“அரிசியின் தரம் கிடங்குகளிலேயே உறுதி செய்யப்பட வேண்டும்”

அரிசியின் தரம் கிடங்குகளிலேயே உறுதி செய்யப்பட வேண்டும் என்று கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம், அனைத்து மண்டல இணைப்பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளிலிருந்து…

அரிசியின் தரம் கிடங்குகளிலேயே உறுதி செய்யப்பட வேண்டும் என்று கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம், அனைத்து மண்டல இணைப்பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளிலிருந்து நியாய விலைக் கடைகளுக்கு அனுப்பப்படும் அரிசியின் தரத்தினை கிடங்குகளிலேயே உறுதி செய்து கொள்ள வேண்டும்.

தரமான அரிசியை மட்டுமே நியாய விலைக் கடைகளுக்கு அனுப்ப வேண்டும். நியாய விலைக் கடைகளுக்கு அனுப்பப்பட்ட பின்னர், தரமற்ற அரிசி கண்டுபிடிக்கப்படும் நேர்வுகளில், அவற்றை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளுக்கு திருப்பி அனுப்ப தனியே எடுத்து வைக்க வேண்டும்.

குடும்ப அட்டைதாரர்களுக்கு தரமுள்ள அத்தியாவசியப் பொருட்களை மட்டுமே விநியோகிக்கவும், நியாய விலைக் கடை பணியாளர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்க வேண்டும்.

நியாய விலைக் கடைகள் உட்புறமும் வெளிப்புறமும் தூய்மையாக இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

லாரிகளிலிருந்து இறக்கும் போதும் மற்றும் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யப்படும் போதும் அத்தியாவசியப் பொருட்கள் கீழே சிந்தாமல், பிற பொருட்களோடு கலந்து விடாமல் இருக்க வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.