நடிகை சமந்தா சிகிச்சைக்காக தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரூ.25 கோடி கொடுத்ததாக எழுந்த வதந்தி குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.
இந்நிலையில் தெலுங்கில் பிரபல நடிகராக வலம் வரும் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகி வரும் ’குஷி’ படத்தில் சமந்தா கதாநாயகியாக நடித்தார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை ஷிவ நிர்வாணா இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைவதாக படக்குழு தெரிவித்துள்ளது. ஹீஷம் அப்துல் வாஹித் இசையமைக்கும் இந்தப் படம் செப்டம்பர் 1-ம் தேதி வெளியாக இருக்கிறது. மேலும், வருண் தவானுடன் சிட்டாடெல் வெப் சீரீஸிலும் நடிகை சமந்தா நடித்து முடித்தார்.
தற்போது மீண்டும் மயோசிடிஸ் நோய்க்கு சிகிச்சை எடுத்துக்கொள்வதற்காக அமெரிக்கா மற்றும் தென் கொரியா நாடுகளுக்குச் செல்ல உள்ளதால் ஒரு ஆண்டு வரை சினிமாவிலிருந்து விலகி இருக்க சமந்தா முடிவு செய்துள்ளதாக தகவல் அண்மையில் வெளியாகின. எனவே புதிதாக ஒப்பந்தமாகவிருந்த படத்திற்கான முன்பணத்தை தயாரிப்பாளர்களிடம் திருப்பியளித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அவருக்கான சிகிச்சை செலவாக ரூ.25 கோடியை தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் வழங்கியதாக தகவல்கள் பரவி வந்தன. இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகின. தற்போது இதுகுறித்தும் தான் சிகிச்சை பெற்று வருவது குறித்தும் நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் அவர் பதிவிட்டுள்ளதாவது, ”மையோசிடிஸ் சிகிச்சைக்கு ரூ.25 கோடியா? தவறான தகவலை உங்களுக்கு கொடுத்துள்ளனர். என் சிகிச்சைக்காக நான் மற்றவர்களிடம் பணம் பெறவில்லை. என்னுடைய துறையில் நான் என் வேலைகள் மூலம் நன்றாக சம்பாதித்துள்ளேன். அதனால், என்னால் என்னை பார்த்துக்கொள்ள முடியும். நன்றி.
மயோசிடிஸ் என்பது ஒரு நிலை. அதில் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்படுகின்றனர். அதனால் சிகிச்சை தொடர்பாக செய்திகள் வெளியிடும்போது சற்று பொறுப்புடன் இருங்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.
சமந்தா தனது சிகிச்சைக்காக தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாரிடன் பணம் பெற்றதாக வெளியான தகவலை பொய் என உரைக்கும் வகையில் சமந்தா இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.







