வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், தாய்லாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
பேங்காக் நகரில் அவர் அந்நாட்டுவாழ் இந்தியர்களிடையே உரையாற்றினார். அப்போது அவரிடம் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் மத்திய அரசு மற்றும் மாநில அரசுக்கு இடையிலான மோதல் போக்கு குறித்து கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்தார் அமைச்சர் ஜெய்சங்கர், “நான் வெளிநாடுகளில் இருக்கும்போது இந்திய அரசியலில் தலையிடுவதில்லை. உங்களுக்கு அந்தக் கேள்வியை என்னிடம் கேட்க வேண்டுமென்றால் இந்தியாவுக்கு வந்து கேளுங்கள். நான் மிகவும் மகிழ்ச்சியாக அந்தக் கேள்விக்கு பதில் கூறுகிறேன்.
இந்தியா-தாய்லாந்து நல்லுறவு, தற்சார்பு இந்தியா, வர்த்தகம் செய்வதில் கடினமின்மை, இந்தியப் பல்கலைக்கழகங்கள், ரஷ்யா-உக்ரைன் இடையே போர் நடந்து கொண்டிருக்கும் போதிலும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்வது போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இந்தக் கேள்விகளுக்கு அமைச்சர் ஜெய்சங்கர் பதிலளித்து கூறியதாவது:
கடவுச்சீட்டுகள் கொடுப்பதற்கு பல மாதங்கள் வரை ஆன காலம் எல்லாம் உண்டு. ஆண்டுக்கணக்கில் கூட ஆகி இருக்கிறது. தற்போது சில தினங்களில் கடவுச்சீட்டு அளிக்கப்படுகிறது. இந்தியாவில் தொழில் தொடங்குவது என்பது இப்போது மிகவும் எளிதாகி இருக்கிறது. காகிதமற்ற டிஜிட்டல் முறையை ஊக்கப்படுத்தி இருக்கிறோம். அன்னிய செலாவணி முதலீடும் நல்ல நிலையில் இருக்கிறது என்றார் அமைச்சர் ஜெய்சங்கர்.








