32.2 C
Chennai
May 20, 2024
முக்கியச் செய்திகள் கட்டுரைகள் சினிமா

இசை உலகின் பேரரசி ஸ்ரேயா கோஷலின் கதை.


சபரிஷ்

அந்த ஒரு குரல்.. பல சாதனைகளை படைத்தும், உடைத்தும் உள்ளது அந்த குரல்..எந்த ஒரு இளம் பாடகியும் அடைந்திடாத புகழுக்கு சொந்தகாரி அவர் இசை மேடைகளில், மேக் சம் நாய்ஸ், (make some noise) கம் ஆன் எவ்ரிபடி சிங் வித் மி (come on everybody sing with me) என அந்த குரல் ஒலித்ததும், ரசிகர்களின் ஆரவாரம் விண்னை பிளக்கும் ஒட்டுமொத்த இந்திய திரை ரசிகர்களாலும் கொண்டாடப்படும் மெல்லிசை ராணி ஸ்ரேயா கோஷலுக்கு நிகர் எவருமில்லை

சுசீலா, ஜானகி, சித்ரா, சுஜாதா என தமிழ் சினிமா ரசிகர்களை தன்னுடைய இன்னிசை குரலால் கட்டிபோட்ட பாடகிகள் வெகு சிலரே. தலைமுறைகளை தாண்டியும் அவர்களது குரல், இன்றும் கேட்பவர்கள் அனைவரையும் மதிமயங்க செய்யக்கூடியவை. அந்த வகையில் இந்த தலைமுறை, அதாவது 90s மற்றும் 2K கிட்ஸ்களின் FAVOURITE பாடகி என்றால், அது ஸ்ரேயா கோஷலாக மட்டும் தான் இருக்க முடியும்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இசை உலகில் அவருடைய குரல் தனித்துவமானது. லய்வ் கான்சர்ட்டில் ரசிகர்களை இசை மழையில் நனைய வைக்க அந்த குரல் ஒருபோதும் தவறியதே இல்லை. மேக் சம் நாய்ஸ்,(make some noise) கம் ஆன் எவ்ரிபடி சிங் வித் மி (come on everybody sing with me) என மேடையில் ஸ்ரேயாவின் குரல் ஒலித்ததும், விண்னை பிளக்கும் ரசிகர்களின் ஆரவார குரல்களை நம்மால் கேட்க முடியும். இசை உலகின் மெல்லிசை ராணி என்று தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளிலும் ஸ்ரேயா கோஷல் பாடியுள்ளார். தமிழகம் உட்பட ஒட்டுமொத்த இந்திய திரை ரசிகர்களாலும் இன்று கொண்டாடப்படும் ஒரே பாடகி ஸ்ரேயா கோஷல்..

பல மொழித் திரைப்படங்களிலும் பின்னணிப் பாடல்களை நான்கு முறை தேசிய விருதும், ஏழு முறை ஃபிலிம்பேர் விருதும், பத்து முறை தென்னிந்திய ஃபிலிம்பேர் விருதுகளையும் வென்றுள்ளார். திரைப்படங்களில் மட்டுமல்லாமல் ஆல்பங்களையும் பல்வேறு இந்திய மொழிகளில் வெளியிட்டுள்ள அவர், இதன் மூலம் இந்திய சினிமாவின் முன்னணி பாடகியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.

1984 ஆம் ஆண்டு மார்ச் 12ம் தேதி, மேற்கு வங்கம் மாநிலம், பெர்ஹாம்பூர் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் பிறந்தார் ஸ்ரேயா கோஷல். 4 வயது முதலே அவர் பாடுவதற்கான பயிற்சி அளிக்க தொடங்கினார் அவரது தாய் ஷர்மிஸ்தா. அவரது தந்தை பிஷ்வாஜித் கோஷல் ஒரு மின் பொறியியலாளர். ராஜஸ்தானின் கோட்டா அருகே ராவத்பட்டாவில் இருந்த இந்திய அணுசக்தி கழகத்தில் அவர் பணிபுரிந்ததார். இதனால் எட்டாம் வகுப்பு வரை ராவத்பட்டாவில் உள்ள அணுசக்தி மத்திய பள்ளியில் படித்தார் கோஷல். படிப்புடன் சேர்த்து இசையிலும் ஜொலிக்க தொடங்கினார். 1997ஆம் ஆண்டில், அவரது தந்தை பாபா அணு ஆராய்ச்சி மையத்திற்கு பணி மாற்றப்பட்டபோது, அவர் தனது குடும்பத்தினருடன் மும்பைக்கு இடம்பெயர நேரிட்டது. அங்கு அனுஷக்தி நகரில் உள்ள அணுசக்தி மத்திய பள்ளியில் பயின்றார். பின் அறிவியல் பட்ட படிப்பிர்காக மும்பையில் உள்ள SIES கல்லூரியில் சேர்ந்தார்.

ஸ்ரேயா கோஷலின் ஆஸ்தான குருவே அவரது தாய் சர்மிஸ்தா கோஷல்தான். ஸ்ரேயா கோஷலின் ஒத்திகைகளில் அவருக்கு உதவுவதோடு, அவர் போகுமிடமெல்லாம் தம்புறாவை அவருடன் தூக்கிச் சென்றார். ஸ்ரேயா கோஷலின் வெற்றிக்கு முழுமுதற்காரணம் அவரது தாயார் மட்டும் தான். ((குரலையும் கேரியரையும் பட்டதில் அவரது தாயார் சர்மிஸ்தா கோஷலுக்கே பெரும் பங்குள்ளது. பெரும்பாலும் பெங்காலி பாடல்களை பாடி வந்த அவர் தனது ஆறாவது வயதில் இந்துஸ்தானி இசையையும் கற்றுக்கொண்டார். அதன்பிறகு மறைந்த கல்யாஞ்சி பாயிடமிருந்து சுமார் 18 மாதங்களுக்கு பயிற்சிப் பெற்றார். மேலும் மும்பையில் மறைந்த முக்தா பைடேவுடன் தனது பாரம்பரிய இசை பயிற்சியைத் தொடர்ந்தார். ஸ்ரேயா கோஷலின் முதல் மேடை செயல்திறன் ஒரு கிளப்பின் ஆண்டு விழாவில் தான் அரங்கேறியது அப்போது அவருக்கு வயது ஆறு, அதன் பின் ​​இந்துஸ்தானி கிளாசிக்கல் இசையில் தனது பாடங்களைத் தொடங்கினார். 1995ஆம் ஆண்டில், அகில இந்திய அளவில் நடந்த இசை போட்டி ஒன்றில், அவர் பங்கேற்று வெற்றி பெற்றார். இசைத்துறையில் அவர் ருசித்த முதல் வெற்றி அது.

2000ஆம் ஆண்டில் அவரது பதினாறு வயதில், ஜீ தொலைக்காட்சியில் நடைபெற்றற இசை ரியாலிட்டி ஷோவான சா ரே கா மா வில் பங்கேற்று வெற்றிபெற்றார்… இந்த வெற்றிதான் அவருக்கான் சினிமா பாடல் வாய்ப்புகளை தேடிதந்தது. 2015ஆம் ஆண்டு பிப்ரவரி 5 அன்று ஸ்ரேயா கோஷல் தனது குழந்தை பருவ நண்பர் ஷிலாதித்யா முகோபாத்யாவை திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்வதற்கு முன் இருவரும் கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் காதலித்து வந்தனர்.ஸ்ரேயா கோஷலின் ஆல் டைம் ஃபேவரட் சிங்கர் லதா ஜி எனவும் அவர் தனது உத்வேகம் எனவும் பல முறை நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

தேவதாஸ் படத்திற்கு முன்பாகவே ஸ்ரேயா முதன் முதலில் பதிவு செய்த பாடல் “கன்ராஜ் ரங்கி நச்சாடோ”, இது லதா மங்கேஷ்கர் பாடிய மராத்தி பாடலின் அட்டைப் பதிப்பாகும். 1998 ஜனவரி 1 அன்று அவரது முதல் ஆல்பம் பெந்தேச்சி பீனா(Bendhechhi Beena) 14 தடங்களுடன் வெளியிடப்பட்டது. மேலும் அவரது முந்தைய ஆல்பங்களான ஓ டோட்டா பக்கி ரே, சக்தி கத மற்றும் முகோர் போராக் மற்றும் 2001 2002 இல் பெங்காலி ஆல்பமான ரூபாசி ரேட், பானோமலி ரீ ஆகியவை பதிவு செய்தார். பின்னர் 2007 இல் கிருஷ்ணா பினா ஆச்சே கே போன்ற ஆல்பங்களில் பக்தி பாடல்களைப் பதிவு செய்தார்.

சா ரே கா மா நிகழ்ச்சியில் பங்கேற்றபோது பிரபல இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலியின் கவனத்தை ஈர்த்தார் ஸ்ரேயா. பன்சாலியின் தாயார் பார்வையாளராக அந்த நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தார், பின் ஸ்ரேயா கோஷலின் அடுத்த செயல்திறனை காண சஞ்சய் லீலா பன்சாலியை அழைத்தார், அப்போது அவரது குரலை கேட்ட இயக்குநர் பன்சாலி, தனது அடுத்த படத்தில் அவருக்கு ஒரு வாய்ப்பை வழங்க முடிவு செய்தார். 2002 ஆம் ஆண்டு ஷாருக் கான், ஐஸ்வர்யா ராய் நடிப்பில் வெளியான தேவ்தாஸ் படம் மூலம் திரை உலகுக்கு அவரை அறிமுகப்படுத்தினார். பன்சாலியின் கூற்றுப்படி, தேவதாஸ் திரைப்படத்தில் கதாநாயகியின் கதாபாத்திரத்திற்குத் தேவையான அப்பாவித்தனத்தை கோஷலின் குரல் கொண்டிருந்தது என அவர் நம்பினார். அவர் பாடிய முதல் பாடலுக்கு தேசிய விருது தேடி வந்தது. அன்று தொடங்கி இன்று வரை இசையுலகின் நிகரில்லாத ராணியாக வலம் வருகிறார் ஸ்ரேயா கோஷல்.

“பைரி பியா” பாடல் பதிவு செய்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட ஸ்ரேயா கோஷல் பாடலை இறுதியாக பதிவு செய்வதற்கு முன்பு ஒரு முறை ஒத்திகை பார்க்கும்படி அவரிடம் கூறியுள்ளார் பன்சாலி. அப்போது கண்களை மூடிக்கொண்டு இடைவெளி இல்லாமல் பாடியுள்ளார் ஸ்ரேயா. பாடிய பிறகு கண்களைத் திறந்தபோது, ​​ரெக்கார்டிங் அறையில் இருந்தவர்கள் அனைவரும் ஏது பேசாமல் அமைதியாக இருந்துள்ளனர். அவர் பாடிய விதம் பன்சாலிக்கு பிடித்திருக்குமா என்ற பயத்துடன் அவரை பார்த்துள்ளார் ஸ்ரேயா. பன்சாலியோ, பாடலை சிறப்பாக பாடினீர்கள் என ஸ்ரேயாவை பாராட்டினார். இந்த உற்சாகத்தில் பாடலை ஒரே டேக்கில் பதிவு செய்து அசத்தினார் ஸ்ரேயா கோஷல். இவரது திறமையை பார்த்த பன்சாலி அதே படத்தில் பின் “டோலா ரே” என்ற பாடலையும் அவரை பாட வைத்தார் பன்சாலி.

அந்த பாடலுக்காக சிறந்த பெண் பின்னணி பாடகிக்ககான முதல் பிலிம்பேர் விருதை தட்டிசென்றார் ஸ்ரேயா. மேலும் புதிய இசை திறமைக்கான பிலிம்பேர் வழங்கும் ஆர்.டி. பர்மன் விருதையும் பெற்றார். தேவதாஸ் திரைப்பட பாடல்கள் மூலம் உடனடி வெற்றியைப் பெற்றதும், அவரது குரலில் பாடல்களைப் பதிவு பல்வேறு மொழிகளை சேர்ந்த இசையமைப்பாளர் அணிவகுக்க தொடங்கினர். அவரது மென்மையான குரலில் வெளியான பாடல்கள் அனைத்தும் ஹிட்டடிக்க கிளாசிக்கல் மற்றும் செமி கிளாசிக்கல் பாடல்கள் மட்டுமே அவரை தேடி வந்தன. இந்த ட்ரெண்டை 2003ம் ஆண்டு வெளியான ஜிஸ்ம் திரைப்படத்தில் உடைத்தார் ஸ்ரேயா. இதன் மூலம் எல்லா வகை பாடல்களையும் பாடக்கூடியவர் என நிரூபித்து காட்டினார். இதனையடுத்து ஹிந்தியில் மயம் கொண்டிருந்த ஸ்ரேயா என்ற புயல் தென்னகத்தை நோக்கி பார்வையை திருப்பியது. மேலும் 2002ம் ஆண்டில் தமிழ் திரையுலகிற்கும், 2003ம் ஆண்டில் தெலுங்கு மற்றும் மலையாள திரையுலகிலும் தடம் பதித்தார்.

இசைஞானி இளையராஜாவின் மூத்த மகனான கார்த்திக் ராஜா தான் ஸ்ரேயா கோஷலை தமிழ் திரை உலகிற்க்கு அறிமுகப்படுத்தினார் 2002ல் வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான ஆல்பம் திரைப்படத்தில், நா. முத்துக்குமார் வரிகளில் அமைந்த செல்லமே செல்லம் என்றாயடி பாடல் பாடியதன் மூலம் தமிழர்களின் நெஞ்சில் இடம்பிடித்தார். பின் அதே ஆண்டில் தங்கர் பச்சன் இயக்கத்தில் வெளியான சொல்ல மறந்த கதை படத்தில் குண்டு மல்லி என்ற பாடலை பாடினார் அது தான் இளையராஜாவின் இசையில் அவர் பாடிய முதல் பாடல். இதனையடுத்து அவருக்கு தமிழில் வாய்ப்புகள் அதிகரிக்க தொடங்கின.

பாலு மகேந்திரா இயக்கி மீண்டும் இளையராஜாவின் இசையில் வெளியான ஜூலி கணபதி திரைப்படத்தில் , எனக்கு பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே என்ற பாடல் அனைவரின் உள்ளத்தை கொள்ளையடித்தது. பின் அதே ஆண்டில் மீண்டும் இளையராஜாவின் கூட்டணியில் பாலா இயக்கத்தில் வெளியான பிதாமகன் படத்தில், இலங்காத்து வீசுதே என்று அவர் பாடிய பாடல் இன்றும் தமிழர்களின் நெஞ்சங்களில் தென்றலாக வீசிக்கொண்டிருக்கிறது ஹிந்தி, தெலுங்கு மலையாளம் என வாய்ப்புகள் அதிகரிக்க தொடங்கினாலும் தமிழில் அவருக்கு கிடைத்த பாடல்கள் அவரை இசைரசிகர்கள் மத்தியில் கொண்டாட வைத்தது என்றே கூறலாம். 2004ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கி யுவன் சங்கர் ராஜா இசை அமைத்து வெளியான 7 ஜி ரெயின்போ காலனி படத்தில் இவர் பாடிய நினைத்து நினைத்து பார்த்தால் என்ற பாடல் காதல் தோல்வியில் துவண்டிருக்கும் பலரது மனங்களை ஸ்ரேயாவின் குரல் வருடி சென்றது மேலும் அதே ஆண்டில் வெளியான வசூல் ராஜா எம்.பி.பி.எஸ், விருமாண்டி ஆகிய படங்களில் உலக நாயகன் கமல்ஹாசனுடன் இனைந்து அவர் பாடிய பாடல்கள் மூலம் பட்டி தொட்டி எங்கும் இவர் பிரபலமானார்.

இந்த கால கட்டத்தில் ஒரே நேரத்தில் பாலிவுட், கோலிவுட் மட்டுமின்றி டோலிவுட் மாலிவுட் சன்டில்வுட் என அனைத்து திரைப்படத் துறையிலும் பயணிக்க தொடங்கினார் ஸ்ரேயா. 2005 ஜூன் 24 இல் அமோல் பலேகர் இயக்கத்தில் பஹேலி (Paheli) திரைப்படம் வெளியானது இப்படத்தில் “தீரே ஜல்னா” என்ற பாடலுக்காக தனது இரண்டாவது தேசிய விருதை பெற்றார் ஸ்ரேயா கோஷல் இந்த பாடல் இந்தி திரைப்பட இசையின் கிளாசிக்கல் மற்றும் பிரபலமான வகைகளுக்கு இடையிலான சிறந்த சமநிலையில் மிதக்குகிறது என்று இசை ரசிகர்கள் சிலாகித்தனர். பின் 2006ஆம் ஆண்டு வெளியான அந்நியன் படத்தில் அண்டங்காக்கா கொண்டக்காரி, அது ஓரு கனா காலம் படத்தில் அந்த நாள் ஞாபகம், தாஸ் படத்தில் சாமி கிட்ட சொல்லிபுட்டன், சண்டக்கோழி படத்தில் தாவனி போட்ட தீபாவளி, கண்ட நாள் முதல் படத்தில் பனித்துளி பனித்துளி என இவர் பாடிய அனைத்து பாடல்களும் ஹிட் அடிக்க இசைத்துறையில் மூடிசூடா ராணியாக வலம் வரத் தொடங்கினார்

2006ஆம் ஆண்டில் ஹ்ரிதிக் ரோஷன் நடிப்பில் ராஜேஷ் ரோஷன் இசையமைத்து வெளியான க்ரிஷ் படத்தில் பியார் கி ஏக் கஹானி, கோய் தும்சா நஹின் மற்றும் சோரி சோரி சுப்கே சுப்கே ஆகிய பாடல்களை பாடினார், இதன் மூலம் ஹிந்தி ரசிகர்களையும் அவரது குரல் மூலம் வசியம் செய்தார். இந்த வெற்றிகளுக்கு பிறகு தான் சிறந்த திரைப்பட பாடகிகள் வரிசையில் ஸ்ரேயாவும், தனக்கென தனி இடத்தை உருவாக்கிவிட்டார் என இசை விமர்சகளர்கள் பாராட்டத் தொடங்கினர். 2006ஆம் ஆண்டில் வெயில் படத்தில் அமைந்த உருகுதே மருகுதே பாடல் கிராமங்கள் பக்கம் ஸ்ரேயாவின் குரலை கொண்டு சென்றது. சூர்யா, ஜோதிகா மற்றும் பூமிகா நடிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் இடம் பெற்ற முன்பே வா என் அன்பே வா பாடல் காதலர்கலுக்கு மட்டுமில்லாமல் 90’s கிட்ஸ்களின் ஆள் டைம் ஃபேவரிட் பாடலாக இன்றும் இருந்து வருகிறது. தனது கேரியரில் அமைந்த மிகச் சிறந்த பாடல் முன்பே வா என ஒரு நேர்காணலில் தெறிவித்துள்ளார் ஸ்ரேயா. மேலும் இந்த பாடலுக்காக முதல் தென்னிந்திய ஃபிலிம்பேர் விருதையும், முதல் தமிழ்நாடு மாநில திரைப்பட விருதும் அவருக்கு கிடைத்தது. 2007ம் ஆண்டு மணி ரத்னம் இயக்கி ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியான குரு படத்தில் வரும் “பார்சோ ரே” என்ற பாடலைப் பாடினார். ஏ.ஆர். ரகுமான் இசையில் அவருக்கு மேலும் ஒரு மகுடமாக அமைந்தது. இந்த பாடலுக்காக அவருக்கு மூன்றாவது பிலிம்பேர் விருது கிடைத்தது

அதே ஆண்டு ப்ரீதம் இசையில் ஜப் வீ மெட் (Jab we met) திரைப்படத்தில் இடம் பெற்ற யே இஷ்க் ஹாயே (Yeh Ishq Haye) பாடலுக்காக சிறந்த பெண் பின்னணி பாடகிக்கான தனது மூன்றாவது தேசிய விருதைப் பெற்றார். 2008 ல் பெங்காலி திரைப்படமான அன்டாஹீன் மற்றும் மராத்தி திரைப்படமான ஜோக்வா ஆகிய படங்களில் பாடியதற்காக தனது நான்காவது தேசிய விருதை வென்றார். தொடர்ச்சியாக இரண்டு முறை தேசிய விருதை வென்றது அரிதான சாதனைகளில் ஒன்றாகும். தொடர்ச்சியாக இரண்டு முறை தேசிய விருது வென்று சாதனை பட்டியலை முதலில் உருவாக்கியவர்கள் லதா மங்கேஷ்கர், பி.சுஷீலா, கே.எஸ். சித்ரா ஆகியோர் மட்டுமே 2008ம் ஆண்டு ஸ்ரேயா கோஷல் மற்றொரு வெற்றி பாடலைப் பதிவு செய்தார் அது பிரிதம் சக்ரவர்த்தி இசையில் சிங் இஸ் கிங் படத்தில் இடம் பெற்ற தேரி ஓர் என்ற பாடல். இந்த பாடல் இசை விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இருப்பினும் அவருக்கு மேலும் ஒரு ஃபிலிம்ஃபேர் விருதையும் பெற்றுதந்தது.

தமிழில் 2010ம் ஆண்டு ஜி. வி. பிரகாஷ் இசையமைத்த அங்காடி தேரு படத்தில் உன் பேரை சொல்லும் போதே பாடலுக்காக தனது இரண்டாவது தென்னிந்திய ஃபிலிம்பேர் விருதுதை வென்றார் மேலும் ராவணன், மைனா, எந்திரன் ஆகிய படங்களில் இடம் பெற்ற பாடல்களை காட்டிலும் கௌதம் மேனன் இயக்கி ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் அமைந்த மன்னிப்பாயா என்று ஒலித்த அந்த குரல் நம்மை உருகவே செய்தது. ஏ. ஆர். ரகுமான் காம்பினேஷனில் இவர் பாடிய பாடல்கள் அனைத்துமே காலத்தை தாண்டி என்றும் கொண்டாடப்படக்கூடிய பாடல்கள். 2011ஆம் ஆண்டு பாலிவுட்டில் ஹிமேஷ் ரேஷாமியா இசை அமைத்து சல்மான் கான் நடித்து வெளியான பாடிகார்ட் படத்தில் (Rahat Fateh Ali Khan) ரஹத் ஃபதே அலி கானுடன் இனைந்து பாடிய “தேரி மேரி” பாடலை தனது மாயாஜால குரலில் பதிவு செய்திருப்பார் இன்றலவும் அந்த பாடல் கோஷலின் டாப் 10 வரிசையில் உள்ளது…

நூற்றுகணக்கான பாடலை பாடிய பின்னும் ஸ்ரேயா கோஷல் மெலோடி பாடல்கள் மட்டுமே சிறப்பாக பாடுகிறார், சம கால பாடகிகள் போல விதவிதமான பாடல்களை பாடுவதில்லை என்று குற்றச்சாட்டு முன்வைக்க தொடங்கினர். இந்த நிலையில் தான் வித்யா பாலன் நடிப்பில் வெளியான தி டர்ட்டி பிக்சர் திரைப்படத்தில் ஊ லா லா என்ற பாடலை பாடினார் ஸ்ரேயா. இது வழக்கமாக அவர் பாடும் மெலடியாக இல்லாமல் துள்ளல் இசையில் அதிரடியாக அமைந்தது. இந்த பாடல் அவருக்கு பல்வேறு விருதுகளை வாங்கி கொடுத்தது. 2012 இல் தமிழில் வெளியான மாற்றான், சுந்தரபாண்டியன், கும்கி ஆகிய படங்களில் அவர் பாடிய பாடல்கள் அனைத்து பிரபலமானவை. குறிப்பாக இதில் கும்கியில் இடம் பெற்ற சொல்லிடாலே பாடலுக்காக இராண்டாவது முறையாக தமிழ்நாடு அரசின் சிறந்த பாடகிக்கான திரைப்பட விருதை பெற்றார்.

ஸ்ரேயா கோஷல் தனது பாடும் பாணியை பெரிய அளவில் மாற்றி, துருப்புக்களை எழுப்புகிறார். அவர் காலத்தின் தேவையாக இருந்த பழமையான சுவையை பெறுகிறார், மேலும் அவரது விளக்கக்காட்சியில் மிகச்சிறப்பாக இருக்கிறது எல்லா சந்தர்ப்பங்களுக்கும் தான் ஒரு சிறந்த பாடகி என்பதை நிரூபிக்கிறார் மேலும் சூழ்நிலையின் தேவைக்கேற்ப எந்தவொரு பயன்முறையிலும் தன்னால் பொருந்த முடியும் என்பதை மிக நேர்த்தியாக வெளிகாட்டியுள்ளார் என்று சந்தானியா பாடலை கேட்ட பின் பாலிவுட் ஹங்காமாவை சேர்ந்த ஜோகிந்தர் துட்டேஜா புகழாரம் சூட்டினார். அதே ஆண்டில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வெளியான ஜப் தக் ஹை ஜான் படத்தில் மோஹித் சவுகானுடன் இனைந்து பாடிய சான்ஸ் என்ற பாடல் 2012ஆம் ஆண்டின் மிகவும் மனதை கவர்ந்த காதல் பாடல் என்ற பட்டத்தை வென்றது. இது ஒரு புறமிருக்க ஹிர்திக் ரோஷன், பிரியங்கா சோப்ரா நடிப்பில் வெளியான அக்னீபத் திரைப்படத்தில் இடம் பெற்ற சிக்னி சம்மேலி அனைத்து தரப்பு ரசிகர்களையும் குத்தாட்டம் போட வைத்தது

இந்த காலகட்டத்தில் தான் நெய்னா மெய்ன் சப்னா(Naino Mein Sapna) என்ற பாடலுக்காக லதா மங்கேஷ்கருடன் ஒப்பிட்டு அவருக்கு மாற்று ஸ்ரேயா கோஷல் தன் என்று பொழுதுபோக்கு வலைத்தளமான கொமோயைச் (KOIMOI) சேர்ந்த சிவி(shivi) கூறினார். 2014 இல் தமிழில் டி.இம்மான் இசை அமைத்து விஜய் காஜல் அகர்வால் நடித்து வெளியான ஜில்லா படத்தில் இடம் பெற்ற கண்டாங்கி கண்டாங்கி பாடலை விஜயுடன் இணைந்து பாடினார் ஸ்ரேயா கோஷல். ஏ.ஆர். ரகுமான், இளையராஜா காம்பினேஷன் பெரிதாக பேசப்பட்டாலும், இவர்களை விட இமான் கூட்டணியில் ஸ்ரேயா பாடிய பாடல்கள் தான் பட்டி தொட்டி எங்கும் ஸ்ரேயாவின் குரலை கொண்டு சென்றது. மிருதன் படத்தில் மிருதா மிருதா, தேசிங்கு ராஜா படத்தில் அம்மாடி அம்மாடி, நம்ம வீட்டு பிள்ளை படத்தில் மைலாஞ்சி என அவர் காம்பினேஷனில் பாடிய பாடல்கள் அனைத்தும் ரசிகர்களின் மனங்களை கவர்ந்தன. அதே ஆண்டின் பிற்பகுதியில் விஷால் மற்றும் சேகர் இசையமைத்து சாருக் கான் தீபிகா படுகோனே நடித்து வெளியான ஹப்பி நியூ யர் படத்தில் இடம் பெற்ற மன்வா லாகே பாடலை அரிஜித் சிங்குடன் இனைந்து பாடினார் இந்த பாடல் உலகளவில் யூடியூப்பில் 48 மணி நேரத்தில் இரண்டு மில்லியன் பார்வையாளர்களைத் தாண்டியது.

2015ஆம் ஆண்டு ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பிரம்மாண்ட இயக்குநர் சங்கர் இயக்கிய ஐ திரைப்படத்தில் இடம் பெற்ற பூக்களே சற்று ஓய்வெடுங்கள் பாடலை, தமிழ் மற்றும் தெலுங்கிள் ஹரிச்சரனுடன் இந்தியில் அரிஜித் சிங்குடனும் இணைந்து பாடினார் ஸ்ரேயா. ((அதில் தமிழ் பதிப்பு நேர்மறையான விமர்சனங்களை சந்தித்தது பெரும்பாலான விமர்சகர்கள் கோஷலின் குரலைப் பாராட்டினர் ))தமிழ் பதிப்பில் ஹரிச்சரனின் தெளிவான குரலும் ஸ்ரேயாவின் இந்துஸ்தானி கலந்த இன்னிசை குரலும் பாடலுக்கு மெருகேற்றின. இயக்கப்படும் பாடல், இங்கே ஒரு விளக்கம் பெற்று படத்திற்கு வழிவகுக்கிறது. ஸ்ரேயா கோஷலைப் பொறுத்தவரை அவருக்கு புதிய பெயரடைகளைக் கொண்டு வர நாம் அகராதியை ஆழமாக தோண்ட வேண்டும் என்று நைசி வி.பி. இன்டர்நேஷனல் பிசினஸ் டைம்ஸில்(IBT) குறிப்பிட்டிருந்தார். அதே 2015ஆம் ஆண்டில் கோஷல் மீண்டும் சஞ்சய் லீலா பன்சாலியுடன் இணைந்த ஸ்ரேயா, பாஜிராவ் மஸ்தானியில் மூன்று பாடல்களைப் பாடினார் தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்புகளிலும் இந்த பாடல்களை அவரே பாடினார். அதில் தீவானி மஸ்தானி என்ற பாடலுக்காக தனது ஆறாவது பிலிம்பேர் விருதைப் பெற்றார் ஸ்ரேயா. ஸ்ரேயாவின் புகழ் வளர வளர அவருக்கு எதிரான கருத்துக்கள் இயல்பாகவே எழத் தொடங்கின. இதில் முக்கியமான குரல் சின்ன குயில் சித்ராவுடையது. தனது ஆதர்ஷ பாடகிகளின் ஒருவராக ஸ்ரேயா கொண்டாடிய சித்ராவே அவரே எதிராக பேசியது ஸ்ரேயாவிற்கு அதிர்ச்சியளித்தது. மலையாள பாடகிகளுக்கு வாய்ப்பளிக்காமல் ஸ்ரேயா கோஷலுக்கே மலையாள இசையமைப்பாளர்கள் பாட வைப்பதாக குற்றம்சாட்டினார் சித்ரா. இது இசையுலகில் ஒரு சிறு புயலை கிளப்பினாலும், இந்த விவகாரத்திற்கு ஸ்ரேயா தரப்பில் இருந்து எந்த பதிலும் வராதததால் இந்த விவகாரம் பெரிதாக பேசப்படாமல் போனது.

ஹிந்தியில் பல்வேறு இசையமைப்பாளர்களுடன் இணைந்து ஸ்ரேயா பணியாற்றினாலும், ஸ்ரேயாவின் புகழை உச்சிக்கு கொண்டு சென்றவர் என்றால் அது சஞ்சய் லீலா பன்சாலிதான். படத்தை இயக்குவது மட்டுமின்றி அவரே அவரது படத்திற்கு இசையமைப்பார். அப்படி அவர் இசையமைத்த படங்களில் ஸ்ரேயா பாடிய பாடல்கள் அனைத்துமே சூப்பர் ஹிட். அந்த வரிசையில் 2018 இல் பத்மாவத் படத்திற்காக பாடிய கூமர் பாடல் நல்ல வரவேற்ப்பை பெற்றது. பின் 2019ஆம் ஆண்டு தமிழில் என் ஜி கே படங்களில் பாடிய அவர் ரசிகர்களின் பேரன்பை பெற்று அனைவருது ப்லே லிச்ட்டிலும் வளம் வருகிறார ஸ்ரேயா. குறிப்பாக டிக்டாக் பயன்படுத்துபவர்கள் மத்தியில் இந்த பாடல் மிகவும் பிரபலம். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை இந்த பாடலை டிக்டாக்கில் வீடியோவாக பதிவுசெய்துள்ளனர். ரியாலிட்டி ஷோக்கள் மூலம் இசைத்துறைக்கு அறிமுகமான ஸ்ரேயா தற்போது பல ரியாலிட்டி ஷோக்களில் ஜட்ஜாக வலம் வருகிறார். தனக்கு கிடைத்த வாய்ப்புகளை வைத்து எப்படி ஒரு வெற்றி பாடகியாக மாறினார் என்பதை, வளர்ந்து வரும் பாடகர்கள் மத்தியில் எடுத்துரைத்து அவர்களை உற்சாகப்படுத்தி வருகிறார் ஸ்ரேயா. சில ரியாலிட்டி ஷோக்களில் அவர் பங்கேற்ற போது, அவர் சில பாடல்கள் பாடியுள்ளார். அப்போது அவர் கடினமே இல்லாமல் மிகவும் எளிதாக பாடுவதை கண்ட மற்ற பாடகர்கள், ஸ்ரேயாவின் ரசிகர்களாக மாறிவிடுவார்கள்

இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் பல்வேறு நகரங்களில் தொடந்து இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இதனால் அவருக்கென தனி ரசிகர்கள் ஆர்மி உலகெங்கும் உருவாகியுள்ளது. இந்தியாவின் சிறந்த 100 பிரபலங்களின் பட்டியலில் ஃபோர்ப்ஸ் பத்திரைகையில் ஐந்து முறை இடம்பெற்றுள்ளார். 2010ம் ஆண்டு அமெரிக்க மாநிலமான ஓஹியோ(ohio)வில் அதன் அப்போதைய ஆளுநர் டெட் ஸ்ட்ரிக்லேண்ட் என்பவர் ஜூன் 26ம் தேதியை “ஸ்ரேயா கோஷல் தினம்” என்று அறிவித்து ஸ்ரேயா அவரை கவுரவித்தார். 2017ஆம் ஆண்டில் மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் மெழுகு சிலை நிருவப்பட்ட முதல் இந்திய பாடகி ஆனார் ஸ்ரேயா கோஷல். ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ள ஸ்ரேயா இசைதுறையில் இதுவரை நிகழ்த்திய சாதனைகள் ஏராளம். பிறமனிதர்களை மகிழ்விக்க கூடிய திறன் உலகில் ஒரு சிலரிடம் மட்டுமே உள்ளது. அந்த வரிசையில் தன்னுடைய குரலால் அனைவரையும் வசீகரித்து வரும் இசை உலகின் பேரரசி ஸ்ரேயா கோஷல் இந்த பூமிக்கு கிடைத்த வரம்.

– சபரிஷ், ஊடகவியலாளர்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading