நேஷ்னல் ஹெரால்டு நிதிமுறைகேடு வழக்கில் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இன்றும் ஆஜரானார்.
நேஷ்னல் ஹெரால்டு நிதிமுறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ராகுல் காந்தி, கடந்த வாரம் திங்கள், செவ்வாய் மற்றும் புதன் ஆகிய 3 நாட்கள் அமலாக்கத்துறை விசாரணையில் ஆஜரானார்.
அவர் மீண்டும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை உத்தரவிட்டது.
எனினும், தனது தாயாரும் காங்கிரஸ் தலைவருமான சோனியா காந்தி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் அவருடன் இருக்க வேண்டியுள்ளது என்றும் எனவே, விசாரணையை திங்கள் கிழமைக்கு ஒத்திவைக்குமாறும் ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதை அமலாக்கத்துறை ஏற்றுக்கொண்டதை அடுத்து இன்று அவர் விசாரணையில் ஆஜரானார்.
கடந்த வாரம் அவர் விசாரணைக்கு ஆஜராகும்போதெல்லாம் காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும் டெல்லியில் தொடர் போராட்டங்களை நடத்தினர். இதனால், பலர் தடுப்புக் காவலில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தங்களது வியூகத்தை மாற்றியுள்ள காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, சல்மான் குர்ஷித், வி. நாராயணசாமி, கே. சுரேஷ் உள்ளிட்டோர் ஜந்தர் மந்தரில் அமர்ந்து அறவழியில் போராடி வருகின்றனர்.
மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கையை கண்டித்தும், அக்னிபாத் திட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடைபெற்று வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், குடியரசு் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இன்று மாலை சந்திக்க உள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். அப்போது, டெல்லி அக்பர் சாலையில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்துக்குள் போலீசார் அத்துமீறி நுழைந்தது குறித்தும், அக்னிபாத் திட்டத்தை திரும்ப்ப பெற வலியுறுத்தியும் குடியரசுத் தலைவரிடம் மனு அளிக்க உள்ளதாக அக்கட்சியின் மற்றொரு மூத்த தலைவர் அஜய் மக்கான் தெரிவித்துள்ளார்.











