“ஜெயலலிதா மரண வழக்கில் எய்ம்ஸ் நிபுணர்கள் அறிக்கை இறுதி தீர்ப்பு கிடையாது”-புகழேந்தி

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரண வழக்கில் எய்ம்ஸ் நிபுணர்கள் அறிக்கை இறுதி தீர்ப்பு கிடையாது என அதிமுக முன்னாள் நிர்வாகியும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் ஆதரவாளருமான புகழேந்தி கூறியுள்ளார். ஜெயலலிதா மரண விவகாரம் தொடர்பாக,…

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரண வழக்கில் எய்ம்ஸ் நிபுணர்கள் அறிக்கை இறுதி தீர்ப்பு கிடையாது என அதிமுக முன்னாள் நிர்வாகியும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் ஆதரவாளருமான புகழேந்தி கூறியுள்ளார்.

ஜெயலலிதா மரண விவகாரம் தொடர்பாக, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நியூஸ்7 தமிழுக்கு புகழேந்தி சிறப்பு பேட்டி அளித்தார். ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்த நீதி அரசர் ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை முடிவடைந்த நிலையில் விரைவில் அதன் அறிக்கை தாக்கல் செய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக புகழேந்தி கூறினார்.

இந்த நிலையில் தற்பொழுது ஜெயலலிதாவுக்கு அப்போலோ மருத்துவமனையில் வழங்கப்பட்ட சிகிச்சைகள் முறையானதாகவும் சரியானதாகவும் இருந்தது என எய்ம்ஸ் மருத்துவக் குழு அறிக்கை வெளியிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளதாக புகழேந்தி சுட்டிக்காட்டினார். எய்ம்ஸ் நிபுணர் குழு வெளியிட்டுள்ள அறிக்கை இறுதியான தீர்ப்பு கிடையாது என்றும் அவர் தெரிவித்தார்.

ஜெயலலிதாவின் மரணம் குறித்து முழுமையாக விசாரணை நடத்துவதற்கு நியமிக்கப்பட்ட நீதியரசர் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணையில்  150 க்கும் மேற்பட்டவர்கள் விசாரிக்கப்பட்டுள்ளனர் என்றும் புகழேந்தி தெரிவித்தார். இதில் ஆணையத்தின் விசாரணைக்கு  உதவி செய்வதற்காகவே மருத்துவ நிபுணர்கள் அடங்கிய எய்ம்ஸ் மருத்துவக் குழுவினர் நியமிக்கப்பட்டனர் என்றும் அவர் கூறினார்.

எனவே ஜெயலலிதாவிற்கு அப்பல்லோ மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சைகள்
சரியானதுதானா என்பதை நீதியரசர் ஆறுமுகசாமி ஆணையம் தான் தெரிவிக்க வேண்டும் என்று நியூஸ்7 தமிழிடம் தெரிவித்த புகழேந்தி, அதுதான் இறுதியான அறிக்கையாக இருக்கும் என்றார்.  இந்த விவகாரத்தில் ஆறுமுகசாமி ஆணையம் நல்ல தீர்ப்பை வழங்கும் என நம்புவதாக புகழேந்தி கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.