காரில் சீட் பெல்ட் அணியும் விவகாரம் ; மத்திய அரசு புதிய முடிவு

காரில் சீட் பெல்ட் அணியாவிட்டால் எச்சரிக்கும் அலாரத்தின் செயல்பாட்டை முடக்கும் கருவியின் விற்பனைக்கு தடை விதிக்க சாலை போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்துள்ளது. ஷபூர்ஜி தொழில் குழுமத்தின் தலைவரும்,டாடா குழுமத்தின் முன்னாள் தலைவருமான சைரஸ்…

காரில் சீட் பெல்ட் அணியாவிட்டால் எச்சரிக்கும் அலாரத்தின் செயல்பாட்டை முடக்கும் கருவியின் விற்பனைக்கு தடை விதிக்க சாலை போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

ஷபூர்ஜி தொழில் குழுமத்தின் தலைவரும்,டாடா குழுமத்தின் முன்னாள் தலைவருமான சைரஸ் மிஸ்திரி சில நாட்களுக்கு முன் சாலை விபத்தில் உயிரிழந்தார். காரில் பயணித்த அவர் சீட் பெல்ட் அணிந்திருந்தால் உயிர் பிழைத்திருக்கலாம் என பரவலாக கூறப்பட்டது. மேலும் காரில் பயணிப்பவர்கள் சீட் பெல்ட் அணிவதை தவிர்க்கின்றனர். அத்துடன் சீட் பெல்ட் அணியாமல் இருந்தால் எச்சரிக்கும் அலாரம் அமைப்பை முடக்கும் எலக்ட்ரானிக் சாதனங்கள் அதிக அளவில் இணைய வழி வர்த்தகத்தில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக போக்குவரத்து நிபுணர்கள் கூறுகின்றனர் .

இந்நிலையில் காரில் பயன்படுத்தும் சீட் பெல்ட் அணிவது குறித்த அறிவிப்பு ஒன்றை அரசு வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன. சில மாதங்களுக்கு முன்பு ,மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம், நுகர்வோர் விவகார அமைச்சகத்திற்கு எழுதிய கடிதத்தில் காரில் பயணிக்கும் போது சீட் பெல்ட் அணியாமல் இருந்தால் எச்சரிக்கும் அலாரமை செயல்படாமல் முடக்கும் வகையில் உள்ள எலக்டரானிக் சாதனங்கள் அதிக அளவில் இணையம் வழியே விற்பனையாகிறது .அதை தடுத்து நிறுத்த வேண்டும் என இணைய வழி வர்த்தக நிறுவனங்களுக்கு உத்தரவிடுமாறும் கேட்டுக் கொண்டதாக தெரிவிக்கின்றனர்.

சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் படி ,கார் சீட் பெல்ட் அலாரங்களை முடக்க வடிவமைக்கப்பட்ட சாதனங்களை விற்பனை செய்யக்கூடாது என இணைய வழி வர்த்தக நிறுவனங்களுக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தற்போது, ​​அனைத்து வாகன உற்பத்தியாளர்களும் முன் இருக்கை பயணிகளுக்கு சீட் பெல்ட் நினைவூட்டல்களை வழங்குவது கட்டாயமாக உள்ளது. இனி கார் மற்றும் வாகன உற்பத்தியாளர்கள் பின் இருக்கைகளுக்கும் சீட் பெல்ட் அலாரம் அமைப்பை அறிமுகப்படுத்துவதை கட்டாயமாக்க அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருந்தார்.

காரில் பின் இருக்கைக்கு சீட் பெல்ட், சீட் பெல்ட் அணியாததை எச்சரிக்கும் அலாரம் விற்பனைக்கு தடை என நடவடிக்கை எடுக்கும் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் , சாலை வரி ,சுங்க கட்டணம் வசூலித்தும், பல ஆண்டுகளாக செப்பனிடப்படாமல் இருக்கும் சாலைகளை முறையாக பராமரித்தாலே விபத்துகளையும், உயிரிழப்புகளையும் தடுக்கலாம் என்பதே போக்குவரத்து நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.