இலவச திட்டங்கள் விவகாரத்தில் மத்திய அரசுக்காக மாநில அரசுகள் ஏன் தங்கள் கொள்கைகளை மாற்ற வேண்டும்? என தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இலவச திட்டங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானது என சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசும்போது பிரதமர் மோடி கூறினார். இதையடுத்து இலவச திட்டங்கள் குறித்து பாஜகவினருக்கும் எதிர்க்கட்சியினருக்கும் இடையே கடுமையான விவாதங்கள் எழுந்துள்ளன.
டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலும் சமீபத்தில் இலவச திட்டங்களுக்கு எதிரான மத்திய அரசின் நிலைப்பாட்டை கடுமையாக விமர்சித்திருந்தார். இந்நிலையில் இது தொடர்பாக ஆங்கில ஊடகம் ஒன்றில் நடைபெற்ற விவாதம் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன், இலவச திட்டங்கள் கூடாது என மாநில அரசுகளிடம் மத்திய அரசு கூறுவதற்கு என்ன உரிமை இருக்கிறது?… எந்த அடிப்படையில் இந்த கருத்தைக் கூறுகிறது?…இலவச திட்டங்கள் கூடாது என அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ளதா? அதன் அடிப்படையில் கூறுகிறீர்களா? என்று அடுக்கடுக்கான கேள்விகளை காட்டமாக எழுப்பினார். இலவச திட்டங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானது என எந்த பொருளாதார நிபுணத்துவத்தின் அடிப்படையில் கூறுகிறீர்கள் என மத்திய அரசுக்கு எதிராக பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கொந்தளித்தார்.
இலவச திட்டங்கள் கூடாது என்பதை பொருளாதாரத்தில் பிஹெச்டி ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்தீர்களா? என்றும் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பினார். மத்திய அரசின் கஜானாவை நிரப்புவதில் தமிழ்நாடு அரசுதான் அதிக பங்கு வகிக்கிறது என கூறிய பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், இதற்கு மேல் எங்களிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறீர்கள் என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.எந்த அடிப்படையில் மாநில அரசின் கொள்கைகளை மாற்றக் கூறுகிறீர்கள்? என்றும் மத்திய அரசுக்கு எதிராக காட்டமாக கேள்வி எழுப்பினார் தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்.







