டி வில்லியர்ஸின் அதிரடி ஆட்டத்தால் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி த்ரில் வெற்றி பெற்றது.
இந்தாண்டுக்கான ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்கியது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தி வருவதால் ரசிகர்களுக்கு போட்டியை காண அனுமதியில்லை. இன்றைய போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையடுத்து மும்பை அணி களமிறங்கியது. அதிரடி காட்டுவார் என எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா 19 ரன்னில் வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். அவரையடுத்து களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சூர்யகுமார் 31 ரன்னில் பெவிலியன் திரும்பினார். தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கிறிஸ் லின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 49 ரன்னில் அவுட்டாகி தனது அரை சதத்தை 1 ரன்னில் இழந்தார்.
அதன்பின் வந்த வீர்ரகள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேற மும்பை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி அளித்து வாஷிங்டன் சுந்தர் 10 ரன்னில் வெளியேறினார். அவரை அடுத்து இறங்கிய படிதார் 8 ரன்னில் வெளியேற மேக்ஸ்வெல் களமிறங்கி கோலியுடன் பார்ட்னர்ஷிஃப் அமைத்து அணியை சரிவில் இருந்து மீட்க தொடங்கினார்.
அணியின் ஸ்கோர் 98 ஆக இருக்கும்போது விராட் கோலி 33 ரன்னிலும் அவரை அடுத்து மேக்ஸ்வெல் 39 ரன்னிலும் பெவிலியன் திரும்பினர். இவர்களை அடுத்து களமிறங்கிய அதிரடி ஆட்டக்காரர் டி வில்லியர்ஸ் தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார்.
கடைசி ஓவரில் 3 பந்துக்கு 3 ரன்கள் தேவை எனும் சமயத்தில் டி வில்லியர்ஸ் ரன் அவுட்டாகி வெளியேறினார். இறுதியாக கடைசி 2 பந்துக்கு 2 ரன்கள் தேவை என்ற நிலையில், சீராஜ் ஒரு ரன்னும், ஹர்ஷல் பட்டேல் ஒரு ரன்னும் எடுத்து பெங்களூரு அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தனர். இதன் மூலன் இந்தாண்டுக்கான ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணி வெற்றியுடன் தொடங்கியுள்ளது. ஈ சாலா கப் நமதே என்ற அந்த அணி ரசிகர்களின் பல ஆண்டு கனவை பெங்களூரு அணி இந்தாண்டாவது நிறைவேற்றுமா என்பதை நாம் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மும்பை இந்தியன்ஸ் அணியை தன் பந்துவீச்சால் கட்டுக்குள் கொண்டு ஹர்ஷல் பட்டேலுக்கு மேன் ஆஃப் தி மேட்ச் விருது வழங்கப்பட்டது.