இறுதி வரை போராடிய ராஜஸ்தான் – 1 ரன் வித்தியாசத்தில் ஹைதரபாத் த்ரில் வெற்றி!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணி த்ரில் வெற்றி பெற்றது. ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. லீக் சுற்று போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், ஹைதரபாத்தின்…

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணி த்ரில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. லீக் சுற்று போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், ஹைதரபாத்தின் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நேற்று சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதரபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஹைதரபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா 12 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து வந்த அன்மோல்ப்ரீத் சிங் 5 ரன்களில் வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார். மற்றொரு புறம் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ட்ராவிஸ் ஹெட் பொறுப்புடன் விளையாடினார். அவருடன் கைகோர்த்த நிதிஷ் குமார் ரெட்டி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.ட்ராவிஸ் ஹெட் – நிதிஷ் குமார் ரெட்டி இணை ஹைதரபாத் அணிக்காக 96 ரன்கள் குவித்தது. 58 ரன்கள் விளாசிய நிலையில் ட்ராவிஸ் ஹெட் வெளியேற, அவரைத் தொடர்ந்து களமிறங்கிய கிளாசன் 42 ரன்கள் விளாசினார். இறுதியாக 20 ஓவர்களில் ஹைதரபாத் அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 201 ரன்கள் குவித்தது. இதையடுத்து 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது.

இதையும் படியுங்கள் : 17வது ஐபிஎல் தொடர் | மும்பை இந்தியன்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று மோதல்!…

தொடக்க ஆட்டக்காரரான ஜாஸ் பட்லரும், அவருக்கு பின் வந்த ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சனும் பூஜ்ஜியம் ரன்களுக்கு ஆட்டமிழந்து ராஜஸ்தான் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தனர். இதையடுத்து, யாஷஸ்வி ஜெய்ஸ்வால் – ரியான் பராக் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ஜெய்ஸ்வால் 67 ரன்களும், ரியான் பராக் 77 ரன்களும் விளாசி ஆட்டமிழந்தனர்.இதன்பின்னர் வந்த ஷிம்ரன் ஹெட்மயர் 13 ரன்களிலும், துரெவ் ஜுரெல் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இறுதி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்தில் 1 ரன், 2வது பந்தில் 2 ரன்கள், 3வது பந்தில் பவுண்டரி, 4வது பந்தில் 2 ரன்கள், 5வது பந்தில் 2 ரன்கள் விளாசப்பட்டது. கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், புவனேஷ்வர் குமார் வீசிய பந்தில் ரோவ்மன் பவல் LBW அவுட்டானார். இதன்மூலம் 1 ரன் வித்தியாசத்தில் ஹைதரபாத் அணி த்ரில் வெற்றி பெற்றது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.