மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (ஜூன்.28) தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதையும் படியுங்கள் : வால்பாறை சட்டமன்றத் தொகுதி காலியானதாக அறிவிப்பு
தொடர்ந்து, நாளை முதல் ஜூலை 4ம் தேதி வரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், பெரம்பலூர், மதுரை, சிவகங்கை, தேனி, தென்காசி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.







