சென்னையில் ’வானவில் சுயமரியாதை பேரணி’ – பாலஸ்தீனம், காஸாவிற்கு ஆதரவாக இடம்பெற்ற பதாகைகள்!

சென்னையில் ’வானவில் சுயமரியாதை பேரணி’ நேற்று நடைபெற்ற நிலையில் பாலஸ்தீனம் மற்றும் காஸாவிற்கு ஆதரவு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் இடம்பெற்றன. சென்னையில் 16-வது தன்பாலின மற்றும் பால் புதுமையினர் நடத்திய வானவில் சுயமரியாதை பேரணி…

சென்னையில் ’வானவில் சுயமரியாதை பேரணி’ நேற்று நடைபெற்ற நிலையில் பாலஸ்தீனம் மற்றும் காஸாவிற்கு ஆதரவு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் இடம்பெற்றன.

சென்னையில் 16-வது தன்பாலின மற்றும் பால் புதுமையினர் நடத்திய வானவில் சுயமரியாதை பேரணி நேற்று கோலாகலமாக நடைபெற்றது. சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் சாலையில் மிகப் பிரம்மாண்டமாக இந்த பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சர்வதேச அளவில் தன் பாலின மற்றும் பால் புதுமையின LGBTQIA+ மக்கள் ஒவ்வொரு ஆண்டும் தங்கள் உரிமைகளை வலியுறுத்தி ஜூன் மாதத்தை பிரைட் மாதமாக கொண்டாடுகிறார்கள். இந்த மாதத்தில் உலகம் முழுவதும் உள்ள LGBTQIA+ மக்களுக்கு ஆதரவாகவும், சமூகத்தில் அவர்களுக்கு எதிராக நடைபெறும் அநீதிகளை கண்டித்தும் பேரணி நடத்துவார்கள்.

அந்தவகையில், சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை வானவில் கூட்டமைப்பு சார்பில் தமிழ்நாடு சுயமரியாதை வானவில் பேரணி நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டுக்கான வானவில் சுயமரியாதை பேரணி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த பேரணியில் திரைப் பிரபலங்கள், செயல்பாட்டாளர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான LGBTQIA+ மக்கள் பங்கேற்றனர். வானவில் சுயமரியாதை பேரணியில் சென்னை மட்டுமின்றி, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட பல நகரங்களில் இருந்தும் வந்திருந்த மக்கள் இந்த பேரணியில் கலந்து கொண்டனர்.

தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, ஒடியா என பல மொழிகளிலும் LGBTQIA+ சமூகத்தினருக்கு ஆதரவாக பதாகைகளை கையில் ஏந்தி எங்கள் பாலினம், எங்கள் உரிமை… எனது உடல் எனது உரிமை’ என்று முழக்கங்களை எழுப்பினர். மேலும், இந்த பேரணியின் போது மேளதாளம், ஆட்டம், பாட்டத்துடன் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இதேபோல ஃபாலஸ்தீனத்திற்கு ஆதரவான முழக்கங்கள் அடங்கிய பதாகைகளை பேரணியில் கலந்து கொண்டவர்கள் ஏந்தியிருந்தனர். காஸாவில் உடனடியாக போரை நிறுத்த வேண்டும், பாலஸ்தீனம் விடுதலை பெறாமல் சுயமரியாதோடு வாழ முடியாது உள்ளிட்ட பதாகைகள் பேரணியில் பங்கேற்றோரை வெகுவாக கவர்ந்தது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.