புதுச்சேரியில் சந்திர பிரியங்கா அமைச்சர் பதவியில் இருந்து ராஜிநாமா செய்யவில்லை, அவர் நீக்கம் செய்யப்பட்டார் என சபாநாயகர் செல்வம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் அமைச்சராக இருந்த சந்திர பிரியங்கா ராஜிநாமா செய்த போது வெளியிட்ட 2 பக்க அறிக்கையின் அனலே இன்னும் ஓயவில்லை. இதற்குள் சந்திர பிரியங்கா ராஜிநாமா செய்யவில்லை, அவரது செயல்பாடுகள் சரியில்லாத காரணத்தாலேயே அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக சபாநாயகர் செல்வம் பேட்டி அளித்துள்ளார்.
புதுச்சேரி அமைச்சராக இருந்த என்.ஆர். காங்கிரஸின் சந்திரபிரியங்கா நேற்று முன்தினம் திடீரென பதவியை ராஜிநாமா செய்தார். தனது ராஜிநாமா தொடர்பாக அனுப்பிய கடிதத்தில் ஜாதிய பாகுபாடு காட்டப்படுகிறது என்றும் தலித் பெண் என்பதால் ஒடுக்கப்படுகிறேன் என்று வேதனை தெரிவித்து இருந்தார்.
இத்தனைக்கும் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, மகளைப் போலவே வழிநடத்திக் கொண்டிருந்தவர். ஏனெனில் ரங்கசாமியின் அரசியல் சகாவான மாஜி அமைச்சர் சந்திரகாசு மகள்தான் சந்திரபிரியங்கா.
இந்நிலையில், அமைச்சர் சந்திர பிரியங்கா ராஜிநாமா செய்வதாக நேற்று முன்தினம் பதவியை ராஜினாமா செய்தார். இது தொடர்பாக தற்போது சபாநாயகர் செல்வம் அளித்த பேட்டியில், புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த சந்திர பிரியங்கா தனது துறையை சரிவர கவனிக்காததால் கடந்த வாரம் முதலமைச்சர் ரங்கசாமி அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி அதற்கான கடிதத்தை துணைநிலை ஆளுநரிடம் கொடுத்தார்.
இதை அறிந்து கொண்ட அமைச்சர் சந்திர பிரியங்கா ராஜிநாமா செய்வதாக நேற்று முன்தினம் கடிதம் கொடுத்துள்ளார். அவர் ராஜிநாமா செய்யவில்லை, அவரது செயல்பாடுகள் சரியில்லாத காரணத்தாலேயே அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என சபாநாயகர் செல்வம் தெரிவித்துள்ளார்.







