இந்தியாவின் மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027ஆம் ஆண்டு எடுக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பான அரசிதழ் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவது குறித்தான அறிவிப்பை கடந்த மாதம் மத்திய அரசு வெளியிட்டது.
மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு சேர்த்து மேற்கொள்ளப்படும் என மத்திய அரசு அறிவித்த நிலையில், 2026ம் ஆண்டு பிற்பகுதியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தொடங்கி 2028ம் ஆண்டு நிறைவடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு 10 ஆண்டிற்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு வந்த நிலையில் கோவிட் பெருந்தொற்று காரணமாக 2021ம் ஆண்டு கணக்கெடுப்பு நடைபெறவில்லை ; இதற்கு முன்பு கடைசியாக 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்துவது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய அரசு அரசுதழில் வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் 34 லட்சம் மக்கள் தொகை கணக்கெடுப்பாளர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் 1.3 லட்சம் அதிகாரிகளைக் கொண்டு டிஜிட்டல் முறையில் மக்கள் தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்துகிறது. நாட்டில் இரண்டு கட்டங்களாக மக்கள் தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த முடிவு செய்துள்ள நிலையில், நேற்றைய தினம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் இது தொடர்பான உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அதில் இந்திய பதிவாளர் ஜெனரல், மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் மற்றும் பிற மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.








