சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த மழை காரணமாக, சென்னை விமானநிலையத்தில் 5 சர்வதேச விமானங்கள் உட்பட 38 விமானங்களின் சேவைகள் தாமதமாகின.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், நேற்று இரவு சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதனால், சென்னை விமான நிலையத்தில் நேற்று மாலையிலிருந்து நள்ளிரவு வரையில், விமான சேவைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டன.
சென்னைக்கு வந்த 18 விமானங்கள், தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டமடித்து பறந்தன. மழை சிறிது ஓயும் போது, விமானங்கள் ஒன்றன்பின் ஒன்றாக தரையிறங்கின. அதேபோல் சென்னையில் இருந்து புறப்பட்ட 20 விமானங்கள், ஒரு மணி நேரத்தில் இருந்து 2 மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டு சென்றன.
இதன் மூலம், சென்னை விமான நிலையத்தில் 18 வருகை விமானங்கள், 20 புறப்பாடு விமானங்கள் என மொத்தம் 38 விமானங்களின் சேவைகள் தாமதம் ஆகியதால், பயணிகள் அவதியடைந்தனர்.







