்கி அடித்து திரையுலகில் தனக்கென ஒரு இடம் பிடித்தவர் நடிகர் சூர்யா.. இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் சூர்யா குறித்த சிறப்பு செய்தித் தொகுப்பைக் காணலாம்.   

’ரோலக்ஸ்’ – விக்ரம் படத்தில் சில நிமிடங்களே வரும் இந்த கதாபாத்திரம் ஏற்படுத்திய அதிர்வலைகள் இன்றும் அடங்கவில்லை. சூர்யாவைத்தவிர அந்த கதாபாத்திரத்தை வேறு யாரும் அத்தனை கச்சிதமாக முடித்திருக்க முடியாது. எண்ணிலடங்கா ரசிகர்கள் அவரை கொண்டாடும் இந்த உயரத்தை அவர் எளிதாக சிவப்புக்கம்பளத்தில் நடந்து அடைந்துவிடவில்லை. அவர் கடந்து வந்த கற்களையும், முற்களையுமே பாதையாக அமைத்துக் கொண்டவர்.

நேருக்குநேர் திரைப்படம் வெளியான முதல்நாள்… காசி திரையரங்கில் முதல்காட்சி முடிந்து வெளியே பதற்றத்துடன் நின்று கொண்டிருந்த சூர்யாவை அடையாளம் கண்டு கொண்ட ஒருவர் வேகமாக வந்து கைகுலுக்கி சொன்ன வார்த்தை…’படம் சூப்பர். ஆனா நீங்க செம்மையா சொதப்பி இருக்கீங்க…’ எதிர்மறையான இந்த விமர்சனம் அவரை முடக்கி விடவில்லை. மாறாக வைராக்கியத்தை உருவாக்கியது.

 

நடிகர் சிவக்குமரின் மகனாக அறியப்பட்ட பின்னர், சூர்யாவின் காதுபடவே பலரும் பேசிய வார்த்தை.. ‘பெரிய நடிகரோட பையன்களுக்கெல்லாம் ஈசியா வாய்ப்பு கெடச்சிடுது.. நடிக்க தெரியணும்ங்கற அவசியமில்ல…’ இதையே தான் நடிகர் சிவக்குமாரும் இயக்குநர் வசந்திடம் கூறினார். இயக்குநர் வசந்தும், சிவக்குமாரும் மலேசியாவில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விமான நிலையம் சென்றிருந்தனர். அப்போது சிவக்குமாரை விமான நிலையத்திற்கு அழைத்து வந்த சூர்யா வசந்த் கண்ணில் பட, தான் இயக்கும் நேருக்கு நேர் படத்தில் நடிக்க வைக்க சிவக்குமாரின் அனுமதியை கேட்டிருக்கிறார். அதற்கு சிவக்குமார் ‘அவனுக்கு நடிக்க, டேன்ஸ் ஆட, சண்டைபோட வராது… ‘ அவன் வாழ்க்கையை கெடுத்திடாதீங்க ….’ என்று கூறியிருக்கிறார். ஆனால் சிவக்குமாரின் சம்மதத்தைப் பெற்று கார்மெண்ட் நிறுவன தொழிலாளியான சரவணனை சூர்யாவாக அறிமுகப்படுத்தினார் வசந்த்.

இயல்பிலேயே சூர்யா கூச்சம் நிறைந்தவர். யாரிடமும் அதிகம் பேச மாட்டார். பள்ளி, கல்லூரி என அதிகம் தோல்விகளையே பார்த்தவர். சுயமாக தொழில் தொடங்க நினைத்து அதுவும் தோல்வியைத் தழுவ, தனியார் நிறுவனத்தில் 1200 ரூபாய் சம்பளத்தில் வேலைக்கு செய்து கொண்டிருந்தார்.

நேருக்கு நேர் படத்திற்கு பிறகு சூர்யாவிற்கு கிடைத்ததெல்லாம் எதிர்மறை விமர்சனங்கள்தான். இருப்பினும் பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருந்தது. காதலே நிம்மதி, சந்திப்போமா, பெரியண்ணா என அடுத்தடுத்து தோல்விப்படங்கள்.. அறிமுகமாகி 5 ஆண்டுகளில் 7 படங்களில் நடித்திருந்தாலும் சூர்யா எனும் நடிகர் அதுவரை உருவாகவே இல்லை.

சேது படம் வெளியான தருணத்தில் தன் இல்லத்திற்கு வந்திருந்த இயக்குநர் பாலாவை காரில் அழைத்துச் செல்லும்போது முதன்முறையாக மொத்த தைரியத்தையும் வரவழைத்து வாய்ப்பு கேட்டிருந்தார் சூர்யா..

அதற்கு பலனாக நந்தா பட வாய்ப்பு கிடைத்தது அவருக்கு.. அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட சூர்யா… தனது 8 வது படத்தில் நடிப்பில் பாஸ் மார்க் பெற்றார். அடுத்தடுத்து இயக்குநர்கள் விகரமன், அமீர்,கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உன்னை நினைத்து, மவுனம் பேசியதே, காக்க காக்க என வெரைட்டி காட்டியதோடு, நடிப்பு, நடனம், சண்டைக் காட்சிகள் என சூர்யாவின் கடும் உழைப்பு ரசிகர்களையும் திருப்திப்படுத்தியது. சூர்யாவிற்குள் இருந்த நகைச்சுவை நடிகரை வெளிக்கொண்டு வந்தவர் இயக்குநர் பாலாதான். நந்தாவில் இறுகிய பாறையாகவும், அன்புக்கு ஏங்கும் இளைஞனாகவும் நடித்திருந்த சூர்யா பிதாமகன் படத்தில் அப்படியே அதற்கு எதிர்மாறாக கதாபாத்திரத்தில் காமெடியில் ஒரு கலக்கு கலக்கி இருப்பார்.

அதன் பின் எந்த கேரக்டர் என்றாலும் சூர்யாவை நம்பி கொடுக்கலாம் என இயக்குநர்கள் தேர்வு செய்யும் நடிகராக இன்றும் வலம் வருகிறார் இந்த ரோலக்ஸ்.

திரை வாழ்க்கையில் வெற்றி, தோல்விகள் சாதாரணம். ஆனால் வாழ்க்கையில் தோல்விகள் தவிர்க்க முடியாதவை என்று உணர்ந்திருந்த சூர்யாவை தோல்விகளால் தடம்புரள செய்ய முடியவில்லை.

இயக்குநர் மணிரத்னம் தயாரிப்பில் நேருக்குநேர் உருவான போது, தமிழ் திரையுலகில் ஏற்கனவே சரவணன் எனும் பெயரில் நடிகர் இருந்ததால், சூர்யாவிற்கு தளபதி படத்தின் ரஜினிகாந்த் கதாபாத்திர பெயரை மணிரத்னம் சூட்டினார். அந்த சரவணன் நடிப்புச் சூரியனாக தன்னை நிலை நிறுத்தி தனக்கென ஒரு பாதை அமைத்துக் கொண்டார்…..

குடும்ப வாழ்க்கையிலும் நல்ல மகனாக, கணவராக, சகோதரராக வாழ்ந்துகாட்டி வரும் சூர்யா, தன்னுடைய அகரம் பவுண்டேஷன் மூலமாக பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு கல்விக்கான ஏற்பாடுகளையும் செய்து வருகிறார். நீட் தேர்வு, புதிய கல்விக்கொள்கை உள்ளிட்ட விவகாரங்களின் தனது எதிர்ப்பை சூர்யா பதிவு செய்ததால் எதிர்வினைகள் வந்தாலும் தந்து நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்காமல் இருந்தார்.

ஒருமுறை ஜோதிகா, கோவில்களுக்கு பணம் செலவு செய்வதற்கு பதிலாக கல்விக்கூடங்களுக்கு செலவு செய்யுங்கள் எனக் கூறியது பெரும் சர்ச்சையானது. அப்போதும் கூட எதிர்ப்புகளுக்கு அஞ்சாமல் ஜோதிகாவிற்கு ஆதரவாக தன்னுடைய கருத்தை பதிவு செய்தார். இப்படி நடிகராக, தயாரிப்பாளராக, சமூக் செயற்பாட்டாளராக வெற்றி நடை போட்டு தனது பயணத்தை தொடர்கிறார் சூர்யா…

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.